19.10.2022

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள்;
அன்றைய முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்  ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும்!

பத்திரிகை செய்தி

னில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியின் நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்ததற்கு எதிராக ஏறத்தாழ 30 ஆண்டுகளாகப் போராடினர்.

கடந்த 2018-ஆம் ஆண்டில்  ஸ்டெர்லைட் வேதாந்தா ஆலைக்கு எதிராக தொடர் போராட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு  அறிவித்தது.

அந்தப் போராட்டத்தின் 100வது நாளான 2018-ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்து நீதி கேட்பது என்று முடிவெடுத்தனர்.

அமைதியான முறையில் போராடிய பொதுமக்களை பூங்காவில் மறைந்திருந்து வேண்டுமென்றே திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டு  வேதாந்தா கம்பெனிக்காக படுகொலைகளை செய்தது தமிழ்நாடு போலீசு .

அன்றைய தினம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் எமது மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 13 பேரை சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் தூத்துக்குடி மக்கள் கிஞ்சித்தும் பின்வாங்காமல் ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் தான் இறந்தவர்களின் உடலை வாங்குவோம் என்று உறுதியாக நின்றார்கள். அதன் விளைவாகவே ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது என்பதே உண்மை.


படிக்க: சுடுகாட்டு ஜனநாயகம்! உறுதியாய் நின்ற மக்கள்! மக்களிடம் கற்போம்! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம்!


இது தொடர்பா நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அளித்த அறிக்கை நேற்று (18.10.2022) தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பாக,  “மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்களை பூங்காவில் இருந்து மறைந்து கொண்டு வந்திருந்த மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே  துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

மேலும் துணை தாசில்தார்களிடம் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப துப்பாக்கிச்சூடு உத்தரவை போலீசு திட்டமிட்டு பெற்றிருக்கிறது.
நெற்றியிலும் மார்பிலும் திட்டமிட்டு கொலை செய்ய வேண்டும் என்றும் நோக்கில் மிக அருகில் இருந்து போலீசால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது ” என்று கூறப்பட்டுள்ளது.

சுடலைக்கண்ணு என்ற போலீசின் துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்து விட்டதால் மட்டுமே 17 ரவுண்டுகள் சுடப்பட்டு இருக்கின்றன. ஒருவேளை அவருடைய துப்பாக்கியில் குண்டுகள் இருந்திருந்தால் இன்னும் பலரின் உயிர் பலியாகி இருக்கும் என்பதையும் குறிப்பாக இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது .

அன்றைய முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி இந்த சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறியது ஒரு பச்சைப் பொய் என்பதையும் அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு  திட்டமிட்டு நடைபெற்ற ஒரு படுகொலை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நாள் முதல் தூத்துக்குடி மக்கள் பலரை வீடு புகுந்து அராஜகமான முறையில் கைது செய்த போலீசு, கடும் சித்திரவதை செய்து  ஒவ்வொருவரின் மீதும் பல வழக்குகளை பதிவு செய்தது.
எமது மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மதுரை முதல் நெல்லை வரையிலான பல தோழர்கள் கைது செய்யப்பட்டதுடன் கடும் சித்திரவதைக்கு உள்ளாகினர்.

தூத்துக்குடி மக்கள் மீதான துப்பாக்கிச் சூட்டையும் அடக்குமுறையையும் ஆதரித்த ரஜினிகாந்த், அன்றைய பா.ஜ.க-வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட அனைவரும் மக்கள் எதிரிகளே.

000

அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் போக, எஞ்சியத் தொகையை வழங்க வேண்டும் என்பதும் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற வழிமுறைகளாகும்.


படிக்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகளான போலீஸ் உயரதிகாரிகள், கலெக்டர், துணை தாசில்தார் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்! | மருது வீடியோ


மேலும் “இந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு போதிய அளவில் போலீசிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்றும்  ஸ்டெர்லைட் போராட்டத்தில் மே 13 முதல் 22 வரை நடந்த படிப்படியான சீரான வளர்ச்சியை எடைபோட்டு யுக்திகளைக் கையாண்டு குழப்பம் விளைவிக்கும் நபர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டுமென்ற போராட்டக்காரர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அதை முறியடிக்கும் வகையில் அணுகுமுறை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது காவல்துறையின் குறைபாடு, மாவட்ட நிர்வாகத்தின் செயலின்மை, அலட்சியம் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

வேதாந்தா ஸ்டெர்லைட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர், தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட ஒட்டுமொத்த அதிகார வர்க்கமே இணைந்து தூத்துக்குடி மக்களை கொன்றொழித்தது என்பதுதான் உண்மை .

அந்தப் போராட்டத்தை உருவாக்கியதும் அந்தப் போராட்டத்தில் குழப்பத்தை விளைவித்ததும் ஸ்டெர்லைட் வேதாந்தாவும் அன்றைய அதிகாரவர்க்கமும் தான் . போராட்டக்காரர்கள் அல்ல.

தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் எந்த அளவிலும் உருவாகக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசு வன்முறை இது.  இந்த உண்மையை அருணா ஜெகதீசன் ஆணையம் பிரதிபலிக்கவில்லை.

தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமும்,  போலீசால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகளும் அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட  கைதுகள் – சித்திரவதைகளும்   இந்த அரசு கார்ப்பரேட் ஆதரவாக மக்கள் மீது நடத்திய பயங்கரவாத நடவடிக்கையே.

தனியார்மயம் – தாராளமயம்- உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளே அரசியல் சட்டங்களாகவும் பொருளாதாரத் திட்டங்களாகவும் நீடிக்கும் வரை இப்படிப்பட்ட படுகொலைகளையும் அரசு பயங்கரவாத செயல்களையும் ஒருபோதும் தடுக்க முடியாது .

ஒரு அரசின் அடக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பல்வேறு தியாகங்களின் மூலமாக மட்டுமே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை மூட முடியும் என்பதையும் தூத்துக்குடி மக்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

அன்றைய தினம் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ்நாடும்  ஒருங்கிணைந்து நின்றே அந்த அரசு பயங்கரவாதத்தை முறியடித்தது என்பதை எப்போதும் மறக்க முடியாது.

ஆர்எஸ்எஸ்-பாஜக அம்பானி – அதானியின் பாசிச சூழலில் தூத்துக்குடி மக்களின் போராட்ட பாரம்பரியத்தை நாம் வரித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் என்று அருணா ஜெகதீசன் அறிக்கை குறிப்பிட்டுள்ள 17 பேர் தவிர
அன்றைய முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,  டிஜிபி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்  ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி மாபெரும் வரலாற்றைப் படைத்த தூத்துக்குடி தியாகிகளின் புகழ் ஓங்குக!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் வெல்க!


தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க