31.12.2023
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக நியமனம்!
இந்த அரசு குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்காது!
பத்திரிகை செய்தி
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளக் கூடிய நபரும் அன்றைய தென்மண்டல ஐஜியுமான சைலேஷ் குமார் யாதவ் பணி மூப்பு என்ற பெயரில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தூய காற்று, நீர், நிலம் வேண்டும் என்று போராடிய தூத்துக்குடி மக்களை காக்கை, குருவிகள் போல ஒளிந்திருந்தும் வாகனம் மீதேறியும் சுட்டுக் கொன்ற தமிழ்நாடு போலீஸ், அனில் அகர்வால் என்ற கார்ப்பரேட் கொலைகாரனுக்கு சேவகம் செய்தது. ஏறத்தாழ 15 பேர் தமிழ்நாடு போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டு தியாகிகள் ஆகினர். பலர் முடமானார்கள், பாதிக்கப்பட்டார்கள். எனினும் ஸ்டெர்லைட் கார்ப்பரேட்டுக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு தலைவணங்கியது, தோள் கொடுத்தது.
அதன் விளைவாகவே வேறு வழியின்றி ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. தனது ஆலை மூடப்பட்டதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவும் மக்களின் போர்க் குணமான போராட்டங்களின் விளைவு காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் மனு செய்திருக்கிறது; விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக அருணா ஜெகதீசனின் அறிக்கை வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. ஸ்டெர்லைட்டை மூடிய வீரம் செறிந்த போராட்டங்கள் நடந்தும் சுட்டுக் கொல்லப்பட்டும் ஐந்து ஆண்டுகள் நெருங்கிவிட்டன.
அருணா ஜெகதீசன் அறிக்கை யாரைக் குற்றவாளி என்று சுட்டிக் காட்டியதோ அவர்கள் எல்லாம் பதவி உயர்வு பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இப்போது வரை ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று போராடுவதற்கும் பேசுவதற்கும் கூட தூத்துக்குடியில் உரிமை இல்லை. அரசு எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தையும் அதிகாரிகளையும் காப்பாற்றி கார்ப்பரேட்டுக்காக மட்டுமே வேலை செய்யும் என்பதை இந்த நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.
தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இப்பொழுது மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
இதோ இப்பொழுது, துப்பாக்கிச் சூடு நடந்த போது தென் மண்டல ஐஜியாக இருந்தவரும் அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றவாளி என்று சுட்டிக் காட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவை டிஜிபி ஆக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. இச்செயலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் சைலேஷ்குமார் யாதவ் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், துப்பாக்கி சூடு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321