மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதம் அளவிற்குச் சுருங்கிப் போன வருடத்தில், புலம் பெயர் தொழிலாளர்கள் தமது கிராமங்களுக்கு மீண்டும் திரும்பக் கூடிய கெடுவாய்ப்பை நாம் எதிர்பார்த்திருக்கும் நிலையில், விவசாயிகள் செவிமடுக்கப்படாமல் டெல்லி வாயிலில் காத்திருக்கும் நிலையில் இந்தியக் கோடீசுவரர்கள் சாதனை படைக்கும் செல்வ வளத்தை அடைந்துள்ளனர்.

– பி.சாய்நாத்

***

ஃபோர்பஸ் இதழ் 2021-இல் வெளியிட்டுள்ள பட்டியலை நம்பினோம் எனில், (கோடீசுவரர்கள் மற்றும் அவர்களது செல்வ வளம் குறித்து அறிய ஃபோர்பஸ் இதழ்தான் அதிக நம்பிக்கைக்கு உரியது) இந்தியக் கோடீசுவரர்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு மாதங்களில் 102-லிருந்து 140-ஆகப் பெருத்திருக்கிறது. அவர்களது செல்வத்தின் கூட்டு மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.59,600 கோடி அமெரிக்க டாலர்களாக, கிட்டத்தட்ட இருமடங்காகியிருக்கிறது எனக் கூறுகிறது, அவ்விதழ்.

படிக்க :
♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

இதன் பொருள் என்னவெனில், இந்த 140 தனிநபர்களின் அல்லது மக்கள் தொகையில் 0.000014 சதவீதமே உள்ள இவர்களின் திரண்ட (சொத்து) மதிப்பு, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ரூ.2,62,000 கோடி அமெரிக்க டாலர்களில் 22.7 சதவீதத்திற்குச் (அல்லது ஐந்தில் ஒரு பங்கிற்கும் கூடுதலானது) சமமாகும்; வழமையாக அவர்கள் செய்கிறபடி, (இந்த 140 பேர் தவிர) மற்ற அனைவரும் சேர்ந்தது தான் “மொத்த” என்பதாகும். 

பெரிய இந்திய தினசரிகளுள் அநேகமானவை, ஃபோர்பஸின் இந்த அறிவிப்பை, தவறான வழியில் குவிக்கப்பட்ட செல்வம் குறித்துக் குறிசொல்லும் சாமியாடி மிகவும் வெளிப்படையாக, நாணயமாகக் குறிப்பிட்டதையெல்லாம் தவிர்த்து விட்டு, இத்தகைய சாதனைகளை அங்கீகரிப்பதற்கென்றே அவைகள் சேமித்து வைத்திருக்கும் மொழியில் வெளியிட்டுள்ளன.

“இந்தியாவெங்கும் மற்றொரு கோவிட்-19 அலை வீசிக் கொண்டிருப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.2 கோடியைத் தாண்டிவிட்டது. ஆனாலும், நாட்டின் பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொடும் வகையில் இந்த பெருந்தொற்றுப் பீதியை ஒதுக்கித் தள்ளியிருக்கிறது. பங்குச் சந்தைக் குறியீட்டுஎண் கடந்த ஆண்டை விட 75 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இந்தியக் கோடீசுவரர்களின் மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 102-லிருந்து 140-ஆக உயர்ந்திருப்பதோடு, அவர்களது செல்வத்தின் கூட்டு மதிப்பு ரூ.59,600 கோடி அமெரிக்க டாலர்களாக, ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது” என இந்த நாடு குறித்த தனது செய்தி அறிக்கையின் முதல் பத்தியிலேயே குறிப்பிட்டிருக்கிறது ஃபோர்பஸ்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதம் சுருங்கிப் போன அதேவருடத்தில் இந்தச் செல்வாக்குமிக்க 140 பெருந்தனவந்தர்களின் சொத்து மதிப்பு வாயைப் பிளக்கும் அளவிற்கு 90.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தீவிர கவனத்துடன் கணக்கிட வேண்டிய அளவில் பெரும் எண்ணிக்கையிலும், சிதறுண்டும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் ஒருமுறை அலை அலையாக நகரங்களிலிருந்து தமது கிராமங்களை நோக்கித் திரும்பத் தொடங்கியிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தச் சாதனைச் செய்தி வெளிவருகிறது.

இதன் விளைவாகத் தோன்றவுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எந்தவொரு நன்மையும் செய்யப் போவதில்லை. ஆயினும் கருணைமிக்க வகையில், நமது கோடீசுவரர்களையும் அதிகம் பாதிக்கப் போவதில்லை. அது குறித்த ஃபோர்பஸின் உறுதிமொழி நம்மிடம் உள்ளது.

மேலும், கோடீசுவரர்களின் செல்வ வளம் கோவிட்-19-னின் தர்க்க நியாயத்திற்குத் தலைகீழ் விகிதத்தில் செயல்படுவதாகத் தெரிகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக (செல்வ வளம்) குவிகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு எவ்விதமானத் தீவிரப் பரவலின் தாக்கம் குறைகிறது.

“மிக உச்சத்தில் செல்வச் செழிப்பு ஆட்சி செலுத்துகிறது” எனக் கூறுகிறது, ஃபோர்பஸ்.

“மூன்று மிகப் பெரும் இந்தியக் கோடீசுவரர்கள் மட்டும் கிட்டத்தட்ட ரூ.10,000 கோடி அமெரிக்க டாலர்களுக்குச் சற்று அதிகமான சொத்தைத் தமக்குள் சேர்த்துக் கொண்டுள்ளனர்.” அந்த மூன்று கோடீசுவரர்களின் சொத்து மதிப்பானது – ரூ.15,350 கோடி அமெரிக்க டாலர்கள் – 140 கோடீசுவரர்களின் மொத்தச் சொத்து மதிப்பில் 25 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

உச்சத்திலுள்ள முதல் இரண்டு பேரின், அம்பானி (ரூ.8,450 கோடி அமெரிக்க டாலர்கள்) மற்றும் அதானி (ரூ.5,050 கோடி அமெரிக்க டாலர்கள்) ஆகியோரின் சொத்து மதிப்பானது பஞ்சாப் (ரூ.8,550 கோடி அமெரிக்க டாலர்கள்) அல்லது அரியானா (ரூ.10,100 கோடி அமெரிக்க டாலர்கள்) மாநிலங்களின் மாநில மொத்த உற்பத்தி மதிப்பைவிட மிக அதிகமாகும்.

இந்தப் பெருந்தொற்று வருடத்தில், அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் ரூ.4,770 கோடி அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ ரூ.3,57,000 இலட்சம் கோடி ரூபாய்) அதிகரித்திருக்கிறது. அதாவது, அவரது சொத்து மதிப்பு ஒவ்வொரு விநாடியும் சராசரியாக ரூ.1,13,000 என அதிகரித்திருக்கிறது. இந்த அதிகரிப்பு, ஆறு பஞ்சாப் விவசாயக் குடும்பங்களின் (சராசரியாக 5.24 நபர்களைக் கொண்ட குடும்பம்) மொத்த மாத வருவாயை விட (ஒரு குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ.18,059) அதிகமாகும்.

அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்பிற்கு ஏறத்தாழ சமமாக உள்ளது. மேலும், இது மூன்று விவசாயச் சீர்த்திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய நிலை. அவை நடைமுறைக்கு வந்தால், இது மேலும் வீங்கவே செய்யும். இதனிடையே, ஒரு பஞ்சாப் விவசாயியின் தனிநபர் ஆண்டு வருமானம் வெறும் ரூ.3,450 தான் (தேசிய மாதிரி ஆய்வின் 70 ஆவது சுற்று) என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அநேக தினசரிகளும் பி.டி.ஐ., அறிக்கையைத்தான் அப்படியே (அல்லது சற்று மாற்றி) வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையோ, ஃபோர்பஸ் இதழ் செய்ததைப் போல, எந்தவொரு இடத்திலும் ஒப்புமைப்படுத்தியோ அல்லது தொடர்புபடுத்தியோ தயாரிக்கப்படவில்லை. பி.டி.ஐ. அறிக்கையில் கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் அல்லது பெருந்தொற்று ஆகிய சொற்கள் இடம்பெறவே இல்லை.

இந்த அறிக்கை மட்டுமல்ல, வேறு எந்தவொரு அறிக்கையும், “பத்து இந்தியக் கோடீசுவரர்களுள் இரண்டு பேர் தமது செல்வ வளத்தை மருத்துவத் தொழிலில் இருந்துதான் (உலகெங்கிலும் பெருந்தொற்றைப் பயன்படுத்தி வளர்ச்சியடையும் துறை இதுதான்) பெறுகிறார்கள்” என ஃபோர்பஸ் இதழ் அழுத்திக் குறிப்பிட்டிருப்பதைப் போலக் குறிப்பிடவே இல்லை. 

மருத்துவத் துறை என்ற சொல் பி.டி.ஐ., அறிக்கை அல்லது அநேகமாக வேறெந்த அறிக்கையிலும் இடம் பெறவில்லை. எனினும், 140 இந்தியக் கோடீசுவரர்களுள் 24 பேரை மருத்துவத் துறையில் வைத்துக் குறிப்பிடுகிறது, ஃபோர்பஸ் இதழ்.

ஃபோர்பஸ் இதழ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய மருத்துவத் துறை சார்ந்த 24 கோடீசுவரர்களுள், முதல் பத்து பேர் பெருந்தொற்று வருடத்தில் மட்டும் ரூ.2,490 கோடி அமெரிக்க டாலர்களை தமது சொத்தில் (நாளொன்றுக்குச் சராசரியாக ரூ.500 கோடி ரூபாய்) கூடுதலாகச் சேர்த்ததையடுத்து, அவர்களது மொத்தச் சொத்து மதிப்பு 75 சதவீதம் அதிகரித்து ரூ.5,830 கோடி அமெரிக்க டாலர்களை (ரூ.4,30,000 கோடி) எட்டியது.

கோவிட்-19 பாரபட்சமற்றது எனக் கதைக்கப்பட்டதையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நமது “இந்தியாவில் தயாரிப்போம் – எங்காவது குவித்து வைப்போம்” கோடீசுவரர்கள் (மற்றைய உலகக் கோடீசுவரர்களுக்கு இணையாக) ஃபோர்பஸின் சிகரத்தில் இருக்கிறார்கள், அதன் உச்சியிலிருந்து வெறும் இரண்டு இடங்கள் தள்ளி. 140-க்குப் பின்னும் ஆட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடுத்த இடத்தில் உலகிலேயே அதிகக் கோடீசுவரர்களைக் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. கோடீசுவரர்களின் நாடாகத் தம்மைக் காட்டிக் கொண்ட ஜெர்மனியும், ரசியாவும் இந்தப் பட்டியலில் நம்மைப் பின்னுக்குத் தள்ளியகாலம் ஒன்றிருந்தது. ஆனால், இந்த வருட பட்டியலில் அவைகளின் இடம் எதுவெனக் காட்டப்பட்டிருக்கிறது.

இந்தியக் கோடீசுவரர்களின் சொத்தின் கூட்டு மதிப்பான ரூ.59,600 கோடி அமெரிக்க டாலர்கள் என்பது ஏறத்தாழ ரூ.44,50,000 கோடிக்குச் சமமாகும். இது 75 ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்களின் மதிப்பிற்குச் சற்றுக் கூடுதலாகும். இந்தியாவில் செல்வ வரி கிடையாது. அப்படியான வரி இருந்து, அதிகம் உறுத்தாத வகையில் 10 சதவீத வரி விதித்தோம் எனில், ரூ.4,45,000 கோடி வரி வருமானம் ஈட்ட முடியும்.

இதனைக் கொண்டு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் (2021-22) மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.73,000 கோடி என்ற அதே அளவில், தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். அவ்வாறு நடைமுறைப் படுத்தும் போது, ரூ.1,680 கோடி மனித உழைப்பு நாட்களை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குக் கிராமப்புறங்களில் உருவாக்கவும் முடியும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மாநகரங்களையும் நகர்ப்புறங்களையும் விட்டு வெளியேறும் இரண்டாவது அலை எழுந்துள்ள நிலையில் – அவர்களது இத்துயரம் ஒரு சமூகம் என்ற வகையில் அவர்கள் நம்மை நம்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது – மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேற்சொன்னதைவிட அதிகப்படியான வேலைநாட்கள் நமக்குத் தேவைப்படுகிறது.

இந்த அதிசயத்தக்க 140 கோடீசுவரர்களும், தமது நண்பர்களிடமிருந்து சிறு சிறு உதவிகளையும் பெற்று வந்தனர். கடந்த இரு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கண் மண் தெரியாத வேகத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பிரம்மாண்ட வரிக் குறைப்பு, ஆகஸ்டு 2019-லிருந்து இன்னும் வேகமெடுக்கும்படி முடுக்கிவிடப்பட்டது.

விவசாய விளைப் பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையில் கூடுதலாக ஒரு பைசாகூட விவசாயிகளுக்காகச் சலுகை காட்டப்படவில்லை. தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வைப்பதற்கு வகை செய்யும் அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. (சில மாநிலங்களில் இந்தக் கூடுதல் நான்கு மணி நேர உழைப்புக்குக் கூடுதல் கூலி கொடுப்பதும் மறுக்கப்பட்டது.) மேலும், முன்பைவிட அதிகமாக இயற்கை வளங்களும், பொதுச் சொத்தும் கார்ப்பரேட் பெருந்தனவந்தர்களுக்குக் கையளிக்கப்பட்டது – இவை அனைத்துமே பெருந்தொற்றுக் காலத்தில் நடந்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்பெருந்தொற்றுக் காலத்தில்தான், உணவுப் பொருள் சேமிப்பு ஒரு கட்டத்தில் ரூ.10.4 கோடி டன்னாக உயர்ந்தது. ஆனால், மக்களுக்கு இலவசமாகக் கிடைத்ததோ, 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு மட்டுமே – அதுவும் ஆறு மாதங்களுக்கு. இந்த இலவசமும் கூட, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருபவர்களுக்கு மட்டும்தான்; அச்சட்டமோ தேவையுள்ள பெரும்பாலோரை ஒதுக்கி வைத்திருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு பல பத்து இலட்சக்கணக்கான இந்தியர்கள் பட்டினி கிடக்க நேர்ந்த வருடத்தில்தான் இவையெல்லாம் நடந்தன.

ஃபோபர்ஸ் குறிப்பிடும் இந்தத் திடீர் சொத்துக் குவிப்புப் பாய்ச்சல் உலகெங்கும் நடந்து வருகிறது. “கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீசுவரர் உருவாகியிருக்கிறார். மொத்தத்தில், உலகப் பெரும் கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு  முந்தைய ஆண்டை விட 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்திருக்கிறது.” இந்த 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலரில் இந்தியப் பெரும் கோடீசுவரர்களின் பங்கு கிட்டத்தட்ட 12 சதவீதமாகும். இது,  நமது நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஏற்றத் தாழ்வு எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, மிகத் துரிதமாக வளர்ந்து வரும் வேளையில் நடந்திருக்கிறது.

வறுமையும் பெருந்துயரமும் அதிகரிக்கும் போதுதான், அதன் மீது சவாரி செய்த படியே செல்வக் குவிப்பும் அதிகரிக்கிறது. மேலும், இது பெருந்தொற்று பற்றிய விடயம் மட்டுமல்ல. பேரிடர்கள் வளமான வியாபாரமாகும். பலரின் துயரத்திலிருந்து பணத்தை ஈட்டுவது எப்பொழுதுமே நடைபெறுகிறது. ஃபோர்பஸ் நம்புவுதைப் போலன்றி, நமது ஆட்கள் பெருந்தொற்றுப் பீதியைக் கண்டு ஒதுங்கிப் போய்விடவில்லை.

அவர்கள் ஓங்கி அடித்த அந்த அலையில் மிகச் சிறப்பாகப் பயணித்துள்ளனர். உலகெங்கும் நிலவி வரும் பெருந்தொற்று பெருக்கத்தை அனுபவித்துக் கொண்டிருப்பது மருத்துவத் துறையாகும் என்ற ஃபோர்பஸின் கூற்று சரியானதுதான். எனினும், திடீர் பேரழிவுகளைப் பொருத்து மற்ற துறைகளிலும் இத்தகைய வளர்ச்சியும் குவிப்பும் நிகழக் கூடும்.

டிசம்பர் 2004-இல் சுனாமி பேரழிவு ஏற்பட்ட ஒரே வாரத்திற்குள்ளாக, உலகெங்கிலும், குறிப்பாக, சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் கூட பங்குச் சந்தை வளர்ச்சியைக் காண முடிந்தது. பல இலட்சக்கணக்கான வீடுகளும், படகுகளும், ஏழைகளின் அனைத்து விதமான சொத்துக்களும் அழிக்கப்பட்டிருந்தன.

சுனாமிக்கு இலட்சம் உயிர்களுக்கும் மேலாகப் பலி கொடுத்த இந்தோனேஷியாவில், ஜகர்தா பங்குச் சந்தை குறியீடு, அதனின் முந்தைய சாதனைகளை முறியடித்து, அதுவரையில்லாத உச்சத்தைத் தொட்டது. நமது பங்குச் சந்தைக் குறியீடும் அது போலவே. அச்சமயத்தில், மறுகட்டுமானத்திற்கான டாலர்கள், ரூபாய்கள் குறித்த முன்னுணர்வுதான் கட்டுமானம் மற்றும் அதோடு தொடர்புடைய துறைகளின் பிரம்மாண்ட வளர்ச்சியை இயக்கியது.

இச்சமயத்தில், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் (குறிப்பாக, மென்பொருள் சேவைத் துறை) உள்ளிட்டவைதான் நன்றாகச் செயல்பட்டன. ஃபோர்பஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியாவைச் சேர்ந்த முதல் பத்து தொழில் நுட்ட ஜாம்பவான்கள், பன்னிரெண்டே மாதங்களில் தமது சொத்து மதிப்பில் கூடுதலாக ரூ.2,280 கோடி அமெரிக்க டாலர்களைச் (நாளொன்றுக்குச் சராசரியாக ரூ.460 கோடி ரூபாய்) சேர்த்துக் கொண்டதையடுத்து, அவர்களது ஒருங்கிணைந்த மொத்த சொத்து மதிப்பு ரூ.5,240 கோடி அமெரிக்க டாலர்களை (ரூ.3,90,000 கோடி) எட்டியது. இது 77 சதவீத உயர்வாகும்.

மேலும், இணையவழிக் கல்விச் சேவையும் – பெரும்பாலும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த பல இலட்சக்கணக்கான மாணவர்கள், எவ்விதக் கல்வி வாய்ப்பும் இன்றி ஒதுக்கப்பட்ட நிலையில் –  சிலருக்குப் பலன்களை அளித்தது. பைஜு ரவீந்தரன், தனது சொத்து மதிப்பை 39 சதவீதம் அதிகரித்து, ரூ.250 கோடி அமெரிக்க டாலர் (ரூ.18,700 கோடி) பெறுமான சொத்தை அடைந்தார்.

படிக்க :
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

♦ ஆக்சிஜன் கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டமாம் – இந்துராஷ்டிர இளவல் ஆதித்யநாத் எச்சரிக்கை !

நாம் உலகின் பிற நாடுகளுக்கு அவர்களது இடத்தைக் காட்டிவிட்டோம் எனக் கூறுவது நாணயமாக இருக்கும் என நான் கருதுகிறேன். ஐ.நா மனித வளர்ச்சி குறியீட்டுப் பட்டியலில் நமது இடமும் காட்டப்பட்டுவிட்டது. 189 நாடுகள் உள்ள பட்டியலில் 131-வது இடம் நம்முடையது. எல் சல்வடார், தாஜிக்கிஸ்தான், குவாதிமாலா, நிகரகுவா, புடான், நமீபியா, கபோ வெர்தே ஆகிய நாடுகள் எல்லாம் நமக்கு முன் உள்ளன.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, நம்மை இடித்துக் கீழே தள்ளிய சர்வதேச சதி குறித்த உயர்மட்ட விசாரணைக் குழுவின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும் என நான் அனுமானிக்கிறேன். இந்தப் பத்தியைக் கவனித்து வரவும்.


தமிழாக்கம் : ஆர்.ஆர்.டி.
நன்றி : தி வயர் (15.04.2021) மற்றும் People’s Archive of Rural India

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க