PP Letter headன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஓட்டு கேட்பதும் ஓட்டுப்போடுவதும் வியாபாரமானது!
உரிமையெல்லாம் குப்பைக்குப் போனது!
இம் என்றால் சிறை, ஏனென்றால் துப்பாக்கிச் சூடு!
இனியும் தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு?

நாடாளுமன்றம் முதல் ஊராட்சி மன்றம் வரை
எல்லாமே கார்ப்பரேட்டுகள் கையில்!
எதை மாற்றப் போகிறாய் நீ வைக்கும் மையில்?

கிராம சபை தீர்மானத்தை
கலெக்டர் ரத்து செய்யலாம்!
சட்டமன்ற தீர்மானத்தை
கவர்னர் செல்லாக் காசாக்கலாம்!

மாநிலங்களே சமஸ்தானங்களான பிறகு,
நாக்கு வழிக்கவா சட்டமன்றத் தேர்தல்?

சீமான்-கமலஹாசன்-சரத்குமார்-டிடிவி:
எல்லாமே ஓரணி, பா.ஜ.க.தான் பின்னணி!

தமிழகத்துக்கு ஒரு மாதத்தில் ஒரே கட்ட ‘ஜனநாயகம்’
மேற்கு வங்கத்துக்கு ரெண்டு மாத எட்டு கட்ட ‘ஜனநாயகம்’
ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடும் தேர்தல் கமிசன்,
பா.ஜ.க.-அ.தி.மு.க. கும்பலின் ஏஜெண்டே!

ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் வாங்குவதையும்
கள்ள ஓட்டையும் தடுக்க முடியாது;
கண்டெய்னர் பணத்துக்குக் கணக்கு சொல்லமுடியாது!
நேத்துவரைக்கும் லஞ்சம் வாங்குன அதிகாரி
இன்னைக்கு நேர்மையான தேர்தல் அதிகாரியாம்!
நம்பாதே, நம்பாதே, இது நேர்மையான தேர்தல் என்று நம்பாதே!

மீத்தேன், சாகர் மாலா, எட்டுவழிச் சாலை;
ஜி.எஸ்.டி., நீட், புதிய கல்விக் கொள்கை;
வேளாண் சட்டத் திருத்தம்,
தொழிலாளர் சட்டத் திருத்தம்,
மின்சார சட்டத் திருத்தங்கள்…
எதையும் தடுக்க முடியாதென்றால், தேர்தல் எதற்கு?

கோடீசுவரர்கள், கிரிமினல்களின் கூடாரமாய்
சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும்!
பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்கு
கங்காணிகளாய் கலெக்டர்கள், அதிகாரிகள்!
நீதியை விலைபேசும் நீதிபதிகள்!
வல்லுறவு – கொலை – வழிப்பறிக்கு வழிகாட்டியாய் போலீசு!
அரசும் சமூகமும் அழுகி நாறுது!
அதற்கு அத்தர் பூசத்தான் தேர்தல் வருகிறது!

சென்னையிலே அரசாங்கம், டெல்லியிலே அதிகாரம்!
பார்ப்பன மயமாக்கமே தேசியக் கலாச்சாரம்!
இதற்கு சட்டமன்றத் தேர்தல் ஒரு அரிதாரம்!
காவிதான் கொள்கை என்றான பிறகு
தேர்தல் எதற்கு, வாக்கு எதற்கு?

போலி ஜனநாயகத்தை அடித்து நொறுக்கு!
மக்கள் அதிகாரத்தைக் கட்டி எழுப்பு!

அம்பானி, அதானி சொத்துக்களைப் பறிமுதல் செய்வோம்!
கல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி,
மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத் துறைகளிலும்
தனியார்மயத்தை ஒழித்து பொது உடமையாக்குவோம்!
வளர்ச்சி என்ற பெயரில் நீர், நிலம், காற்று உள்ளிட்ட
சுற்றுச்சூழலைச் சூறையாடி நஞ்சாக்கும்
கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!

காவி – கார்ப்பரேட் பாசிசத்துக்கான
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

 

3 மறுமொழிகள்

  1. ஆளும் வர்க்கங்கள் தாங்கள் மக்களை சுரண்டுவதற்கு அங்கீகாரம் பெறுவது தான் முதலாளித்துவ தேர்தல் என்பதை எளிமையாக மக்கள் மொழியில் விளக்கி சொல்கிறது… சிறப்பு….

    “தேர்தல் புறக்கணிப்பு? தேர்தல் ஆதரிப்பு?” இந்த வரம்பிற்குள் இருந்து விவாதிப்பதால் ஒரு பலனுமில்லை. தேர்தலை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பது தான் முக்கியம். திட்டமிட்டே சில சந்தர்ப்பவாதிகள், மாஜி புரட்சியாளர்கள் வாதங்களை இந்த வரம்பிற்குள்ளே கொண்டு செல்கின்றனர். எல்லோரும் முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு தமிர்தனமாக எழுதி வருகின்றனர்.

    தேர்தலை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம், அதன் நோக்கம் ஆளும் வர்க்க சுரண்டலை மூடி மறைக்கும் நாடாளுமன்றங்கள் இதர அரசு கட்டுமானங்களை அம்பலப்படுத்தி மக்கள் முன்னால் மதிப்பிழக்க செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் பாஜக வை வீழ்த்த தேர்தலை ஆதரிக்கிறோம் என்பது, இந்த கட்டமைப்புக்குள்ளேயே மக்களை கட்டுபடுத்தி வைப்பதிலே தான் முடியும்… ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பெயரால், கீழ்த்தரமான ஆளும் வர்க்கத்திற்கான சேவை! மக்களின் விரோதிகள்!

    • /// “தேர்தல் புறக்கணிப்பு? தேர்தல் ஆதரிப்பு?” இந்த வரம்பிற்குள் இருந்து விவாதிப்பதால் ஒரு பலனுமில்லை. தேர்தலை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பது தான் முக்கியம். ///

      நீங்கள் சொல்வது படியே, இந்தத் தேர்தலை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லையே… தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறுகிறார்கள்… வழக்கமாக சொல்வதைத் தவிர இன்று பாசிச சூழலில் இந்தத் தேர்தலை எப்படி ’பயன்படுத்தப் போகிறார்கள்’ என்பதைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்களே…

      மற்றவர்கள் சொல்வது திமிர்த்தனமாக உங்களுக்குத் தெரியலாம். எனது கேள்வியெல்லாம், பாசிசத்திற்கு எதிராக தேர்தலைப் புறக்கணிப்பது என்பது கேலிக் கூத்தாக தெரியவில்லையா ? அர்த்தமற்ற கேலிக்கூத்திற்கு திமிர்த்தனம் பரவாயில்லை என்றே படுகிறது.

      தேர்தலை ஆதரிப்பது என்பது இந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே மக்களைக் கட்டுப்படுத்தி வைப்பதில் தான் முடியும் என்கிறீர்கள்.. பாசிசக் கட்டமைப்பிற்குள் நாட்டையே பாஜக இழுத்துச் செல்லும் இந்த நிலைமையில், பழைய கட்டமைப்புக்குள் இருத்தி வைப்பதே இன்றைய முக்கிய தேவையாக இருக்கும் போது, நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என காதல் படத்தில் அந்தக் காமெடியன் சொல்வதைப் போல செய்தால் தேர்தல் புறக்கணிப்பு, புதிய ஜனநாயகப் புரட்சி தான். வேற எதுவும் செய்ய மாட்டோம் என்று பேசுவது அறிவுக்குப் பொறுத்தமற்றதாகத் தெரியவில்லையா ?

      சும்மா எதைப் பற்றியும் அக்கறையில்லாமல், ஆளும் வர்க்க சேவை, மக்கள் விரோதின்னு புலம்பிக்கிட்டு இருக்கீங்க…

  2. போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்!

    பரவி வரும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி பாசிச சக்திகளை தேர்தல் மூலம் வீழ்த்தமுடியும் என்பது முடியாத காரியம்.

    மக்கள் போராட்டங்கள் மூலம் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும். அதை விடுத்து ஓட்டுக்கட்சிகளை நம்பி செல்வதென்பது படுகுழியில் விழுவதற்கு சமம்.

    மக்களை அரசியல் படுத்தி, கிளர்ந்தெழச்செய்வதற்கு பதில், அரசியல் கட்சிகளின் பின் செல்வது சரியல்ல.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க