தமிழகத்தின் ராஜபக்சேவே! தலைநகருக்கு வராதே!!

மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 15 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை படுகொலை செய்த பயங்கரவாதியைப் பார்த்து முழங்குவோம் "தமிழகத்தின் ராஜபக்சேவே; தலைநகரத்திற்கு வராதே" என்று!

டந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து எரிக்கப்பட்டு வெளிவரும் நச்சுத்தன்மை வாய்ந்த புகையால் அந்த பகுதியில் பெரும்பாலான மக்கள் பல்வேறு வகையான நோய்க்கு பாதிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தனர்.

“லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்” என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழித்ததைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்களின் பேரணி அடைந்தபோது கண்ணீர் புகை குண்டுகளை வீசி மக்களை சிதறடித்து நிலைக் குலையச் செய்தது கார்ப்பரேட்களின் கைக்கூலியான போலீஸ்.

படிக்க : அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்! | கவிதை

அத்துடன் நில்லாது குருவியை சுடுவதுபோல் -இரக்கமற்ற மிருகம் இரையை வேட்டையாடி விழுங்குவதைப் போல்- அப்பாவி மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நரவேட்டையாடியது ஸ்டெர்லைட் அடியாட்படையான போலீஸ். முன்னணியாளர்களை குறிவைத்து கொலை செய்தது – கொலைவெறி தாக்குதல் நடத்தியது. அனில் அகர்வால் என்கிற கொலைகாரனுக்காக சொந்த நாட்டு மக்களையே படுகொலை செய்தது அன்றைய முதலாளித்துவ அடிமை அரசான அ.தி.மு.க அரசு. இதில் 15 உயிர்கள் பலியாக்கபட்டது. 40 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது, அதனால் பலர் கை, கால்களை இழந்து ஊனமாக்கப்பட்டார்கள். மேலும் 60 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

தமிழக வரலாற்றின் ஜாலியன்வாலாபாக் என்று கருதப்படும் இந்த படுகொலைக்கு காரணமான -ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான “வேதாந்தா” குழுமத்தின் தலைவனான- கொலைகாரன் அனில் அகர்வால் நமது தமிழ்நாட்டிற்கு இன்று(06.08.23) வரவிருக்கிறான்.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அளித்த 215 பக்க தீர்ப்பால் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடியது.

ஏற்கனவே, அந்நிறுவனத்தை சரியான இடத்தில் கட்டவில்லை என்றும், ஆலையில் இருந்து வெளியே வரக்கூடிய மிக மிக நச்சுத்தன்மை வாய்ந்த ஆர்சனிக், பாதரசம் போன்ற கழிவுகள் மண்ணிலும் நிலத்தடி நீரிலும் கலக்கப்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மறுபடியும் ஏதாவது ஒரு வழியில் ஸ்டெர்லைட்டை திறக்க வைப்பதற்கான வேலைகளை கொலைகார அகர்வாலும் அரசும் திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கும் இதே வேளையில் -அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்று தெளிவான தீர்ப்பு வராத சூழலில்- 4000 நபர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வோம் என்ற ஸ்டெர்லைட்டின் அறிவிப்பு, அவர்கள் ஆலையை மீண்டும் திறக்க முற்படுகிறார்கள் என்பதை உறுதிபடுத்துகிறது.

இந்தியாவில் மூன்று மாநிலங்களில் ஆலையை வைத்து மக்களின் உழைப்பை ஒட்டச்சுரண்டிய, ஆப்பிரிக்காவில் ஆலை தொடங்கி அங்கு உள்ள வளங்களையும் ஒட்டச் சுரண்டி அதனை எதிர்த்து போராடியவர்களை படுகொலை செய்த கொலையாளி அனில் அகர்வால் என்கிற பனியா, மார்வாடி குஜராத்தில் பிறந்து இங்கிலாந்தில் குடியுரிமைப் பெற்ற கார்ப்பரேட் முதலாளி எனும் கொலைகாரன் இன்று(06.08.23) சென்னையில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளி நிறுவனமான சுரனா ஹை டெக் (surana hi-tech) முதலாளியின் நூற்றாண்டு விழாவிற்கு வருகை தருவதென்பது தூத்துக்குடி தியாகிகளை இழிவுபடுத்துவதாகும்.

படிக்க : நேரலை | ஸ்டெர்லைட் கொலைகாரன் அனில் அகர்வாலே தமிழ்நாட்டிற்குள் நுழையாதே…

ஈழத்தில் இனப் படுகொலை நடத்தி ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்த இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை எப்படி தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோமோ! அதைப்போல தூத்துக்குடியில் தமிழர்களை படுகொலை செய்த கொலைகாரன் அகர்வாலை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது!

அப்படி அனுமதித்தால் தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்கள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள், மே 17 இயக்கம், மற்றும் ஜனநாயக சக்திகள் ஆகிய அனைவரும் இன்று ஸ்டெர்லைட் கொலைகாரன் அனில் அகர்வாலை அடித்து விரட்டு என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டக்களத்தில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொலைகாரனுக்கு எதிராக கிளர்ந்தெழும்.

மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 15 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை படுகொலை செய்த பயங்கரவாதியைப் பார்த்து முழங்குவோம் “தமிழகத்தின் ராஜபக்சேவே; தலைநகரத்திற்கு வராதே” என்று!

தென்றல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க