விசிக, மதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தனிச் சின்னம் மறுப்பு!
பாசிச பாஜகவின் கருவியே தேர்தல் ஆணையம்!

மக்கள் அதிகாரம் கண்டனம்

27.03.2024

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஏற்கெனவே போட்டியிட்ட சின்னங்களை மீண்டும் வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பம்பரம் சின்னத்தை மீண்டும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் வழங்க முடியும் என்று கூறியது.

பானை சின்னத்தை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியானது தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகள் உட்பட ஏறத்தாழ 6 மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்காமல் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம். ஆனால் பாசிச பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளுக்கு மட்டும் தனிச்சின்னத்தை வாரி வழங்குகிறது தேர்தல் ஆணையம்.


படிக்க: பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல்


வாசன் தலைமையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சி மேற்கூறிய மூன்று கட்சிகள் வாங்கிய அளவில் ஓட்டில் குறிப்பிட்ட பங்கைக் கூட வாங்கவில்லை. எனினும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே 1996 இல் வழங்கப்பட்ட அதே சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

ஆக பாசிச பாஜகவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு மட்டும் தான் தேர்தல் ஆணையம் தனிச் சின்னத்தை ஒதுக்கும் என்ற இழிவான நிலையை ‘தேர்தல் ஜனநாயகம்’ எட்டியுள்ளது.

கடந்த வருடம் ஏதேதோ சில காரணங்களை கூறி சுமார் 540-க்கும் மேற்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். சிறிய கட்சிகளை ஒழித்துக் கட்டி பெரிய கட்சிகள், கார்ப்பரேட் கட்சிகள் மட்டுமே தேர்தல் ஜனநாயகத்தில் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இப்படிப்பட்ட தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையான தேர்தலை நடத்துமா?

பாசிச பாஜகவின் கருவியான தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. விசிக, மதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தொடர்புடைய பிரச்சினை அல்ல என்றும் இது மக்களின் தெரிவு செய்வதற்கான ஜனநாயகம் தொடர்பான பிரச்சனை என உணர வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க