20.12.2022
நம்ம ஸ்கூல் திட்டம்!
நமக்கல்ல; கார்ப்பரேட்டுக்கு கல்வியை தாரை வார்க்கவே!
பத்திரிகைச் செய்தி
முன்னாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது என்று கூறி ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்ற திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி ஆகியவற்றின் மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
படிக்க : அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்தை விரட்டியடித்தது தமிழ்நாடு! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!
இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசினால் மட்டுமே அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்தி விட முடியாது என்று கூறியுள்ளார். நாம் வாங்குகின்ற ஒவ்வொரு பொருளிலும் பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கு செஸ் வரி என்று தனியாக விதிக்கப்படுகிறது. அவ்வாறு விதிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட நிதி அனைத்துமே பள்ளிக் கல்விக்கு என்று முழுமையாக செலவிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பான வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.
எவ்வளவு செலவானாலும் சரி, எவ்வளவு கடன் ஆனாலும் சரி ஒரு அரசு என்பது கல்வியை இலவசமாக எந்த அளவுக்கு தருகிறதோ அந்த அளவுக்குத்தான் ஒரு நாடு முன்னேறும். அதை விட்டுவிட்டு மக்களை பார்த்து நீங்கள் பணம் கொடுங்கள் எங்களால் மட்டும் எதுவும் செய்ய முடியாது என்று கேட்பதெல்லாம், மொத்தமாக பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி துறையையும் தனியாரின் கீழ் கொண்டுவந்து அதனை பணம் கொடுக்கக்கூடிய லாபமான தொழிலாக மாற்றுவதே. அதுதான் கல்வி தனியார்மயத்தின் நோக்கம்.
அதற்கு தனியார்மய, தாரளமய, உலகமயக் கொள்கைகளை ஏற்ற செயல்படும் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் கொஞ்சமும் சளைத்தது அல்ல.
ஒரு சமூகம் என்ற வகையில் அரசு பள்ளிக்கு தேவையான உதவியை செய்வது என்பது வேறு; பள்ளிக் கல்வித் துறையை காப்பாற்ற வேண்டிய கடமையிலிருந்து அரசு விலகிச் செல்வது என்பது வேறு. இப்போது நடந்து கொண்டிருப்பது கல்வித்துறையை காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து அரசு கழன்றுக் கொண்டு அதன் வழியாக கார்ப்பரேட்டுக்கு பள்ளிக் கல்வியை தாரை வார்ப்பதுதான்.
எல்லாவற்றுக்கும் மக்கள்தான் படி அளக்க வேண்டும் என்றால் எதற்கு அரசு? எதற்கு வரி?
வார்த்தை ஜாலங்களுக்கு முடிவு கட்டுவோம். அரசுப் பள்ளியை காப்பாற்ற வேண்டுமென்றால் கல்வி தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு அடிப்படையாக இருக்க கூடிய மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை ஒழித்து கட்ட வேண்டும் என்பதை நோக்கி நம்முடைய அனைத்துப் போராட்டங்களும் இருக்க வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321