தூத்துக்குடி மண்ணையும் மக்களையும் நாசமாக்கிக் கொண்டிருந்த கார்ப்பரேட் கொள்ளையன் அனில் அகர்வாலுக்கு சொந்தமான நாசகர ஸ்டெர்லைட் ஆலையை, தூத்துக்குடி மண்ணில் இருந்து அகற்றக் கோரி அமைதியான வழியில் போராடிய மக்களை, மே 22, 2018 அன்று, காக்காய், குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான போலீசு.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைக்காட்சி பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என தலைமைச் செயலகத்தில் ஊடகத்தின் முன் பச்சையாகப் பொய் சொன்னார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வாயில் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட தங்கை ஸ்னோலின் உள்ளிட்டு 15 பேர் இம்மண்ணில் தியாகிகளாகினர்.

கார்ப்பரேட் கைக்கூலியான பா.ஜ.க-வும் அடிமை அ.தி.மு.க-வும் கூட்டணி அமைத்து 2021-இல் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது.

அப்போது, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான குற்றவாளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 2022-இல் அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

அந்த ஆணையத்தின் அறிக்கையில், துப்பாக்கிச் சூட்டிற்குப் பொறுப்பாக, அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், எஸ்.பி. மகேந்திரன் உள்ளிட்ட 17 போலீசுதுறை அதிகாரிகள், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மூன்று வருவாய்த்துறை அதிகாரிகள் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

ஆனால், தி.மு.க. அரசோ, துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாக குற்றவாளிகளின் மீது எந்த விதமான கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, சைலேஷ் குமார் யாதவிற்கு டி.ஜி.பி-யாக பதவி உயர்வு வழங்கியது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான தனிச்சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட மக்களின் எந்த கோரிக்கையையும் தி.மு.க. அரசு தனது ஆட்சியின் கடைசிக் காலம் வரை நிறைவேற்றவில்லை.

நடிகர் விஜய், துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளின் வீட்டிற்கு அச்சமயத்தில் நேரடியாகச் சென்று அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். நடிகராக இருந்த விஜய், த.வெ.க. கட்சியைத் தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்துள்ளார்.

எட்டு வருடங்கள் ஆன பின்னும் கொலையுண்ட தியாகிகளுக்கு உண்மையான நீதி கிடைக்கவில்லை. மக்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. 15 ஸ்டெர்லைட் தியாகிகளின் இழப்பு நமது நெஞ்சை உலுக்குகிறது. ஆனால், இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் அதிகாரத்தின் தாழ்வாரங்களில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்ன விஜய் இன்று என்ன
சொல்லப் போகிறார்?

ஒரு கார்ப்பரேட் முதலாளியின் நலனுக்காக அப்பாவி மக்கள் 15 பேரை பாசிச மோடி அரசும் அடிமை அ.தி.மு.க. எடப்பாடி அரசும் சுட்டுக் கொன்றது. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியது. இன்று, அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் விஜய் என்ன செய்யப் போகிறார்?

தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகள்:

  1. சிறப்பு சட்டம் இயற்றி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்று!
  2. போராடிய மக்களைச் சுட்டுக் கொன்ற போலீசுதுறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
  3. தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைத்துக் கொடு!

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்,
9385353605.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க