மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகள் 8-ஆம் ஆண்டு நினைவுநாள்!

ஆண்டுதோறும் தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் தியாகம் நினைவு கூறப்படுகிறது. அந்த வகையில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக தூத்துக்குடி, சாயர்புரம் ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மே 22! இந்த நாளை தூத்துக்குடி ஒருநாளும் மறக்காது. அது வரலாற்றில் எழுதப்பட்டு விட்டது. ஆங்கிலேய அரசால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையை, சொந்த நாட்டு மக்கள் மீதே நிகழ்த்திய, அரச பயங்கரவாதத்தின் கோரமுகம் அம்பலப்பட்ட நாள்!

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று மட்டும் மக்களைச் சுடவில்லை. அரசு உருவாக்கி வைத்திருந்த போலி கட்டமைப்புகளை தங்களது 100 நாள் போராட்டத்தின் வழியாகப் புரிந்து கொண்டனர் தூத்துக்குடி மக்கள். மக்கள் போராட்டமானது தாங்கள் கட்டமைத்த எல்லையை மீறிப் போனதை உணர்ந்த ஆளும் வர்க்கம், பயிற்சி பெற்ற கொலைகாரப் படையான போலீஸ் மூலம் நிராயுதபாணியான மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 உயிர்களை வீழ்த்தி, போராட்டத்தை அடக்கப் பார்த்தது; மக்களை அடக்கியாளப் பார்த்தது. இறுதியில் அடங்கிப் போய் மண்ணைக் கவ்வியது. கொலைகாரர்கள் இன்றுவரை மக்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு இழிபுகழ் அடைகின்றனர். களத்தில் மரணித்தவர்கள் அழியாப் புகழ் அடைந்தனர்.

ஆண்டுதோறும் தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் தியாகம் நினைவு கூறப்படுகிறது. அந்த வகையில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக தூத்துக்குடி, சாயர்புரம் ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. முழக்கங்களுடன் மலர் தூவி செலுத்தப்பட்ட அஞ்சலி அவர்தம் தியாகங்களை நினைவு கூர்ந்தது. அதுமட்டுமல்ல, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான இந்த அரசு கட்டமைப்பை வீழ்த்துவதற்கான நம்முடைய பாதையை நமக்கு நினைவுபடுத்துகிறது இந்த 8-ஆம் நினைவுநாள் நிகழ்வு.

தூத்துக்குடி, தாளமுத்து நகர் பகுதியில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில்…

  • சிறப்புச் சட்டம் இயற்று, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று!
  • போராடிய மக்களைச் சுட்டுக் கொன்ற போலீசு மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
  • தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைத்துக் கொடு!

ஆகிய மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து எழுப்பப்பட்ட முழக்கம் உணர்வெழுச்சியை உருவாக்கியது.

இந்நிகழ்வில் தோழர் மின்னல் அம்ஜ்த், தேசிய செயற்குழு உறுப்பினர், AICCTU; தோழர் காந்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம்; தோழர் அர்ஜுன், நிறுவனர், தமிழர் முன்னேற்றக் கழகம்; தோழர் ராஜா, பொதுச்செயலாளர், தமிழர் முன்னேற்றக் கழகம்; தோழர் அருண், மே 17 இயக்கம்; தோழர் விஜி, வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர்; தோழர் பொன்ராஜ், தலைவர், தூய்மை பாரத ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் நலச் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் மாலை 7.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் ஜனநாயக சக்திகள், ஊர்ப் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க