கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்! | மக்கள் அதிகாரம்

தூத்துக்குடி மக்களுக்கும் மண்ணிற்கும் தொடர்ந்து அநீதி இழைத்து வந்த வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் கம்பெனி விளம்பரத்தை பதிப்பித்து காசு பார்க்கும் மக்கள் விரோத ஊடகங்களை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

11.12.2022

கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி!
போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்!

பத்திரிகைச் செய்தி

டந்த சில நாட்களாகவே பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் கொலைகார வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்தின் விளம்பரங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

“போராட்டம் என்பது அழிவை நோக்கி, தூத்துக்குடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, பசுமையான தூத்துக்குடி – 1.25 லட்சம் மரங்கள் நடப்பட்டிருக்கின்றன” என விளம்பரப்படுத்தப் பட்டிருக்கின்றன.

ஸ்டெர்லைட் வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனம் பல ஆண்டுகளாக அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது, அபாயகரமான கழிவுகளை நேரடியாக மண்ணில் புதைத்தது, பசுமை வளையத்தை குறிப்பிட்ட அளவில் உருவாக்காமல் இருந்தது என்பது போன்ற பல்வேறு குற்றங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டது ஆகியவை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் நடந்த வழக்கு விசாரணையின்போது வெளிவந்தன.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் லட்சம் பேர் திரண்டு நடத்திய போராட்டத்தில், ஸ்டெர்லைட் நிறுவனமும் தமிழ்நாடு போலீசும் இணைந்துதான் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கடும் அடக்குமுறையை நிகழ்த்தின.


படிக்க : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால் அருணா ஜெகதீசன் அறிக்கை வெறும் கண் துடைப்பா? | மக்கள் அதிகாரம்


துப்பாக்கிச் சூடு நடந்து ஐந்து ஆண்டுகள் நெருங்கிய நிலையிலும், இப்போது வரை துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியும் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் விரோதிகள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆனால், இன்று வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று தடை விதித்து இருக்கிறது தூத்துக்குடி மாவட்ட போலீஸ். அண்மையில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து எதுவும் பேசக்கூடாது என்று தூத்துக்குடி போலீசு தெரிவித்திருந்தது. இவ்வாறு தூத்துக்குடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்பதை ஒரு நிபந்தனையாக வைத்திருக்கிறது போலீசு.

ஆனால், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தொடர் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. அதை போலீஸ் ஒருபோதும் தடுக்கவில்லை. மாறாக அதை ஊக்குவிக்கிறது.

இந்த நிலையில் சிபிஐ விசாரணை இறுதி அறிக்கையின் முடிவின் படி செயல்படுவோம் என்கிறார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர். சிபிஐயின் குற்றப்பத்திரிகையில் போராடிய தியாகிகள் தான் தவறிழைத்தார்கள் என பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சிபிஐ-ன் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றுகூறி சிபிஐ-ன் குற்றப்பத்திரிகை கிழித்தெறிந்தனர் தூத்துக்குடி மக்கள்.

ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்திய கொலைகாரர்களை கைதுசெய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மக்கள் போராடி வருகின்ற இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் தொடர்ந்து விளம்பரங்கள் ஊடகங்களிலும் கொடுக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மக்களுக்கும் மண்ணிற்கும் தொடர்ந்து அநீதி இழைத்து வந்த வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் கம்பெனி விளம்பரத்தை பதிப்பித்து காசு பார்க்கும் மக்கள் விரோத ஊடகங்களை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்திய கொலைகாரர்களை கைது செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற 12-ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த விஜயக்குமார் என்று ஒருவர் கூறிக்கொண்டு பேராசிரியர் பாத்திமா பாபுவிடம் தகாத முறையில் பேசியுள்ளார். அந்தப் பேச்சில் மக்கள் அதிகாரம் மாவோயிஸ்ட் அமைப்புடன் இணைந்து வேலை செய்வதாகவும் பொய்யாக தெரிவித்திருக்கிறார்.

மக்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில்  இப்படி ஒரு நபரை ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனமே திட்டமிட்டு ஏற்பாடு செய்திருக்கிறது.


படிக்க : தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!


சில ஆண்டுகளுக்கு முன்பு பாத்திமா பாபுவை விமர்சிக்கும் வகையில் மக்கள் அதிகாரம் பெயரிலேயே ஸ்டெர்லைட் கைக்கூலிகள் போலியான பத்திரிகை செய்தி வெளியிட்டனர் வெளியிட்டனர். இதற்கு எதிராக போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின்மீது இப்போது வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் மக்களின் போராட்டங்களை சீர்குலைத்து மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவுவதற்கான முயற்சியே ஆகும். வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட்டின் இந்த முயற்சிக்கு அரசும் தமிழ்நாடு போலீசும் உதவி புரிகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் மீதும் அதன் ஆதரவாளர்கள் மீதும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தூத்துக்குடி மண்ணையும் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்த  வேதாந்தா  ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்!

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க