ஸ்டெர்லைட்டின் சதிகளை நிரந்தரமாக முறியடிப்பது எப்போது?

"தமிழ்நாடு அரசே, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற தனிச்சட்டம் இயற்று" என்பதுதான் போராடும் தூத்துக்குடி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையாகும். தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாக செவி சாய்க்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்றுவதற்கு கடந்த 10.04.2023 அன்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஸ்டெர்லைட்டின் சதி நோக்கத்திற்கு துணை புரியும் வகையிலான இத்தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் எதிர்த்ததால் மாவட்ட துணை ஆட்சியர் தலைமையிலான குழுவே கழிவுகளை அகற்றும் என்று உத்தரவிட்டது மாவட்ட நிர்வாகம்.

இந்நிலையில், 12-06-2023 அன்று கொலைகார ஸ்டெர்லைட் நிறுவனமானது ஊடகங்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், Expression of Interest (EOI) இன் அடிப்படையில் கட்டட, கட்டமைப்பு பாதுகாப்பு மதிப்பீட்டாய்வு, ஆலை மற்றும் இயந்திரங்களை பழுது பார்த்தல் / புதுப்பித்தல் / மாற்றுதல், வடிவமைக்கப்பட்ட திறன் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை அடைய ஆலை மற்றும் இயந்திரங்களை இயக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்த நிறுவனங்களை அழைத்துள்ளது.

இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் தமிழ்நாடு அரசின் இறையாண்மையையும் கேலிக் கூத்தாக்கும் நடவடிக்கையாகும். அதிகாரத்திலுள்ள ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலை தனது கைக்குள் வைத்திருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற திமிர்தான் ஸ்டெர்லைட்டின் இந்த விளம்பரத்திற்கு அடிப்படையாகும்.

படிக்க : மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!

ஸ்டெர்லைட் ஆலையை சதித்தனமான வழிமுறைகளின் மூலம் மீண்டும் இயக்க முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது. 15 உயிர்களை பலி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஸ்டெர்லைட் ஆலையை மூடிய நாள் முதல் இன்று வரை மீண்டும் திறப்பதற்கான சதிகளை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். ஒருபோதும் இம்முயற்சியை தூத்துக்குடி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடும் தூத்துக்குடி மக்களோடு இருக்கிறது.

எனினும், கொலைகார வேதாந்தாவின் நயவஞ்சக முயற்சிகளை தீர்மானகரமாக முறியடிப்பதற்கு ஒரே வழி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவதற்காக தனிச் சட்டம் ஒன்றை கொண்டு வருவதுதான்.

“தமிழ்நாடு அரசே, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற தனிச்சட்டம் இயற்று” என்பதுதான் போராடும் தூத்துக்குடி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையாகும். தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாக செவி சாய்க்க வேண்டும்.

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
13.06.2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க