தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்துக் கொள்ளலாம் என்று கடந்த ஏப்ரல் 27 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். மேலும், ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு தரக்கூடாது, மத்திய தொகுப்பிற்கே தர வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக தருகிறேன் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு விவாதங்கள் நடந்தது. அதில், ஸ்டெர்லைட்டை திறக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியது தமிழக எடப்பாடி அரசு. ஆனால், ஏப்ரல் 22 அன்று இரவு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

படிக்க :
♦ கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?

♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

அதன் அடிப்படையில் ஏப்ரல் 23 காலை 8 மணி முதல் 9 மணி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது தமிழக அரசு. குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தது. இதனால், எங்கள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர் தூத்துக்குடி மக்கள். அதன் பிறகு மக்கள் பிரதிநிதிகள் என சிலரை மட்டும் கூட்டத்திற்கு அனுமதித்து எடப்பாடி அரசு.

அக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வேதாந்தா குழுமம், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை தயாரிக்காமல், தமிழக அரசே தயாரிப்புப் பொறுப்பை ஏற்று நடத்தினால், உங்களுக்கு சம்மதமா என்ற வாதத்தை முன்வைத்தது. அதற்கு தூத்துக்குடி மக்கள் போராட்ட பிரதிநிதிகள், ஸ்டெர்லைட் எக்காரணம் கொண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றனர்.

“கொரோனாவினால் ஆக்சிஜன் இல்லாமல் நாங்கள் இறந்தாலும் பரவா இல்லை. இந்த கொலைகார நச்சு ஆலை மூலம் எங்களுக்கு ஏதுவும் வேண்டாம்” என்றும், “கொரோனா வந்தால் நாங்கள் மட்டும்தான் இறப்போம், ஆனால், வேதாந்தா மீண்டும் இயங்கத் துவங்கினால், எங்கள் வருங்கால சந்ததிகள் அனைத்தும் அழியும். எனவே வேதாந்தா எங்களுக்கு வேண்டாம். அது மூடியது மூடியதாகவே இருக்கட்டும்” என்றும் உறுதியாக கூறினார்கள் தூத்துக்குடி மக்கள்.

ஏப்ரல் 23 நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் என்னும் நாடகம்

கருத்துக் கேட்பு கூட்டம் எனும் நாடகத்தை அறங்கேற்றி ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சிக்கும் தமிழக அரசின் சதியை தூத்துக்குடி மக்கள் எதிர்த்து முறியடித்ததால், கடந்த ஏப்ரல் 26 அன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை அவசர அவசரமாக கூட்டியது எடப்பாடி அரசு. அதில் கலந்துக் கொண்ட அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கலாம் என்று கூறி தூத்துக்குடி மக்களுக்கு துரோகமிழைக்கும் விதமாக செயல்பட்டன.

மேலும், அது தொடர்பான தீர்மானங்களையும் நிறைவேற்றின. அதில் ஆக்சிஜன் மட்டும்தான் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்க வேண்டும். அதை கண்காணிக்க தூத்துக்குடி மக்கள் அடங்கிய ஒரு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். தயாரிக்கும் ஆக்சிஜன் அனைத்தையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் போன்ற சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

நாசகார ஸ்டெர்லைட் தூத்துக்குடி மண்னை மலடாக்கியது பற்றியும், தூத்துக்குடி மக்களை புற்றுநோயால் சாகடித்தது பற்றியும், அம்மக்களின் மனநிலையை பற்றியும் துளியும் அக்கறையில்லாமல் செயல்பட்டிருக்கின்றன அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக ஓட்டுக் கட்சிகள்.

ஏப்ரல் 27-ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலை திறந்து ஆக்சிஜனை தயாரிக்கலாம் என்றும், தயாரிக்கும் ஆக்சிஜனை தமிழக அரசிற்கு வழங்கக் கூடாது, நேரடியாக மத்திய அரசுக்குதான் வழக்க வேண்டும். அது பிற மாநிலங்களுக்கும் தேவைப்பட்டால் தமிழகத்திற்கு பிரித்து வழங்கும் என்றும் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

இந்தியாவில் எத்தனையோ ஆலைகள் இருக்கிறது. அவற்றிலும் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. ஆனால், மத்திய – மாநில அரசுகளும் உச்சநீதிமன்றமும் தூத்துக்குடியில் மக்களில் உயிர் தியாகத்தால் மூடப்பட்ட நாசகர ஸ்டெர்லைட் ஆலையில் இருந்துதான் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். இது ஸ்டெலைட்டை புறவாசல் வழியாகும் திறக்கும் முயற்சி என்கின்றனர் தூத்துக்குடி மக்கள்.

000

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு பிளான்ட் உள்ளது. ஆனால், அதில் தயாரிக்கு ஆக்சிஜன் மருத்துவப் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று மத்திய அரசே கூறியுள்ளது. எனவே, அங்கு தயாரிக்கும் ஆக்சிஜனை மருத்துவத்திற்கு பயன்படுத்த வேண்டுமென்றால், திரவநிலை ஆக்சிஜனாக மாற்ற வேண்டும். அப்படிமாற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு பல மாதங்கள் தேவைப்படும்.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடியிருக்கும் ஆலையில், ஆக்சிஜன் பிளான்ட் மீண்டும் மறுசிரமைப்பு செய்து இயங்குவதற்கே சில வாரங்கள் ஆகலாம் என்று கூறுகிறது வேதாந்தா.

இதன் மூலம், ஸ்டெர்லைட் ஆலை கொரோனா தொற்றுப் பரவலை வாய்ப்பாக பயன்படுத்தி, தூத்துக்குடி மக்களையே கொரோனா நோயாளிகளுக்கு எதிராக திருப்பும் நரித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறது வேதாந்த குழுமம்.

படிக்க :
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

தூத்துக்குடி மக்களின் போர்குணமாகப் போராட்டத்தின் விளைவாக 2018-ல் மூடப் பட்டிருக்கிறது நாசகார ஸ்டெர்லைட் ஆலை. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் நிம்மதிக் காற்றை சுவாசிக்க துவங்கியுள்ளனர் தூத்துக்குடி மக்கள். இந்நிலையில் ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதென்பது தூத்துக்குடி மக்களின் தியாகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.

கொரோனாவைப் பயன்படுத்தி புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சிக்கும் மத்திய, மாநில, உச்சநீதிமன்ற, வேதாந்தக் குழுமத்தின் கூட்டு சதியை முறியடிக்க மீண்டும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளார்கள் தூத்துக்குடி மக்கள். அவர்களுக்கு தமிழக உழைக்கும் மக்கள் அனைவரும் தோள்கொடுப்போம்.


சந்துரு
செய்தி ஆதாரம் : பி.பி.சி நியூஸ் தமிழ், தினகரன் நாளிதழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க