அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்! | கவிதை

லட்சம் பேர் திரண்டோம் ஆலையை மூடினோம்! கோடிகளாய் திரள்வோம்! அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்!

அவன் இடத்தை அவனுக்கே கல்லறையாக்குவோம்! | கவிதை

ஓ…  எம் மண்ணே..
கலங்காதே!
முத்து நகரில்
பதினைந்து உயிர்களை காவு வாங்கிய
கார்ப்பரேட் நரி
தலைநகருக்குள்ளே நுழைகிறதே என்று!

ஓ… எம் உறவே..
வருந்தாதே!
கல்லறைக்குப் போன பின்னும்
போராட்டம் ஓயவில்லையே என்று!

ஓ… எம் தாயின் கருப்பையே..
நடுங்காதே!
கொலைகாரன் கால் பதித்த மண்
இனி தலைமுறைக்கும் சுடுகாடு தான் என்று!

ஓ… எம் நிலமே..
பதறாதே!
உன் மேல் தெறித்த ரத்தம்
நீதி கேட்குமே என்று!

புள்ளினமே
நீரோடையே
காற்றே
மரமே
கடலே
ஒடுங்காதே!
வெடிச்சத்தம் கேட்டதும்
வீழும் உடல்கள் கூக்குரல் இட்டதும்
காதில் ஓயவில்லையே என்று!

தெறித்த ரத்தமும்
சிதறிய சதைகளும்
எழும்பிய ஓலமும் ஓயவில்லை இன்றும்!
உடல்கள் மண்ணில் புதையலாம்
உணர்வுகள் மக்களிடம் விதைகளாய்!

படைகள் புடை சூழ
அதிகாரம் தலைவணங்க
ராஜமரியாதையுடன் வந்தாலும்
அவனொரு  சர்வதேச கொலைகாரன்!
அவனொரு சர்வதேச பயங்கரவாதி!

பஞ்சத்தில் வாழ்ந்தாலும்
பட்டினியில் நடந்தாலும்
ஊண் உறுப்புகளை இழந்த
உறவுகளை இழந்த
எம் மக்களுக்கு
அவன் எதிரி!

லட்சம் பேர் திரண்டோம்
ஆலையை மூடினோம்!
கோடிகளாய் திரள்வோம்!
அவன் இடத்தை
அவனுக்கே கல்லறையாக்குவோம்!

– செங்குரல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க