தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால் அருணா ஜெகதீசன் அறிக்கை வெறும் கண் துடைப்பா? | மக்கள் அதிகாரம்

தூத்துக்குடி தியாகிகளும் தூத்துக்குடி மக்களும் அவர்களுடைய சொந்த நலன் விருப்புகளுக்காகப் போராடவில்லை. மாறாக பல ஆண்டுகளாக மண்ணையும் காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடினார்கள்.

01.12.2022

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு;
கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால்
அருணா ஜெகதீசன் அறிக்கை வெறும் கண் துடைப்பா?

பத்திரிகை செய்தி

தூத்துக்குடி மண்ணையும், காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய கார்ப்பரேட் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக லட்ச மக்கள் கூடி, ஸ்டெர்லைட்டை மூடினர். கார்ப்பரேட் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, அன்றைய தலைமைச் செயலாளர் மற்றும் அன்றைய டிஜிபி ஆகியோர் கூட்டு சதி செய்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை காக்கை குருவிகளைப்போல சுட்டுக் கொன்றனர்.

அடுத்து சில நாட்கள் தூத்துக்குடியில் இணையத்தை நிறுத்தி ஏறத்தாழ காஷ்மீரைப் போல தூத்துக்குடியை மாற்றி நூற்றுக்கணக்கான பேரை கைது செய்து, அவர்களை அடைத்து வைத்து சித்தரவதை செய்தது தமிழ்நாடு போலீஸ்.

கார்ப்பரேட் வேதாந்தா கம்பெனிக்கு எதிராகப் போராடிய ஸ்னோலினின் வாயில் துப்பாக்கியால் சுட்ட போதும் மே 23 ஆம் தேதி தூத்துக்குடியில் போலீசு அடக்குமுறையை கேள்வி கேட்ட காளியப்பனை மிக அருகில் இருந்து சுட்டுக்கொன்ற போதும் பின்வாங்காத தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டமே ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடியது.

படிக்க : தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!

ஸ்டெர்லைட் கம்பெனி மூடப்பட்ட பின்னரும் பல்வேறு வகையில் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான சதி வேலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு என்ற பெயரில் தினமும் நூற்றுக்கு மேற்பட்டோர் அந்த ஆலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் சமூக விரோதிகளோடு சேர்ந்து பிரச்சாரம் செய்வதற்கு தமிழ்நாடு அரசும் போலீசும் எவ்வித தடையும் விதிப்பதில்லை. ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சமூக விரோத செயல்களை அம்பலப்படுத்தி பேசுவதற்கு கூட இன்றைக்கு வரை தூத்துக்குடி போலீசும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் எவ்வித அனுமதியும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு – முழக்கமிடும் தூத்துக்குடி மக்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் நெருங்கும் வேளையில் அருணா ஜெகதீசனின் அறிக்கை வெளியானது. மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட, தூத்துக்குடி மக்களோ துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தனர்.

ஆனால் உயிரிழந்த குடும்பங்களுக்கு கூடுதலாக சிறிது தொகை கொடுத்து விட்டு மொத்த பிரச்சினையையும் ஊற்றி மூடி விட்டது தமிழ்நாடு அரசு.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக சதி வேலை செய்த எடப்பாடி பழனிச்சாமி, கிரிஜா வைத்தியநாதன் அன்றைய டிஜிபி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுத்து அவர்கள் உடனே சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு 17.10.2022 அன்று வெளியிட்டுள்ள அரசாணை மூலம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த மண்ணுக்காக போராடிய தூத்துக்குடி தியாகிகளை கொன்றொழித்த சதிகாரர்கள் மீது எவ்விதமான கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்பதைத்தான் தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.

தமிழ்நாடு அரசு தனது அரசாணையில் வெளியிட்டதற்கு கூட நேர்மையாக இதுவரை நடந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்ட 17 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை கூட இதுவரை எடுக்கப்படவில்லை.

போலீஸ் அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் சில பேர் மீது பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் பொய்யே.

திருச்செந்தூர் அருகில் உடன்குடி என்ற பகுதியில் காட்டு மானை பிடிக்கும் பொழுது தவறுதலாக அது இறந்து போய்விட, சம்பந்தப்பட்ட வன அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு மானுக்கு இருக்கும் மதிப்பு கூட இந்த நாட்டின் மக்களுக்கு கிடையாது என்பதைத்தான் இந்த தமிழக அரசு நமக்கு  உணர்த்துகிறது. ஏனென்றால் தூத்துக்குடியின் மக்கள் கார்ப்பரேட்டுக்கு எதிராக அல்லவா போராடினார்கள்.

படிக்க : தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

தூத்துக்குடி தியாகிகளும் தூத்துக்குடி மக்களும் அவர்களுடைய சொந்த நலன் விருப்புகளுக்காகப் போராடவில்லை. மாறாக பல ஆண்டுகளாக மண்ணையும் காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடினார்கள். தூத்துக்குடி தியாகிகளின் தியாகத்தை வரித்துக் கொள்ள வேண்டும்.

வீரம் செறிந்த தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

ஆகவே, தூத்துக்குடியையும் தூத்துக்குடி மக்கள் வாழ்வையும் சீரழித்த ஸ்டெர்லைட் கார்ப்பரேட் வேதாந்தா கம்பெனிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் குற்றவாளிகள் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து கொலைகாரர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதே உடனடித் தேவை.

ஸ்டெர்லைட்டை  நிரந்தரமாக மூட சட்டம் இயற்றுவதும் இந்த மண்ணுக்காகப் போராடிய தூத்துக்குடி தியாகிகளுக்கு அரசின் சார்பில் மணிமண்டபம் அமைப்பதுமே நியாயமானதாக இருக்க முடியும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க