தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தின்முன் ஏப்ரல் 11 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக தூத்துக்குடியில் பொது அமைதியை சீர்குலைக்கும் வேலையில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தூத்துக்குடி நகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தனது கைக்கூலிகளை வைத்துகொண்டு விளையாட்டு போட்டி நடத்துவது; சில கிராமங்களில் ஆங்காங்கே பசுமை இட உருவாக்கம் என்ற பெயரில் கண் துடைப்புக்காக சில மரக்கன்றுகளை நடுவது; மருத்துவமனை போன்றவற்றுக்கு சில உபகரணங்களை வாங்கி கொடுத்தல், போன்ற ஏமாற்று வித்தைகளை செய்து வருகிறது.
துத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் கோவில் கொடைவிழாவிற்கு நன்கொடை வழங்குவதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமாக போராடிய மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்த முயன்று வருகிறது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆலைக்கு ஆதரவாக செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடுதல் மற்றும் பொதுமக்களிடையை அவர்களின் வறுமையை காரணம்காட்டி தன் பக்கம் இழுத்துக்கொள்ளுதல் போன்ற வேலைகளும் செய்து வருகிறது. ஆலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் மாவட்ட நிர்வாகமோ போலீசோ எதுவும் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஆலைக்கு எதிராக பேசினால், போஸ்டர் ஒட்டினால், அவர்களிடம் வழக்கு போட்டுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு செல்கிறார்கள் தூத்துக்குடி போலீசு.
படிக்க :
நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் ! | மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே ! சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !
கடந்த மார்ச் 28-ம் தேதியன்று இரவு 8 மணியளவில் நாசகார ஸ்டெர்லைட் நிறுவனம் தனது அடியாட்களை வைத்து பாத்திமா நகர் பகுதியில் மக்களுக்கு காசு கொடுப்பதற்காக ஆதார் கார்டுகளை வாங்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமககள் ஸ்டெர்லைட் ஆலையின் அடிமைகள்மீது வழக்குபதிவுசெய்து கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த பின்பு ஆலைக்கு உள்ளே உள்ள கழிவுகளையும், வேதிப் பொருட்களையும் அகற்றுவதற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது உயர் மட்ட கமிட்டியை கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் அமைத்தது. அதன் அடிப்படையில் உயர்மட்ட கமிட்டி ஆய்வு செய்து 11 வகையான கழிவுகள் மற்றும் வேதிப்பொருட்களை 90 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றுகூறி 250 பேர் ஆலைக்குள் செல்ல அனுமதி அளித்தது. ஆனால், ஆலையின் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தற்போது (4ஆண்டுகளாக) வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு வேலை செல்கின்றனர்.

This slideshow requires JavaScript.

அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்திப் நந்தூரி அவர்கள் ஸ்டெர்லைட்டின் கழிவுகள் மற்றும் வேதிப்பொருட்கள் 95 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டதாக கடந்த 2018-ம் ஆண்டு கூறினார். பணியாளர்கள் தற்போதுவரை ஆலைக்குள் சென்றுவர எவ்வித உரிய அனுமதியும் இல்லை. ஆனால், ஆலைக்குள் ஆட்கள் சென்றுவருவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போலீசுத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு அதிகாரிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்தோடு நயவஞ்சகமாக கூட்டுசேர்ந்துகொண்டு சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் பொது அமைதியை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை சிப்காட் வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும்; கழிவுகளை அகற்றுவதற்காக ஆலைக்கு உள்ளே செல்ல பணியாளர்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள், ஸ்டெர்லையிட்டின் ஆணிவேரை அறுக்காமல் விடமாட்டோம் என்று முழக்கமிட்டு ஏப்ரல் 11 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தின்முன் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
***
தூத்துக்குடியில் 14 பேர் தன்னுடைய இன்னுயிரை இழந்தும், பலபேர் படுகாயம் அடைந்தும், பல நுறு வழக்குகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்து நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளனர். ஆலையின் கொடூரத்தால் இன்று வரை அந்த பகுதிமக்கள் ஆலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
படிக்க :
ஸ்டெர்லைட் திறப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் செல்லும் வேதாந்தா : என்ன செய்யப் போகிறது தமிழக அரசு ?
ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்
துப்பாக்கிச்சூட்டை பயன்படுத்தி வெற்றி பெற்ற தூத்துக்குடி எம்.பி கனிமொழியோ, எம்.எல்.ஏ கீதா ஜீவனோ ஆலை நிறந்தரமாக மூட எந்த முயற்சியும் எடுக்காமல் ஆலைக்கு ஆதரவான மனநிலையிலே இருந்து வருகின்றனர். தாங்கள் ஆட்சி வந்தால் சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவோம் என்று கூறிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோ இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட்டுக்கு எதிரான சிறப்பு சட்டம் என்ன ஆனதோ அதுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கும் எதிரான சிறப்பு சட்டமும் ஆன கதை..
அரசையோ, அரசு அதிகாரிகளையோ நம்பாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் தொடர்ச்சியான போட்டத்திற்கு நாம் துணைநிற்க வேண்டும்.
வினோதன்

புகைப்படங்கள் : மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க