PP Letter head

பத்திரிக்கைச் செய்தி !

23.04.2021

புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே !
தியாகிகள் நம்மை வழிநடத்தட்டும் !
தூத்துக்குடி மக்களுக்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும் !

ஸ்டெர்லைட் நச்சுக் காற்றினால் தினம் தினம் செத்து மடிவதை தடுப்பதற்காக, “ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்று போராடிய துத்துக்குடி மக்களைத் காக்கை, குருவிகள் போல தமிழக அரசால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 15 பேர் தியாகிகளாகி நம் முன்னே நியாயம் கேட்டு நிற்கிறார்கள். ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கெதிராக, மத்திய அரசு, அதிகார வர்க்கத்தின் சதித் திட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

ஆனால், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக மேலாளரைப் போல உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளது, மத்திய அரசு. இது புறவாசல் வழியாக ஆலையைத் திறக்கும் சதித்திட்டமே. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை முறியடிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

படிக்க :
♦ உச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு !

♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

“ஸ்டெர்லைட்டை திறக்க மாட்டோம்” என்று சொன்ன எடப்பாடி அரசு, “ஸ்டெர்லைட்டை திறக்கலாமா” எனக் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கை என்பது, மோடி அரசின் எடுபிடியாகவே எடப்பாடி அரசு செயல்படுகிறது என்பதையும், மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான வேதாந்தாவின் முயற்சிகளுக்கு ஏவலாக, துரோகத்தனமாக எடப்பாடி அரசு செயல்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்தச் சூழலில் இன்று காலை கருத்துக் கேட்புக் கூட்டத்தில், ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் மக்களை அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டியுள்ளது தமிழக அரசு. வழக்கம் போல ஸ்டெர்லைட்டின் குண்டர் படையைக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக தீர்மானிக்க திட்டமிட்டிருந்தது. இதனை எதிர்த்து மக்கள் கேள்விக் கேட்கத் தொடங்கிய பின்னர், கல்வீச்சு, கலவரங்களில் இறங்கியுள்ளது ஸ்டெர்லைட் ஆதரவு குண்டர் படை. ஸ்டெர்லைட்டின் கூலிப்படை இப்படி கலவரத்தில் ஈடுபட்டதை வேடிக்கைப் பார்த்தது தமிழக அரசின் போலீசு.

தூத்துக்குடி மக்களை கொன்று பலரை முடமாக்கி, சொத்துக்களை சூறையாடி, நூற்றுக்கணக்கானவர்களை சிறையிலடைத்து – சித்தரவதை செய்ததுதான் இந்த எடப்பாடி அரசு. ஸ்டெர்லைட்டை திறக்க மோடி அரசு எடுக்கும் பல்வேறு சதித்தனங்களை மறைமுகமாக ஆதரவு கொடுப்பதுதான் இந்த தமிழக அரசு. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியதில் இருந்து இன்றுவரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு அனுமதி அளிக்காமல் போராளிகளை உளவு பார்த்து மிரட்டி வருகிறது இந்த கேடுகெட்ட தமிழக அரசு.

இந்த தமிழக அரசிடம் போய் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரியுங்கள் என்று கோரிக்கை வைத்து நச்சுப் பிரச்சாரம் செய்கின்றனர் சிலர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்று ஒருபுறம் பேசிக் கொண்டே, வேதாந்தாவிற்கு ஆதரவாக செயல்படும் எடப்பாடி அரசின் துரோகத்திற்கும் இந்தக் கோரிக்கைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

கொரோனா நோய்தொற்றால் மக்கள் கொத்துக் கொத்தாக சாகும் இந்த தருணத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதித்தால் என்ன தவறு என்று சிலர் கேட்கிறார்கள். ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டைத் திறப்பது ஒன்றுதான் தீர்வா, வேறுவழியே இல்லையா என்ற கேள்வியை நாம் அவர்களிடம் எழுப்ப வேண்டும்.

45 மெட்ரிக்டன் ஆக்சிஜன் வாயுவை தமிழக அரசுக்கே தெரியாமல், ஆந்திராவிற்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. மிகையாக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நாடுகளில் நமது நாடும் ஒன்று. நமது நாட்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த ஆலைகளை எல்லாம் அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து மக்களுக்கு வினியோகம் செய்யலாம்.

மேலும், ஸ்டெர்லைட் என்பது ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனமல்ல, தாமிரம் தயாரிக்கும் நச்சு ஆலை. சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எல்லாம் எதிராக நடத்தப்படும் ஆலை. இன்றுவரை, அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாத கொலைகார ஆலை. இந்த ஆலையைத் திறந்த பின்னர், ஆக்சிஜன் உற்பத்தி மட்டும்தான் நடக்கும் என்று சொன்னால், தூத்துக்குடியில் இருக்கும் விலங்குகள் கூட நம்பாது.

ஆகையால், கார்ப்பரேட்டுகள் ஆக்சிஜன் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நிலைமைக்கு முடிவு கட்டாமல், ஸ்டெர்லைட்டைத் திறக்கப் போவதாக சொல்வது என்பது பட்டவர்த்தனமான துரோகம்.

ஸ்டெர்லைட்டைத் திறந்துதான் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நிலைமையும் இல்லை.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் பலர் இறந்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு கொரானா முதலாவது அலைக்குப் பின்னர், ஓராண்டில் மத்திய மாநில அரசுகள் கற்றுக்கொண்டது என்ன, நடைமுறைப்படுத்தியது என்ன?

இவற்றையெல்லாம் கேள்விக்குட்படுத்தாமல், ஆக்சிஜன் பற்றாக்குறை, அதனால், வேதாந்தாவிற்கு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம் என்று கூறுவது என்பது வேதாந்தா கம்பெனிக்காக மக்களை பலி கொடுக்க மத்திய மாநில அரசுகள் தயாராக இருப்பதையே உணர்த்துகின்றன.

ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு பல்வேறு வகைகளில் மேற்கொள்ளப்படும் நச்சுப் பிரச்சாரங்களைப் புறம்தள்ளி கொரோனா வந்து செத்தாலும், ஆக்சிஜன் இல்லாமல் பாதிக்கப்பட்டாலும் சரி, ஸ்டெர்லைட்டின் மூலமாக கிடைக்கும் ஆக்சிஜன் தேவையில்லை என்று தூத்துக்குடி மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையை சாக்காக வைத்துக்கொண்டு மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்கும் முயற்சிகளுக்கு எதிராக தூத்துக்குடியே போர்க்களமாகி இருக்கிறது.

படிக்க :
♦ ஒக்கி புயல் : மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதான பொய் வழக்கு ரத்து !

♦ தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு? || மக்கள் அதிகாரம்

“லட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !” என்று முழங்கியது மட்டுமின்றி நடைமுறையில் செய்தும் காட்டிய தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 வயது ஸ்னோலின் வாயில் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படி கொல்லப்பட்டவர்களின் பிணத்தை வைத்துக்கொண்டு மக்களை பணியவைக்கும் வகையில் அரசு பேரம் பேசிய போது கூட, ஸ்டெர்லைட்டை மூடாமல் தியாகிகளின் உடலை வாங்க மாட்டோம் என்று உறுதியாக இருந்தார்கள்; நூற்றுக்கணக்கானோர் போலீசால் அடித்து நொறுக்கப்பட்டனர், பலர் தங்களது சொத்துக்களை இழந்தனர்; இருப்பினும், உறுதியாக நின்று ஸ்டெர்லைட்டை மூடினார்கள் தூத்துக்குடி மக்கள்.

ஆகையால், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவா! ஸ்டெர்லைட்டைத் திறக்கும் சதித்திட்டங்களைக் கைவிடு! என்று வீதியில் இறங்கிப் போராடுவது இன்றைய அவசர அவசியக் கடமையாகும். ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கூடாது என்று போராடி வரும் வீரஞ்செறிந்த தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்!

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க