கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பாக
தில்லி ராம்லீலா மைதானத்தில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தை
மக்கள் அதிகாரம் வரவேற்கிறது!
31.03.2024
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் பழிவாங்கும் நோக்கில் டெல்லியின் முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எதிர்க் கட்சிகள் மீது தொடர்ச்சியான பல்வேறு தாக்குதல்களை ஏவி விடுகிறது பாசிச பா.ஜ.க.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த நாட்டையே மிகப் பெரிய பேரழிவுக்குள் தள்ளியுள்ள மோடி – அமித் ஷா பாசிச கும்பல், மக்கள் போராட்டங்களைப் பார்த்து அஞ்சுகிறது. விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டங்கள் மோடி – அமித்ஷா பாசிசக்கும்பலின் வயிற்றில் புளியை கரைப்பதால் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தோல்வி பயத்தில் இருக்கிறது. இதன் காரணமாக வெறிபிடித்த மிருகமாய் அனைத்து எதிர்கட்சிகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. தனக்கு கட்டுப்படாத கட்சிகளை ஒழித்துக் கட்டுவது, பிளவுபடுத்துவது போன்ற செயல்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மூலம் மேற்கொண்டு வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அமலாக்கத்துறை மூலம் கைது செய்வது, அமலாக்கத்துறை சோதனைகள், வருமானவரித்துறை சோதனைகள் என்று தினமும் நடந்தேறி வருகின்றன. அண்மையில் கூட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கையே முடக்கி அதன் பொருளாதாரத்தையே முடக்கி வைத்திருக்கிறது.
இந்த நிலையில் தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தப்படும் போராட்டம் மிகவும் சரியானதாகும். அதனை மக்கள் அதிகாரம் வரவேற்பதுடன் பாசிச மோடி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அனைத்திலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்று களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube