டந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு விசாரணை அறிக்கைகள் விவாதிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு வெளியாகி இருக்கின்றன. ஒன்று, கார்ப்பரேட் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை. இன்னொன்று, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவியும் பாசிஸ்டுமான ஜெயலலிதாவின் ‘மர்ம’ மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி  ஆணையத்தின் அறிக்கை.

ஜெயா எப்படி செத்தால் நமக்கென்ன என்று கடந்து செல்லாமல், அவரது மரணத்திலுள்ள மர்மத்தைக் கண்டறிய வேண்டுமென்று பலரும் கூப்பாடு போட்டதன் விளைவாகவும், அதிமுகவில் ஒருவரையொருவர் எப்போதும் காலை வாரி விடுவதற்காகவும், மக்களைப் பரபரப்பாக எப்போதும் வைத்திருப்பதே சுரண்டலின் தேவை என்பதற்காகவும் மட்டுமே அமைக்கப்பட்டது ஆறுமுகசாமி ஆணையம்.

ஆனால், அருணா ஜெகதீசன் ஆணையம் அப்படி பரபரப்புக்காக அமைக்கப்பட்டதல்ல. தூத்துக்குடியின் நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி மக்களுக்கு புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களைத் திணித்து வந்தது அனில் அகர்வால்-ன் வேதாந்தா ஸ்டெர்லைட் கம்பெனி. ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் நடத்தி வந்த போராட்டங்களின் ஒரு கட்டமே, “லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மே 22, 2018 அன்று நடத்திய ஆட்சியர் அலுவலக முற்றுகை. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இனி யாரும் போராடக்கூடாது என்பதற்காக, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி, டிஐஜி, ஐஜி, தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி உள்ளிட்டோர் திட்டமிட்டு, மே 22 அன்றும் அதைத்தொடர்ந்த நாட்களிலும் கொடும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை ஏவினர். அதையே தூத்துக்குடி மாடல் என்று சொல்லுமளவுக்கு கொடூரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.

படிக்க : தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

அமைதியாகப் போராடிய மக்கள் மீது பூங்காவில் மறைந்திருந்தும், வாகனங்கள் மீதேறியும், மிக அருகில் இருந்தும்,  துப்பாக்கியால் சுட்டும், அடித்தும் கொன்றது கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டின் கூலிப்படையான போலீசு. ஸ்டெர்லைட்டை மூட வேண்டும், அரசு பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி, கொல்லப்பட்ட தியாகிகளின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர் தூத்துக்குடி மக்கள். அவர்களுக்கு ஆதரவாக மொத்த தமிழ்நாடும் திரண்டிருந்தது. இதனால் வேறு வழியின்றி அமைக்கப்பட்டதுதான் அருணா ஜெகதீசன் ஆணையம்.

ஆறுமுகசாமி ஆணையமும் அருணா ஜெகதீசன் ஆணையமும் அடிப்படையில் வெவ்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டவை. முன்னது அரசியல் சதுரங்கத்துக்காகவும் பின்னது மக்கள் போராட்டங்களின் நிர்ப்பந்தங்களால் அமைக்கப்பட்டதுமாகும். அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மே 18, 2022 அன்றும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஆகஸ்ட் 27, 2022 அன்றும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் இரு அறிக்கைகளையும் ஒரே நேரத்தில் வெளியிட்டதன் மூலம், கார்ப்பரேட்டுக்காக அரசு நடத்திய பயங்கரவாத நடவடிக்கைகள் – அதன் பரிமாணங்கள் – சதிகள் அனைத்தும் மக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டன. பாசிச ஜெயாவின் மரணம் குறித்த கிசுகிசுக்களால் தூத்துக்குடி தியாகிகளின் மரண ஓலம் அடக்கப்பட்டு விட்டது.

***

அரசால் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள், பொதுவாகவே ஒரு பிரச்சினையை மூடி மறைப்பதற்கும் தள்ளிப்போட்டு மக்களின் நினைவிலிருந்து மறக்கடிப்பதற்குமானவையே. இதுவரை பல விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டிருப்பினும், அனைத்து ஆணைய அறிக்கைகளும் அரசால் வெளியிடப்படவுமில்லை; அவ்வாறு வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளையும் அரசு நிறைவேற்றிடவுமில்லை; வெளியிட்டே தீர வேண்டிய அவசியமும் இல்லை என்பதால்தான் விசாரணை ஆணையங்களே அமைக்கப்படுகின்றன.

நான்காண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும்கூட தானாக வெளியாகிவிடவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த விசாரணை அறிக்கையை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் சில பகுதிகளை ஊடகவியலாளர் இளங்கோவன் ராஜசேகரன் வெளிக்கொணர்ந்தார். ஆகையால், வேறு வழியின்றியே அந்த விசாரணை அறிக்கை சட்ட மன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறது.

அருணா ஜெகதீசன் அறிக்கையிலும், அந்த அறிக்கை வெளிவந்த பின்னர் நடத்தப்பட்ட விவாதங்களிலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தனிப்பட்ட சில போலீசு உயரதிகாரிகளின் பொறுப்பற்ற அல்லது குரூரமான நடவடிக்கையாக மட்டுமே சித்தரிக்கப்படுகின்றது.  ஆனால், கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக இனி தமிழ்நாட்டில் எவ்விதப் போராட்டமும் நடைபெறக்கூடாது என்பதற்காக, ஒட்டுமொத்த அரசு எந்திரமே மேற்கொண்ட அரசு பயங்கரவாத நடவடிக்கைகளின் தொடக்கம்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பதை அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளன. தூத்துக்குடியை போலீசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நூற்றுக்கணக்கானோரை வீடு புகுந்து கைது – சித்திரவதை செய்தது; கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரின் மீதும் நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்தது; இப்போதுவரை ஸ்டெர்லைட் ஆதரவு பிரச்சாரத்துக்கு அனுமதி; ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு ஆகிய தொடர் நடவடிக்கைகள் வெறும் வன்முறை மட்டுமல்ல, இது அரசு பயங்கரவாதம் என்பதற்கான சாட்சிகளே.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் மூலம், போலீசின் திட்டமிட்ட துப்பாக்கிச்சூடு, எடப்பாடி பழனிச்சாமி, ரஜினி உள்ளிட்டோரின் பொய்கள் ஆகியவை அம்பலத்துக்கு வந்திருக்கின்றன. அன்றைய ஐஜி, டிஐஜி உள்ளிட்ட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கை பரிந்துரை செய்திருக்கிறது. 4 போலீசுக்காரர்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அன்றைக்கு டிஐஜி, ஐஜி, எஸ்.பி ஆக இருந்து தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளவர்களிடம் கருத்துக் கேட்கப்படும் என்றும் அரசு கூறியிருக்கிறது.

திடீரென்று நடைபெற்ற போலீசின் தாக்குதலாக இருப்பின், அதைக் கையாளும் வழிமுறை வேறு. ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடோ அரசு பயங்கரவாத நடவடிக்கையாகும்.

2009 தமிழீழப் படுகொலை தொடர்பாக யாரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க முடியும்? மஹிந்த ராஜபக்சே போய் ரணில் ஆட்சிக்கு வந்தாலும்கூட சிங்கள இனவெறி அரசு, அப்படுகொலைகளுக்காக யாரையும் பலி கொடுக்காது. ஏனெனில் அது சிங்கள இனவெறி அரசு, ஏகாதிபத்திய நாடுகளுடன் இணைந்து தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலை. அது போலத்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடும். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக அரசே முன்னின்று நடத்திய பயங்கரவாதப் படுகொலைக்கு அந்த அரசால் எப்படி நீதி வழங்க முடியும்?

***

“போலீசை தாக்கிய பின்னர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர்” என்று கூறிய ரஜினி; “13 பேர் சுட்டுக் கொல்லப்படவில்லை என்றால் ஆயிரம் பேர் இறந்திருப்பார்கள்” என்று கூறிய அன்றைய பிஜேபியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்; “ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்” என்று அண்மையில் பேசிய அர்ஜுன் சம்பத், இந்து முன்னணி உள்ளிட்ட அனைவருமே இந்த அரசு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்களே.

ஸ்டெர்லைட் கார்ப்பரேட் ஆலைக்காக மக்கள் மீது அரசு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டம் இயற்றப்பட வேண்டும். போலீசால் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு அரசால் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும். இவைகளெல்லாம் சாதாரணமாக கோரிக்கை வைத்து பெற்றுவிடக்கூடிய விசயங்கள் அல்ல. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வெளிவந்த போது தமிழ்நாட்டில் மாபெரும் போராட்டங்கள் கிளர்ந்து வெடித்திருக்க வேண்டும். அப்போராட்டத் தீயின் சூட்டில் அதிகாரவர்க்கம் குலைநடுங்கி  தூத்துக்குடி அரச பயங்கரவாத குற்றவாளிகளைத் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டிலோ ஜெயலலிதாவின் மர்ம மரண கிசுகிசுக்கள் அல்லவா விதந்தோதப்பட்டுக் கொண்டிருந்தன. மயான அமைதியைக் கூட சிறு ஒலிக்கீறல் தகர்த்துவிடும். ஆனால் மர்மம் – பரபரப்பு என்ற சாக்கடைச் சகதிக்குள் நம்மை மூழ்கடிக்கும் ஆளும்வர்க்க ஊடகங்களை என்ன செய்வது? செவிட்டில் அறைவதைத் தவிர..

படிக்க : மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !

தூத்துக்குடியில் நடைபெற்றது வன்முறை மட்டுமல்ல; அது ஸ்டெர்லைட் என்ற கார்ப்பரேட்டுக்காக இந்த அரசு நடத்திய பயங்கரவாதப் படுகொலை. இதைத்தான் நாம் தமிழ்நாட்டு மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

தூத்துக்குடி தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்தும், தூத்துக்குடி மக்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டும் நமக்கு பலவற்றை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

பற்றிப்படரும் பாசிசச் சூழலில் நம்பிக்கை ஏதுமற்ற தருணத்தில்தான், “லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து மே 22 துப்பாக்கிச்சூட்டையும், அதற்கு பின்னாலான அனைத்து அடக்குமுறைகளையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

கார்ப்பரேட் வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு அஞ்சாமல் வாயிலும் மார்பிலும் குண்டுகள் தாங்கிய தூத்துக்குடி தியாகிகளே நம்முடைய தியாகச்சுடர்கள். சொல்லொணா துயரங்களோடு, உறுதியாக அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொண்ட தூத்துக்குடி மக்களே நம்முடைய நாயகர்கள். அவர்கள் கற்றுத்தந்த மக்கள் ஒற்றுமையை, கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்ட வழியை நெஞ்சிலேந்தி, காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பதே தற்போதைய தேவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க