சுடுகாட்டு ஜனநாயகம் ! உறுதியாய் நின்ற மக்கள் ! மக்களிடம் கற்போம் ! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம் !
யர் காவல்துறை அதிகாரிகள் மே-20 முதல் 22 காலை வரை “ஆர்ப்பாட்டம் வேண்டாம், ஏதாவது ஹால் மீட்டிங் நடத்துங்கள், 2 நாட்கள் கழித்து வெளிநிகழ்ச்சி வைத்துக்கொள்ளுங்கள்” என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே இருந்தார்கள். நமது கூட்டமைப்பினர் உடன்படவில்லை.
19-ம் தேதி நடந்த சந்திப்பில் நெல்லை மண்டல DIG அவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் “கைது செய்யப்படுவீர்கள்” என்றார்.
ஆலை எதிர்ப்பு முன்னணியாளர்களின் நடமாட்டம் இரு நாட்களுக்கு முன்னரே தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. 21-ம் தேதி இரவு தூத்துக்குடியின் பல பகுதிகளுக்கு சென்ற போலீஸார் “தெருக்கள் / ஊர்களுக்குள் மட்டுமே நடத்திக்கொள்ள வேண்டும், மெயின்ரோட்டில் அஞ்சலி நடந்த அனுமதி கிடையாது, மக்கள் கூட்டமைப்பு நடத்துகிற ஆர்ப்பாட்டத்திற்கு யாரும் செல்லக்கூடாது” என்றும் வற்புறுத்தினர்.
மே 22, காலையில் நாம் அஞ்சலி செலுத்தப்போகும் சுடுகாட்டை போலீஸார் மறித்து காக்கி / கருப்பு உடையில் பயம் காட்டினர். அதைப் பார்த்த சாதாரண எந்த குடிமகனுக்கும் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த செல்லும் எண்ணமே வராது. இப்படித்தான் இருந்தது தமிழக அரசின் சமூக நீதி.
போலீஸார் அஞ்சலி செலுத்த வந்தவர்களை மிரட்டிக் கொண்டும், விரட்டிக்கொண்டும் இருந்தார்கள். தூத்துக்குடி – திருநெல்வேலி பிரதான சாலையில் வட பக்கம் சுடுகாடு. தென்பக்கம் சிதம்பர நகர் ஆர்ப்பாட்ட திடல். ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வேண்டுமெனில் போலீஸார் ரோட்டின் தென்பக்கம்தான் நின்றிருக்க வேண்டும். ஆனால், பெரும் போலீஸ் படை கல்லறைக்கு சென்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதையே தடுப்பது என்ற எண்ணத்தில் சுடுகாட்டை மறித்து நின்றது.

பிரதான ரோட்டில் செல்வோர், வருவோர் அஞ்சலி செலுத்த வந்த நம்மையும் பார்த்து விடாதபடி சுடுகாட்டிற்குள் தள்ளுவதையே குறியாக இருந்தனர். பின்னர் அங்கிருந்து முழக்கமிட்டவாரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பரத்ராஜ், கார்த்திக் கல்லறைகளுக்கு சென்று மாலை, மலர்தூவி அஞ்சலி செலுத்தி உறுதிமொழி செலுத்தப்பட்டது. உறுதிமொழி என்றால் அத்தனை உணர்வு பூர்வமானது.
அடுத்த நொடியில் சுற்றி வளைத்த காவல்துறை சுடுகாட்டிலேயே கலைந்துபோக கூறியது. நமது தரப்பில் மறுத்து, முழக்கமிட்டு சுடுகாட்டு வாசலை தாண்டுவதற்குள், வழி மறித்தனர் இரண்டு SP-க்களும், அவர்கள் தலைமையிலான காவல் படையினரும். பாளையங்கோட்டை மெயின்ரோடு வரை தான், சுமார் 100 மீட்டர் வரை முழக்கமிட்டுச் செல்ல அனுமதி கேட்டோம். அனில் அகர்வாலின் குரல் தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகைகளின் மூலம் கண்டம் விட்டு பாய்கிறது. ஆனால், எங்கள் குரல் சுடுகாட்டிற்குள் அடங்கி போகவேண்டும் என்றால் அதற்கு முடியாது. காவல் துறைக்கு அடிபணியப் போவதில்லை என்று மக்களும் உறுதியாக நின்றார்கள்.
CBI-க்கு எதிராகவும், கொல்லப்பட்டவர்களுக்கு எங்கே நீதி? என்ற மக்களின் குரலும் மெயின்ரோட்டின் காதில் விழக்கூட உரிமை இல்லை. கைது செய்யப்படுவது உறுதி என்றானதும் சுடுகாட்டு வாசலில் வைத்தே சி.பி.ஐ-ன் குற்ற அறிக்கையை மக்கள் ஊடகங்கள் முன்பு கிழித்தெறிந்து அம்பலப்படுத்தி முழுக்கமிட்டனர்.
அடுத்து நொடி சுடுகாட்டில் வைத்து மக்களை போலீஸார் கைது செய்தனர். முழக்கமிட்டவாறு இருந்த பெண்கள், ஆண்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றி சிதம்பரநகர் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
மண்டபத்தில் ஒவ்வொருவராக ஸ்டெர்லைட் மூடப்பட்ட பின்னரும் 4 ஆண்டுகள் இடைவிடாத போராட்டத்தையும், தங்களின் அனுபவத்தையும் பகிர்ந்தனர். மகிழ்ச்சி-துக்கம்-கோபம்-கண்ணீர் என வெளிப்படுத்தினர்.
காலையில் கூட நிறைய பேர் சாப்பிடாமல் வந்திருந்து கைதாகி இருந்தனர். நேரம் 1.30-க்கு போலீஸார் சாப்பாடு ஏற்பாடு செய்கிறோம், கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால், மக்கள் “போலீஸ் கையால் வாங்கி தரும் சாப்பாடும், தண்ணீரும் வேண்டாம்” என்றனர். இதை காவல்துறையினரிடம் தெரிவித்தோம். அவர்கள் “முதலில் நாங்கள் வாங்கி வருகிறோம், இல்லையென்றால் அது எங்கமேல தப்பாயிரும்” என்று கூறி சிறிது நேரத்தில் பெரிய அட்டை பெட்டியில் ஏற்பாடு செய்த சாப்பாட்டு மண்டபத்திற்குள் வாசனையோடு வந்தது. காய்கறி பிரியாணியாம். தரமான ஓட்டலில்தான் வாங்கி வந்ததுபோல தெரிந்தது.
மக்களின் முகத்தில் பசி படர்ந்து, உடல்சோர்வாகத்தான் இருந்தது. ஆனால் சாப்பிட மாட்டோம் என்பதில் உறுதியாய் இருந்தனர். போலீஸார் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் இசையவில்லை. இரண்டாவதாக மைக் ஸ்பீக்கரோடு வந்து DSP, ASP சாப்பிடும்படி அறிவித்தார்கள். “4 வருஷத்துக் முன்னாடி இதே தேதியில எங்க புள்ளிங்கள கொன்ன கொலைகாரர்கள் கையால் எதையும் திங்க மாட்டோம், குடிக்க மாட்டோம்” என்றபோது அவர்களில் ஒரு சிலர் துள்ளகத்துடிக்க படுகொலை செய்யப்பட்டதை கூறி அழுது கொண்டு இருந்தார்கள். பிரியாணியின் வாசனையும் காவல்துறையின் வேண்டுகோளும் மக்களின் பசியோடு மோதி தோற்றது. “வயசானவங்க இருக்குறீங்க, நீங்களாவது சாப்பிடுங்க” என்றனர். “வயசானவங்கன்னு அரெஸ்ட் பண்ணும்போது உங்களுக்கு தெரியலையா” என்றார்கள். கல்யாண மண்டபம் கலகலத்தது.
இந்த தகவல் வெளியில் தெரிந்து பின்னர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், மாணவர்கள் உடனடியாக அன்பும், அக்கரையோடும் ஏற்பாடு செய்த உணவையும், தண்ணீரையும் குடித்தனர்.
போலீஸார் இரவு 7.00 மணியாகியும் மண்டபத்திலிருந்து கைது செய்தவர்களை வெளியேவிடவில்லை. கோபமடைந்த மக்கள் “6 மணிக்குள் விடுவார்கள், மணி இப்போது 7.00 ஆகிறது, 7.30-க்குள் விடவில்லை என்றால் வெளியேபோக மாட்டோம்” என்றார்கள். அழைத்துச் செல்ல பஸ் லேட்டாகிறது என்றதும், “அரெஸ்ட் செய்ய வண்டி உடனே வருது, இப்ப மட்டும் வண்டி வராதா..?, 5 நிமிஷத்தில் வண்டி வரலைனா நாங்க மண்டபத்தை விட்டு வெளியே போக மாட்டோம்” என்று கோபத்தை வெளிப்படுத்தினார்கள். 7.30-க்கு போலீஸ் வாகனம் வந்து கூட்டிச் சென்று அவரவர் பகுதிகளுக்கு சென்றனர்.
***
2018-ல் தேடித்தேடி பொதுமக்கள் / இளைஞர்களை வேட்டையாடிய போலீஸ், 2022-ல் மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்புகள் ஒட்டிய நினைவஞ்சலி போஸ்டர்களை டவுன், கிராமம் என தேடித்தேடி கிழித்து ஆத்திரத்தை தணித்துள்ளனர். பண்டாரம் பட்டியில் இதை நேரில் பார்த்த மக்களின் கண்களில் தப்பிக்க பார்த்த போலீஸை மக்கள் விரட்டியுள்ளார். பின்னர் உயரதிகாரிகள் மக்களிடம் பேசி மன்னிப்பு கேட்டுள்ளார்கள்.
மடத்தூர் மக்கள் கூடுதலாக ஒரு நினைவஞ்சலி பேனர் முக்கிய சந்திப்பில் வைத்ததை எடுக்க சொல்லி “விளம்பரத்துக்கு பேனர் வைக்கக் கூடாது” என்ற போலீஸை “நீங்கள் காக்கி உடுப்பு போட்டு நடமாடுவது கவுரத்திற்கும், உங்களை போலிஸுன்னு மக்கள் தெரிஞ்சுக்கிடனும்னு விளம்பரம் தானே, அதுபோல நாங்களும், இந்த போராளிங்க எங்களுக்காக செத்தாங்கன்னு உலகத்துக்கு தெரிய விளம்பரம் செய்றோம், வேலையை பாத்துட்டு போங்க சார்” என்று போலீஸை மக்கள் கையாண்டு கண்டித்துள்ளனர். இன்னும் ஒரு சில பகுதிகளில் நினைவேந்தல் பேனரை போலீயே மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தூக்கிச் சென்றுள்ளார்கள்.
மே 22, 2018-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்ற பொதுமக்களை வெளியே விடாமல் கொலைவெறியில் சுட்டுக் கொன்ற போலீஸ் மே 22, 2022-ல் சுடுகாட்டின் உள்ளே அஞ்சலி செலுத்த சென்ற பொதுமக்களை வெளியே விடாமல் கைது செய்துள்ளது.
அஞ்சலி செலுத்தவும், அரை மணிநேரம் பொதுவெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் போலீஸுக்கும், திமுக அரசுக்கும் என்ன இழப்பு?
15 உயிர்களையும், 100-க்கும் மேற்பட்டோர் கை, கால் உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கு எங்கே நீதி?
நீதியைப் பெறாமலும்,
ஆலையை மூடாமலும்,
தூத்துக்குடி தூங்காது….
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

 

1 மறுமொழி

  1. விடியல் வரும் என்று ஏமாற்றியவர்களும் கயவர்களே ! இனி மேல் தான், மக்கள்.. அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும்..

    – மருது பாண்டியன் –
    பத்திரிகையாளர்
    போடிநாயக்கனூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க