நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் !
மக்கள் உயிர் என்ன கிள்ளு கீரையா ?
தமிழக அரசே ! சிறப்பு சட்டம் எப்போது ?
தூத்துக்குடி துறைமுகத்தின் கடலை ஆழப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருவதால் தூத்துக்குடி விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லமுடியவில்லை. மீனவர்கள் வேலையில்லாமல் வறுமையிலும், கடனிலும் சிக்கி தவிக்கிறார்கள். இதை பயன்படுத்தி நாசகார ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடாமால் இருக்க வீட்டுக்கு வீடு தலா ரூ.2000 பணம், பொருட்கள் கொடுத்து மீனவர்களை பிளவுப்படுத்த முயற்சி செய்தனர் நாசகார ஸ்டெர்லைட் கைகூலிகள். இதை மீனவ மக்கள் அமைவரும் ஒன்றுகூடி முறியடித்தனர்.
கடந்த மார்ச் 28-ம் தேதியன்று இரவு 8 மணியளவில் நாசகார ஸ்டெர்லைட் நிறுவனம் கைக்கூலிகளை வைத்து பாத்திமா நகர் மக்களை பிளவுப்படுத்துகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. மக்கள் ஒன்றுகூடி அந்த கைக்கூலிகளை கண்டித்து போலீசிடம் புகார் கொடுத்தனர். இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் தனி, தனியாக புகார் மனு கொடுத்தனர்.
மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆத்திரத்தை தூண்டும் இந்த நடவடிக்கை எதிராக எத்தனை முறையோ போலீசிடம் புகார் தெரிவித்தும், ஸ்டெர்லைட் கைக்கூலிகளுக்கு எதிராக வழக்குகள் பதியவில்லை. ஏன் என்று கேட்டால் போலிசிடமிருந்து மழுப்பலான பதில்களே வருகின்றன.
படிக்க :
♦ மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே ! சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !
♦ ஸ்டெர்லைட் திறப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் செல்லும் வேதாந்தா : என்ன செய்யப் போகிறது தமிழக அரசு ?
15 உயிர்கள் சுட்டு கொன்று பலர் தங்களது உடல் உறுப்புகளை இழந்து உள்ளார்கள். உலக நாடுகளே இந்த கொடூரக் கொலைகளை கண்டித்த பிறகும் கொலைகார ஸ்டெர்லைட்டுக்காக வேலை செய்த போலீசு அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை? ஏன் ஒரு வழக்கு கூட பதியவில்லை ?
ஏன் என்று கேட்டால் ? சட்டம் தன் கடமை செய்யும் ! மக்களே பொறுமையாக இருங்கள் ! அது கடந்த காலம், இப்போ நிலைமை வேறு தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய ஆட்சியர் வந்தாச்சு, புதிய காவல் கண்காணிப்பாளர் வந்தாச்சு! ஏன் புதிய ஆட்சியே வந்தாச்சு என்று வக்கலாத்து வாங்கும் நீதி அரசர்களே ? இதற்கு பதில் சொல்லுங்கள் ?
கொரோனா காலம் ஆக்சிஜன் பற்றாகுறை என்று நாடகமாடி உச்சநீதிமன்றத்தின் மூலமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி ஆலையை திறப்பதற்கான ஆணையை ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றது. அதே சமயத்தில் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் எதையும் மதிக்காமல் ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்து, தங்களது கார்ப்பரேட் விசுவாசத்தை வெளிப்படுத்தி கார்ப்பரேட் சேவையில் நாங்கள் எல்லோரும் ஓரணிதான் என்பதை நிரூபித்தனர்.
உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்த ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியை செய்ய முடியவில்லை ! ஆனால் நாசகார ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு புனிதர் பட்டம் கொடுக்கிறது. தினகரன் உட்பட அனைத்து செய்தித்தாள்களிலும் விளம்பரம் வந்தன.
இப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்தில் என்ன வேலை நடந்துகொண்டிருக்கிறது ? ஒரு வேலையும் கிடையாது! தினமும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குள் ஆட்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்று வரை யார் அனுமதி கொடுத்தது ?
பணம் பலம் படைத்த ஸ்டெர்லைட் நிறுவனம் செய்யும் தில்லாலங்கடி வேலைகளை தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் முறியடித்து வருகிறார்கள்.
நான் ஆட்சிக்கு வந்தால், ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தமாக மூட சிறப்பு சட்டம் இயற்றுவேன் ! துப்பாக்கிச்சூட்டில் இறந்த தியாகிகளுக்கு நினைவு சின்னம் அமைப்பேன் ! 15 பேரை சுட்டு கொன்ற போலிசு அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என வாக்குறுதியளித்து வெற்றிபெற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வரை ஒரு வழக்குகூட போடவில்லையே ஏன் ?
மக்கள் உயிர் என்ன கிள்ளு கீரையா ? தமிழக அரசே ! சிறப்பு சட்டம் எப்போது ?
தூத்துக்குடி மக்களின் மூன்று கோரிக்கைகள் :
1. சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நிரந்தரமாக அகற்ற வேண்டும் !
2. 15 தியாகிகளுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் !
3. மக்களை சுட்டு கொன்ற போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்!
இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை தூத்துக்குடி மக்கள் போராட்டம் ஓயாது !
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு மக்கள் போராட்டத்தை தவிர வேறெந்த விடிவும் இல்லை!
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம் – 9385353605