பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்பு போரானது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் அரசுகளின் தீவிர எதிர்ப்புக்கு மத்தியில் 200 நாட்களுக்கும் மேலாக பாலஸ்தீனியர்களை கொன்று வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திவரும் போருக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அரசின் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் கடந்து நடைபெற்று வரும் இப்போராட்டமானது, இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிராக போராடும் மக்களுக்கும் பாலஸ்தீனிய மக்களுக்கும் நம்பிக்கையளிக்கக்கூடிய ஒளிக்கீற்றாகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7–இல் துவங்கிய காஸாவின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பானது ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதுவரை 14,500 குழந்தைகள் 8,400 பெண்கள் மற்றும் 141 பத்திரிக்கையாளர்கள் உட்பட 34,000-க்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77,000 பேர் மேல் காயமடைந்துள்ளனர். 8,000-த்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
காஸாவிற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் போர் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி அமெரிக்காவின் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதானது முக்கிய நிகழ்வாகக் கருத்தப்படுகிறது.
ஏனெனில், இஸ்ரேலின் இந்தப் போரானது அமெரிக்காவின் பதிலிப் போர். எனவே, அமெரிக்காவிலேயே இதற்கு எதிராக உறுதியான போராட்டம் வெடித்திருப்பது இந்த இன அழிப்புப் போருக்கு எதிரான முத்தாய்ப்பான நடவடிக்கையாகும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல், அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்தக் கோரியும் போராட்டப் பதாகைகளை ஏந்தியுள்ளனர். இந்தப் போரின் துவக்கம் முதல் அமெரிக்காவானது மிகப்பெரிய அளவில் இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்குச் செய்து வருகிறது. அமெரிக்கா அனைத்து வகையான இராணுவ உதவிகளையும் நிறுத்த வேண்டும், இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கி வரும் நிறுவனங்கள் மற்றும் இந்தப் போரினால் ஆதாயம் அடையக் கூடிய நிறுவனங்களில் அமெரிக்கா செய்துள்ள முதலீடுகள், பத்திரங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை அம்மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
படிக்க: அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பற்றிப் படரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்
மேலும், இப்போராட்டத்தை மட்டுப்படுத்தும் நோக்கில், இப்போராட்டத்தின் மையமாக விளங்கும் கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; யேல் பல்கலைக்கழகத்தில் 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, அமெரிக்கா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு எதிராக கைது மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஜோ பைடன் அரசு மேற்கொண்டு வருகிறது. இதனைக் கண்டித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பதற்காகவும் அம்மாணவர்கள் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டமானது, அங்குள்ள இஸ்லாமிய ஆதரவு மற்றும் யூத எதிர்ப்பு கொண்ட மாணவர்களால் நடத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்க வெள்ளை மாளிகையும், முதலாளித்துவ ஊடகங்களும் மற்றும் அமெரிக்காவிலுள்ள இஸ்ரேல் ஆதரவு குழுக்களும் அவதூறு செய்து வருகின்றனர்.
இதனை மறுக்கும் வகையில் அப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர் பிபிசி-க்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிற்கிறோம், அனைத்து மக்களுக்கும் ஆதரவாக நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
1960-களில் நடைபெற்ற வியட்நாம் போருக்கு எதிராகவும், வளைகுடா போருக்கு எதிராகவும், அமெரிக்காவில் நடைபெறும் நிறவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் மற்றும் பிற இன அழிப்புப் போருக்கு எதிராகவும் தொடர்ச்சியாக போராடியவர்கள் அமெரிக்க மாணவர்கள். அவற்றுடன் ஒப்பிடுகையில் தற்போது நடைபெறும் போராட்டங்களின் அளவும் வீச்சும் குறைவே என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர். இம்மாணவர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையிலும் கொச்சைப்படுத்தும் வகையிலும் ஜோ பைடன் அரசு அவதூறு செய்தும் போராட்டத்தை ஒடுக்கியும் வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
காஸாவில் நடக்கும் போர் தொடர்பான துயரச் செய்திகளும், புகைப்படங்களும், காணொளிகளும் ஒவ்வொரு நாளும் நம் மனதை உலுக்குகின்றன, மனித மாண்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் இந்த பதிலிப் போரானது, நமது சம காலத்தில் ஒரு இனத்தையே அழிவை நோக்கி இட்டுச் சென்றுள்ளது. அநாதையாக்கப்படும் குழந்தைகளின் கதறல்களும், தாய்மார்களின் குமுறல்களும் சொல்லி மாளாதவை. இத்தகைய உணர்வுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அமெரிக்க மாணவர்களின் போராட்டங்கள். நமது நாட்டிலும் இது போன்ற போராட்டங்களைக் கட்டியெழுப்புவதும், அவற்றை இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான உலகப் பேரியக்கத்துடன் இணைத்துக் கொள்வதுமே, காஸாவிற்கு எதிரான போரை நிறுத்துவதற்கான முயற்சியாக இருக்கும்.
பாரி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube