அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி

ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் கல்வி வியாபாரிகளை நுழைக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்தப் போக்கிற்கு திராவிட மாடல் ஆட்சி தரப்போகும் விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

மிழக அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்காக வானவில் மன்றம் என்ற புதிய முயற்சியை தமிழக அரசு இந்த ஆண்டு உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் 13,210 அரசுப்பள்ளிகளில் இத்திட்டத்தைத் தொடங்கிவைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் அரசு ஆதி திராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது.

வானவில் மன்றம் என்பது அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களின்மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு வரும்படியாக அவர்களைத் தயார்படுத்தும் ஒரு புதிய முயற்சி என்ற செய்தி நிலவிவருகின்றது. அதனை நாம் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையைத் தூண்டுவது கல்விதருவதன் ஒரு பகுதியே. ஆனால் இந்தத் திட்டம் புதிது அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இது ஒன்றிய அரசுத் திட்டத்தின் வழியாக நிதி ஒதுக்கப்படக்கூடிய ஒரு  திட்டம்தான். பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள STEM (Science Technology Engineering and Mathematics) என்ற திட்டமே புதிய பெயரில் மீண்டும் வருகிறது. இதே திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு பள்ளிகளுக்கும் அதற்கான கருவிப்பெட்டிகள் (KIT) வழங்கிய நடைமுறை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது. அப்போது தன்னார்வலர்கள் என்றோ தொண்டு நிறுவனங்கள் என்றோ பள்ளிக்குள் எவரும் ஊடுருவவில்லை.

படிக்க : தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !

ஆனால் தற்போதைய வானவில் மன்றம் திட்டத்தில், வெளியிலிருந்து கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துவந்து நுழைக்கும் வேலையை பிராதானமாகச் செய்கின்றனர் அதிகாரிகள்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குனரான சுதன் ஐஏஎஸ் அவர்கள் இதற்கான சுற்றறிக்கையை மாநிலம் முழுவதிலும் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அரசுப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம்  செயல்படுத்தப்படப் போவதாகவும் இதற்காக சிறந்த நிபுணர்கள் வந்து செயல்முறைகளைச் செய்துகாட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். யார் அந்தச் சிறந்த நிபுணர்கள்?

பள்ளிக்குள் அறிவியலைக் கற்று உயர்கல்வி பயின்று தேர்வு எழுதி ஆசிரியராக வருபவர்களிடம் இந்தத் திறன் இல்லையா என்று நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சிறந்த நிபுணர்கள் என்ற அடையாளத்துடன் பள்ளிகளுக்கு உள்ளே நுழைபவர்கள் கார்ப்பரேட்டுகள் என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த நிறுவனங்கள் அனைத்துமே நிதி பெற்றுக்கொண்டு பணியாற்றும் கார்ப்பரேட் அமைப்புகள். இந்த அமைப்புகளில் பயிற்சி பெற்றுள்ள ஊழியர்கள்தான் (தன்னார்வலர்கள் என்பது தவறு) சிறப்புப் கருத்தாளர்களாம்.

இந்த அமைப்புகளின் லோகோக்களைத் தாங்கித்தான் வானவில் மன்றங்களின் செயல்பாடுகளை வடிவமைத்துள்ளனர். இவர்களைத் தேர்வுசெய்ய கல்வித்துறையினருக்கு வழிகாட்டுவது யார் என்ற கேள்வியை நாம் எழுப்புவதே எழுவதேயில்லை. திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு, கார்ப்பரேட்டுகளை பள்ளிக்கல்வியில் நுழைக்கும் முறைக்குப் பெயர் என்ன?

கல்வித்துறையில் பணியாற்றும் இளங்கலை முதுகலை பயின்ற திறமையான ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அறிவியல் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களைக் கொண்டதுதான் தமிழக பள்ளிக் கல்வித்துறை. 12,000 ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து இத்திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியதாகவும் செய்திக்குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. அப்படியிருக்க ஆசிரியர்களைத் தயார்படுத்தும் பணியைச் செய்யாமல் அவர்களிடம் உள்ள திறமையை மாணவர்களுக்குக் கடத்த நினைக்காமல், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத ஏராளமான பணிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மறுபுறம் தன்னார்வலர்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்களைக் கொண்டு பள்ளிகளுக்குள் மாணவர்களிடையே பரிசோதனைகள் நடக்கும் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் உள்ளன. அங்கு ஆராய்ச்சிப் படிப்பு முடித்த பேராசிரியர்கள் இருக்கின்றனர். கல்வி மாவட்டந்தோறும் ஒன்றிய அளவில் அறிவியல் கணக்கு படித்த ஆசிரியர் பயிற்றுனர்கள் (BRT) ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை எல்லாம் புள்ளிவிவரக் கணக்குகளை எடுக்கவைத்துவிட்டு, பள்ளி ஆசிரியர்களையும் தகவல் சேகரிப்பு, புள்ளி விவரங்கள் சேகரிப்பு என திசைமாற்றி அனுப்பிவிட்டு கார்ப்பரேட்டுகளைப் பள்ளிக்குள் திட்டமிட்டு நுழைப்பதன் பின்னணி என்ன?

அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் ஏற்படுத்துவதுதானே அறிவியல் ஆசிரியர்களின் பணி? அதை அவர்கள் செய்யட்டுமே? கணக்குப் பாடத்தைக் கற்பிப்பதுதானே கணக்கு ஆசிரியர்களின் வேலை? அதையெல்லாம் அவர்கள் செய்யட்டுமே? அதைவிடுத்து தன்னார்வலர்கள் ஏன் இந்த இடங்களுக்கு வரவேண்டும்? இதற்காக வருபவர்களுக்கு பயணப்படி உள்ளிட்ட தொகை நிச்சயமாக வழங்கப்படும். இதற்காக 1.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். ஒவ்வொரு பள்ளிக்கும் முதல்கட்டமாக ரூபாய் 1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் சோதனைகள் செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து வாரந்தோறும் அந்தப் பாடத்தில் உள்ள தொடர்புடைய கருத்துக்களை விளக்குவதற்கான உபகரணங்களை வாங்குவதாகவும் அவற்றைப் பயன்படுத்தி சோதனைகளை விளக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கற்பித்தல் பணியை ஆசிரியர்களிடம் விட்டுவிட்டு, எழுத்தர், கணக்கர், புள்ளிவிவரங்கள் சேகரிப்பவர், ஆதார் எண் இணைப்பவர் போன்ற பணிகளுக்கு இவர்களைப் போன்ற கார்ப்பரேட் நிறுவங்களை அரசு பயன்படுத்தலாமே?

நமக்கு எழக்கூடிய சில ஐயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

♦ ஆகா குரு (Aha Guru) என்பது எந்த அமைப்பு? (நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் அமைப்பு இது என்பது வெளிப்படை)

♦ Parikshan, AID INDIA மற்றும் சுடர் அமைப்பு இவர்களெல்லாம் யார்?

♦ எல்லோருமே கார்ப்பரேட் அமைப்புகள். கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் இவை. இந்தக் குறிப்பிட்ட அமைப்புகளை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்த அரசு யாரிடம் ஆலோசனை கேட்டது? எந்த அடிப்படையில் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது? இந்த நிறுவனங்கள் பள்ளிகளுக்கு அனுப்புகின்றவர்கள் அறிவியல் மற்றும் கணக்குத் துறையில் பெற்றுள்ள நிபுணத்துவம் என்ன?

♦ தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் (Tamilnadu Science and Technology Centres), ‌‌‌கோளரங்குகள் போன்ற அரசு  அறிவியல் நிறுவனங்கள் இருக்கின்றனவே! அவர்களை ஏன் இந்தத் திட்டங்களில் ஈடுபடுத்தவில்லை? சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், கோவை, திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அறிவியல் மையங்கள் இந்த வானவில் திட்டச்செயல்பாட்டில் ஈடுபடுத்தப்படாதது ஏன்?

♦ இந்த அரசு நிறுவனங்களின் லோகோக்கள் இல்லை வானவில் மன்றத் திட்ட அறிவிப்புகளில் இல்லை. ஆனால் கல்வி வியாபாரக் கார்ப்பரேட்டுகளின் லோகோக்கள்தான் வானவில் மன்றம் செயல்திட்டங்களின் முகப்பில் இடம்பெற்றுள்ளன.

♦ அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அறிவியல் இயக்கம் என்ற அமைப்பு அரசுப் பள்ளிகளுடன் நல்ல புரிதலையும் இணக்கத்தையும் பின்பற்றி அறிவியல் மனப்பான்மையைக் கொண்டுசேர்க்கும் விதமாகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. அதில் ஆயிரக்கணக்கான உண்மைத் தன்னார்வலர்கள் இயங்கி வருகின்றனர். நூற்றுக்கணக்கான பரிசோதனை முயற்சிகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பல பத்தாண்டுகளாக அந்த அமைப்பினர் செய்துவருகின்றனர். அதைப்போன்ற அமைப்புடன் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பயிற்சிபெற்று வானவில் மன்றங்களை நிதிச்சுமையின்றிச் செயல்படுத்தலாம். இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கும் நிதியைப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம்.

படிக்க : ஆதார் எண் இணைக்கும் பணி ஆசிரியருக்கு தேவையா? | ஆசிரியர் உமா மகேஸ்வரி | வீடியோ

♦ இத்திட்டம் மாநில அரசால் மேற்கொள்ளப்படுகிறது எனில் இதற்கான நிதி மாநில அரசால் வழங்கப்படுகிறதா? முதல்வர் உருவாக்கிய திட்டம் எனில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுமா? அல்லது அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டமா?

♦ அரசுப்பள்ளிகளில் கல்வி வியாபார நிறுவங்களை உள்ளே நுழைத்து, அந்த நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை இழுக்கத் தூண்டில் போடவும் அதற்கான புள்ளிவிவரங்களை அந்த நிறுவனங்களுக்கு வழங்கவும் அரசே வாசல் திறந்து வைக்கிறதா? இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்ற கேள்விகளையும் முன்வைக்கிறோம்.

♦ ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் கல்வி வியாபாரிகளை நுழைக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்தப் போக்கிற்கு திராவிட மாடல் ஆட்சி தரப்போகும் விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

உமா, கல்விச் செயல்பாட்டாளர்
நன்றி: சுவடு இணையதளம்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க