நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம் | அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு அறிக்கை!

நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை அரசு கைவிடும் மற்றும் அதிரடியாக தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம்,  உடனடியாகத் திரும்பப் பெற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு வலியுறுத்துகிறது.

நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை அரசு கைவிடும் மற்றும் அதிரடியாக தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம்,  உடனடியாகத் திரும்பப் பெற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு வலியுறுத்தல்

தமிழக அரசாங்கம்  நம்ம ஸ்கூல் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்த கையோடு அதை அதிரடியாக நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக தனியார் தொழில் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை நேரடியாகத் தத்தெடுக்கலாம் அல்லது பல்வேறு கட்டுமான அமைப்புகளை ஏற்படுத்தித் தரலாம் அல்லது முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு உதவலாம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தனியார் நிதிப் பங்களிப்பபைப் பெற்று அரசுப் பள்ளிகளையும் அதன் கட்டுமானத்தையும் பலப்படுத்தப் போவதாகவும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கப் போவதாகவும் காண்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளுக்கு நிதி அளிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கே உள்ளது என்பது ஒருபுறமிருக்க, தனியார் நிதிப் பங்களிப்பை அரசாங்கம் கோருவதை ஒரு வாதத்திற்காக நாம் ஏற்றுக் கொண்டாலும் கூட, அந்நிதிப் பங்களிப்பை பெற்று அதை அரசாங்கமே நிர்வாகம் செய்யும் இடத்தில் நிலைமை வேறு. ஆனால் நம்ம ஸ்கூல் திட்டத்தில் தனியார் நிதிப் பங்களிப்பை நிருவகிக்கக்கூடிய பொறுப்பையும் தனியார் கையில் கொடுத்திருப்பதானது அரசுப் பள்ளிகளை நிச்சயமாக தனியார்மயத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பது கேள்விக்கு அப்பாற்பட்ட வகையில் இருக்கிறது.

படிக்க : அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி

மேலும், பல ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வகுப்பறைகள் கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளி கட்டுமான அமைப்புகள் சிதைவுற்றிருக்கும் நிலையில், தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தற்காலிகப் பணியில் ஆசிரியர்கள் பணியாற்றிவரும் நிலையில், நிரந்தர அடிப்படையில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்யாத நிலையில், அவற்றையெல்லாம் சரி செய்ய அரசு போதுமான நிதி ஒதுக்கி ஆவண செய்யும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்திருந்த வேளையில்… அரசுப் பள்ளிகளைக் கைகழுவி படிப்படியாகத் தனியார்வசம் ஒப்படைக்கக் கூடிய விதத்தில் நம்ம ஸ்கூல் திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

1990 களில் கொண்டுவரப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் (SSA) உள்ளிட்டவை பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership – PPP) என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்க பல்வேறு செயல்முறை நடவடிக்கைகளை ஏற்கனவே தொடர்ந்து எடுத்து வந்தன.

அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 இல் கூறப்பட்டுள்ளது போல், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தனியார் சமூக பங்களிப்பு (Corporate Social Responsibility) என்ற வகையில் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கலாம் என்றும் முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிக்குப் போதுமான நிதி உதவி செய்யலாம் என்று அதே அம்சங்களைப் பின்தொடர்ந்து நம்ம ஸ்கூல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.

இந்த நம்ம ஸ்கூல் திட்டம், மக்கள் வரிப்பணத்தில் இதுநாள் வரை செயல்பட்டு வந்த அரசுப் பள்ளிகள் மீதான இறுதி தாக்குதல் ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் ஒரே நம்பிக்கை ஆதாரமாகத் திகழ்ந்துவரும் அரசுப் பள்ளிகளைப் படுவேகமாகத் தனியார்மயமாக்கும்  இந்த முயற்சியை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு குழுவின் தமிழ்நாடு பிரிவு வன்மையாகக் கண்டிக்கிறது. இத்திட்டத்தைத் தமிழக அரசாங்கம் உடனடியாகத் திரும்பப்பெறவும் வலியுறுத்துகிறது.

தமிழகத்தை ஆளும் திமுக அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கை 2020 எதிர்ப்பதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தது. அதற்கு மாற்றாக, பொதுமக்களின் நிர்ப்பந்தத்தால், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு உயர்மட்டக் குழுவையும் நிறுவியது. அந்த உயர்மட்டக் கல்விக் குழு ஒரு மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கித் தருவதற்கு முன்பாகவே தேசிய கல்விக் கொள்கை 2020 இன் பல்வேறு அம்சங்களான இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், திறன் மேம்பாடு என்ற நான் முதல்வன் திட்டம் போன்றவற்றைப் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் இடையில் தமிழக அரசாங்கம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு மத்திய பாஜக அரசாங்கம் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை 2020ஐ இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலத்தை விடவும் தமிழகத்தில் படுவேகமாகத் திமுக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

படிக்க : தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மக்களின் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காகப் போராடிய மாபெரும் மனிதர்களான பாரதியார், வ உ சிதம்பரனார், நேதாஜி, பகத்சிங் போன்றோர் தமது இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தின் பலனாகவே நாடு முழுவதும் பொதுமக்கள் வரிப்பணத்தில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் என கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. மக்கள் வரிப்பணத்தில் உருவான அரசுக் கல்வி நிறுவனங்களை, பொது சொத்துக்களைப் பாதுகாத்து அவற்றைச் செழித்தோங்கச் செய்யப் போதுமான நிதியை மாநில அரசாங்கம் ஒதுக்குவதே நியாயமாகும்.

அதை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு மக்களின் பொதுச் சொத்தாகத் திகழும் அரசுப் பள்ளிகளைப் படிப்படியாகத் தாரை வார்க்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் திட்டம் ஒரு அபாயகரமான வஞ்சகத் திட்டமாகும். கல்வியை நேசிப்போர், நல்லெண்ணம் கொண்டோர் நம்ம ஸ்கூல் திட்டத்தை எதிர்க்க முன் வர வேண்டும். இந்தத் திட்டத்தை திரும்பப்பெறும் வகையிலும் கோடானு கோடி ஏழை எளிய மக்களுக்குக் கல்வியை உத்திரவாதப்படுத்த அரசுப் பள்ளிகளுக்கு அரசே போதுமான நிதி ஒதுக்குவதை உறுதி செய்து அரசு கல்வி நிறுவனங்களைப் பாதுகாத்திடும் வண்ணம் ஒரு ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்க முன்வருமாறு சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும், குறிப்பாக ஆசிரியர் சங்கங்கள், மாணவர் சங்கங்களையும் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு அறைகூவி அழைக்கிறது.

இப்படிக்கு,
வெ.சுதாகர், மாநில குழு உறுப்பினர்,
அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, தமிழ்நாடு.

நன்றி: ஆசிரியர் உமா மகேஷ்வரி

disclaimer