PP Letter head

ஒக்கி புயல் : மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது !

2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஒக்கி புயல் பேரழிவினால் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் மாண்டு போயினர். நீரோடி வரையிலான கிராமங்களில் எங்கு சென்றாலும் இறந்து போன, காணாமல் போன மீனவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இருந்தன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மீனவர்களை மீட்டுத் தா! என்ற கோரிக்கையை முன்வைத்து சின்னத்துறை, பூத்துறை முதலான பல கிராமங்களில் தன்னெழுச்சியாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

உலகிலேயே மிகப்பெரிய கடற்படையை வைத்திருப்பதாக பெருமை பேசிக் கொண்டிருந்த இந்த அரசு மீனவர்களை காப்பாற்ற எதுவும் செய்யவில்லை; எதுவும் செய்ய முடியாமல் கிடந்தது .

இராணுவப் பெருமை எல்லாம் மக்களை காப்பாற்றுவதற்கு இல்லை, இந்த அரசு மக்களுக்கானது இல்லை என்று மீனவ மக்கள் புரிந்துகொண்டு போராடினார்கள். சுமார் பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாக குளச்சல் ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டார்கள். மண்டைக்காடு கலவரத்தால் சாதி சமயப் பிளவு ஏற்பட்ட பின்னர், சாதி சமய வேறுபாடின்றி மக்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய போராட்டம் இதுதான்.

படிக்க :
♦ அமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் – படங்கள்
♦ உண்மையைப் பேசாதே ! பத்திரிகையாளர் மீது தொடரும் மோடி அரசு ஒடுக்குமுறை !

மீனவ மக்களுக்கு மீட்புப்பணியில் உதவுவதற்காகச் சென்ற மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அன்பு, மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது, தோழர் ஆதி, தோழர் மாரிமுத்து, தோழர் கின்சன், கோவில்பட்டி தோழர் கணேசன், தோழர் முகம்மது அனஸ் ஆகியோர் நீரோடியில் ஒரு மீனவர் வீட்டில் தங்கியிருந்த பொழுது அதிகாலை 5 மணிக்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட சீருடை அணியாத போலீஸ் ஏதோ பயங்கரவாதிகளை பிடிப்பது போல அடித்து உதைத்து கைது செய்தது.

கைது செய்யப்பட்ட தோழர்களை வேனில் வைத்து கொடூரமாக தாக்கியது. அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகமுள்ள மண்டைக்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றது. அங்கே அனைத்து தோழர்களையும் ஆடைகளை கழட்டச் சொல்லி அடித்து உதைத்து சித்ரவதை செய்தது. மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது உடைகளை அகற்ற மறுத்ததால் மிகவும் கொடூரமாக கழுத்து, கை, கால் என உடலெங்கும் தாக்கப்பட்டு நிர்வாணமாக போலீஸ் லாக்கப்பில் வைக்கப்பட்டார்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் தோழர் சிவராஜ் பூபதி , வழக்கறிஞர்கள் ஹாமில்டன் அலெக்சாண்டர், தமிழ் நிதி ஆகிய வழக்கறிஞர்கள் மண்டைக்காடு காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அவர்களையும் சந்திக்க விடாமல் போலீசார் மறுத்தனர். ” டிஎஸ்பி அலுவலகத்திற்கு வாருங்கள் கைது செய்யப்பட்டவர்களை சொந்த ஜாமீனில் விட்டு விடுகிறோம்என்று சொல்லிவிட்டு நேரடியாக ரிமாண்ட் செய்வதற்கான அனைத்து வேலைகளும் செய்தனர். அரசு மருத்துவமனையில் சென்று அரசு மருத்துவரிடம் ரிமாண்ட் ஃபார் ஃபிட் (Remand for fit) என்ற சான்றிதழை பெறாமல், அரசு மருத்துவமனையில் சீட்டு வாங்கிக்கொண்டு, அந்த அரசு மருத்துவர் நடத்தக்கூடிய தனியார் மருத்துவமனையில் சென்று சான்றிதழை வாங்கினர்.

கைது செய்யப்பட்டது முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை தோழர்களை சித்திரவதை செய்த இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், ஏட்டு பீட்டர், முருகன் SSI ஆகியோர் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்தபோது, அந்த குற்றவியல் நடுவரோ அதையெல்லாம் காதில் வாங்காமல், “மெட்ராஸில் இருந்து இங்கே எதற்காக வந்தாய், கலவரம் செய்யவா? ஜெயிலுக்கு போனால் தான் நீங்கள் பிரபலம் அடைய முடியும், ஆகவே ஜெயிலுக்கு போங்கள்என்றார் . தோழர் மருது தனது கழுத்தில் அடித்ததால் கழுத்து எலும்பு உடைந்து இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அதனால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று முறையிட்ட போதும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிறையிலடைத்தார்.

அடுத்தநாள் வானொலியில் “மீனவர்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்ட பயங்கரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது” என்று அப்போது இணை அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார் .

சிறையில் இருக்கும் பொழுது தோழர் மருது , கழுத்து வலி அதிகமாக இருப்பதாக கூறியதால், அங்கே பரிசோதித்த அரசு மருத்துவர் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் போலீசார் திட்டமிட்டு பாதுகாப்புக்கு போலீஸ் இல்லை என்று கூறி அதனை மறுத்தது .

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தோழர்கள் அனைவரும் பிணையில் வெளியே வந்தாலும் சுமார் பதினைந்து நாட்கள் காலையிலும் மாலையிலும் கொல்லங்கோடு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டிய நிபந்தனைக்கு உட்பட்டனர்.

படிக்க :
♦ பாரிஸ் கம்யூன் 150 : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி || கலையரசன்
♦ சென்னை பல்கலை : மாணவியை பாலியல்ரீதியில் துப்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடு !

குழித்துறை அரசு மருத்துவமனையில் எடுத்த எக்ஸ்ரேயில் கழுத்தெலும்பு உடைந்தது தெரிந்த போதும் அரசு மருத்துவரோ கழுத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி விட்டுச் சென்றார்.

வேறு வழியின்றி ரிலாக்சேஷன் பெற்ற பின்பு சென்னையில் மருத்துவம் பார்க்கும் பொழுது கழுத்து எலும்பு உடைந்தது உறுதியானது. சுமார் மூன்று மாதங்கள் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

இதை ஒட்டி மனித உரிமை ஆணையத்திற்கும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட புகார் மனுக்கள் என்னவாயின என்பது யாருக்கும் தெரியாது .

இந்த வழக்கு விசாரணை 2021 ஜனவரி மாதத்தில் தொடங்கியது. இந்த வழக்கை வழக்குரைஞர் ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் அவர்கள் எவ்விதக் கட்டணமும் இன்றி நடத்தினார். மேலும் இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பாண்டித்துரை அவர்கள் மூலமாக தாக்கல் செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பொய் வழக்கை ரத்து செய்வதற்காக தொடக்கத்திலிருந்தே உதவி புரிந்த வழக்கறிஞர்கள் சிவராஜ் பூபதி, மரிய பால்ராஜ், ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் , பாண்டித்துரை ஆகியோருக்கு நன்றி!

எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. தோழர்களைத் தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதற்கு பதில் கண்டிப்பாக கிடைக்கப் போவதில்லை.


மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க