17.02.2024
தமிழ்நாடு அரசே!
கொலைகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்று!
மக்கள் அதிகாரம் வலியுறுத்தல்!
பத்திரிகை செய்தி
தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மக்களின் உயிருக்கும் கேடு விளைவித்து வரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம், மீண்டும் தூத்துக்குடியில் செயல்படுவதற்காக மேற்கொள்ளப்படும் சதி வேலையை மக்கள் போராட்டங்கள் மூலமாக முறியடிக்க வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தூய காற்று, நீர், நிலத்துக்காக போராடிய தூத்துக்குடி மக்களை மறைந்திருந்தும், வாகனத்தின் மீது ஏறிநின்றும் கொலைகார வேதாந்தா நிறுவனத்துடன் சேர்ந்து சுட்டுக் கொன்றது தமிழ்நாடு போலீசு. நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர், சிறைப்படுத்தப்பட்டனர். இதில் மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 15 பேர் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்டெர்லைட்டை மூடாமல் உடல்களை பெற மாட்டோம் என்று தியாகிகளின் உறவினர்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர். தமிழ்நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே தூத்துக்குடி மக்களின் தியாகத்துக்கு தலைவணங்கியது. அதன் விளைவாக தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடியது. தனது நிறுவனம் மூடப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம். மக்கள் அதிகாரம் உட்பட பலர் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்து ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர் முறை குற்றவாளியே என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர். 25 ஆண்டுகள் செயல்பட்ட அந்த நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுமதி பெறாமல் இயங்கியதையும் பல அபாயகரமான கழிவுகள் அனுமதிக்கப்பட்டதை விட பல மடங்கு மண்ணுக்குள் ஊடுருவி இருந்ததையும் வாதங்கள் வெளிக்கொண்டு வந்தன.
மக்கள் போராட்டங்களின் நியாயத்தையும் வேதாந்தா ஸ்டெர்லைட்டின் அநியாயத்தையும் ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் அன்றைய நீதி அரசர்கள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு, ஸ்டெர்லைட்டை மூடி தமிழ்நாடு அரசு மேற்கொண்ட செயல் சரியே என்று தீர்ப்பளித்தது.
இன்று வரை ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் கைக்கூலிகளும் அடியாட்களும் தூத்துக்குடியில் போராட்டம் நடத்துகிறார்கள். ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது என்று துண்டு பிரசுரம் கூட கொடுப்பதற்கு தூத்துக்குடியில் போலீசு அனுமதி மறுக்கிறது.
படிக்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக பதவு உயர்வு!
எனினும் என்ன விலை கொடுத்தாலும் ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். இப்படிப்பட்ட சூழலில் தான், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதன் இறுதி கட்ட விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழ்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட்டை மூட சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறு என்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒத்துக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம்; அதன் பிறகு ஆலையை திறப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆலை என்றும் காப்பர் நாட்டுக்கு தேவை என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட்டை மூடியது அரசு அல்ல; வீரம் செறிந்த தூத்துக்குடி மக்களின் தியாகமே ஸ்டெர்லைட்டை மூடியது. உச்ச நீதிமன்றம் அல்லது எந்த ஒரு அதிகார அமைப்பாக இருந்தாலும் சரி மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு முனைந்தால் அது தூத்துக்குடி மக்களின் போராட்டமாக மட்டும் இருக்காது.
உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான முயற்சிகளை தமிழ் நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube