தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப்படுகொலைகள்!

கடந்த 2017 முதல் 2025 வரை தமிழ்நாட்டில் 59 சாதிய ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ், தூத்துக்குடி மாவட்டம் கரடிகுளத்தைச் சேர்ந்த சஞ்சய், நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த ராமலட்சுமி, தூத்துக்குடி கயத்தாறைச் சேர்ந்த அபிசெல்வி என நான்கு ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன.

0

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகிலுள்ள தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி எஸ்தர் பாலின். இவர்களுக்கு சிவஞானம் என்ற மகனும், அபிசெல்வி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் அபிசெல்விக்கு சேலத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டு, பின்னர் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

ஹரிபிரசாத் பட்டியலின இளைஞர் என்பதை அறிந்த அபிசெல்வியின் அண்ணன் காதலைக் கைவிடும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் காதலைக் கைவிட மறுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் சிறிய எலும்பு முறிவுகளுடன் உயிர் தப்பியுள்ளார்.

இந்நிலையில் ஜூன் 9ஆம் தேதி அன்று இரவு காதலை கைவிடும்படி சிவஞானம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் “நான் அவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று அபிசெல்வி உறுதியாகக் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் சாதிவெறி தலைக்கேறி வீட்டிலிருந்த கட்டையால் அபிசெல்வியின் தலையில் அடித்துள்ளான். அத்துடன் வெறி அடங்காமல் பூச்சி மருந்தை வாயில் ஊற்றியும், கழுத்தை நெறித்தும் ஆணவப் படுகொலை செய்துள்ளான்.

இப்படுகொலையை மறைப்பதற்காக அம்மாவின் சேலையில் அபிசெல்வியை மின்விசிறியில் தூக்கில் ஏற்றியுள்ளான். பின்னர் கயத்தாறு போலீசாருக்கு அபிசெல்வி தற்கொலை செய்துகொண்டதாகப் புகார் அளித்துள்ளனர். போலீசார் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் பின் கழுத்து, மூக்கு, தலைப் பகுதியில் கட்டையால் அடித்ததற்கான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் விசாரித்ததில் ஜூன் 9 ஆம் தேதி அன்று சிவஞானம் தங்கையைக் கடையால் அடித்துக் கொன்றதும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தூக்கிட்டு தற்கொலை செய்ததாக அம்மாவும் மகனும் நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது. தற்போது போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.


படிக்க: தூத்துக்குடி கயத்தாறு அருகே மீண்டும் ஒரு ஆணவப் படுகொலை!


நெல்லை மாவட்டம் சுத்தமல்லி மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் கண்ணகி. இவர்களுக்கு ராமலட்சுமி என்ற மகளும், ராகுல், முத்துகிருஷ்ணன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். 23 வயதான ராமலட்சுமி கங்கைகொண்டான் பகுதியில் சிப்காட் தனியார் சோலார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது மகன் கோயம்புத்தூரிலும், மூன்றாவது மகன் நாங்குநேரியில் உள்ள உணவகத்திலும் வேலை பார்த்து வருகின்றனர்.

ராமலட்சுமி காதலிப்பதையும், போனில் பேசுவதையும் தம்பி முத்துகிருஷ்ணன் கண்டித்து வந்துள்ளார். கோவில் திருவிழாவிற்காக வீட்டிற்குச் சென்றிருந்த போது ராமலட்சுமி தன்னுடைய காதலனுடன் போனில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துள்ளான். ஜூன் 8ஆம் தேதி இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வாக்குவாதம் முற்றி வீட்டிலிருந்த அரிவாளால் ராமலட்சுமியை வெட்டியுள்ளான் சாதிவெறியன் முத்துகிருஷ்ணன். சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் ரத்தவெள்ளத்தில் சுயநினைவற்று கிடந்த மகளை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அம்மா கண்ணகி அளித்த புகாரின் அடிப்படையில் முத்துகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2017 முதல் 2025 வரை தமிழ்நாட்டில் 59 சாதிய ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் (16.04.2026), தூத்துக்குடி மாவட்டம் கரடிகுளத்தைச் சேர்ந்த சஞ்சய் (17.05.2026), நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த ராமலட்சுமி (08.06.2026), தூத்துக்குடி கயத்தாறைச் சேர்ந்த அபிசெல்வி (09.06.2026) என நான்கு ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன.

பணிபுரியும் இடத்திலும் படிக்கும் இடத்திலும் காதல் ஏற்படுவது இயல்பானது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிவெறியர்கள் உடன்பிறந்த அக்கா, தங்கை, மகள்களைத் தங்களின் சாதிவெறியால் படுகொலை செய்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த ஆண்டு ஆதிக்கச் சாதிப் பெண்ணைக் காதலித்ததற்காக தலித் இளைஞர் கவின் அப்பெண்ணின் தம்பி சுர்ஜித்தால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியான சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரியை நீண்ட போராட்டங்களுக்கு பிறகே போலீஸ் கைது செய்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கான நீதி கிடைக்கும் முன்பே, கைதாகியுள்ள சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ சரவணனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அதிகார வர்க்கம் சாதி ஆதிக்கவாதிகளுக்குச் சார்பாகவே நடந்து கொள்கிறது.

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் தான் அதிகளவில் ஆணவப் படுகொலைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆதிக்கச் சாதி சங்கங்களில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஆதிக்கச் சாதி இளைஞர்களிடையே சாதிவெறியைத் தூண்டி, ஆணவப் படுகொலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

எனவே, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் பசும்பொன் மக்கள் தேசம் உள்ளிட்ட ஆதிக்கச் சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும்; ஆணவப் படுகொலைக்கு எதிராக உடனடியாக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி களப் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க