26 ஏப்ரல் 2021

கொரோனா இரண்டாம் அலை : தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு!
கார்ப்பரேட் கொள்ளைக்கு கதவு திறந்துவிடும் கயமைத்தனம் !

கடந்த ஆண்டு இந்திய மக்கள் முதன் முதலாக லாக்டவுன் என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டனர். ஒட்டுமொத்த நாடும் முடக்கப்பட்டதும், இலட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து சென்றதும் நம்மால் மறந்துவிட முடியாது. தற்போது இந்த நெருக்கடியானக் காலகட்டத்தில் கூட தமிழ்நாட்டில் (26.4.2021) அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.

அப்படி என்ன அவசரம்? கொரோனா இரண்டாம் அலையின்போது மக்கள் வாயில் உதிர்க்கப்படும் முக்கிய வார்த்தைகள் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன். கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டல் கொத்துக் கொத்தாக மடியக் கூடிய அவலத்தை பலரும் படம் பிடித்துக் காட்டினர். உணவை விட ஆக்சிஜன் சிலிண்டருக்காக அலைகின்ற நிலை உருவானது.

படிக்க :
♦ ஆக்சிஜன் கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டமாம் – இந்துராஷ்டிர இளவல் ஆதித்யநாத் எச்சரிக்கை !

♦ கார்டியன் தலையங்கம் : மோடியின் தவறுகள் – கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருந்தொற்று

இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு என்கிற முகமூடிதான் எடப்பாடி அரசு நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டம் என்கிற நாடகத்துக்கு பின்னணி. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே குரலில் பேசி இருக்கின்றன.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்கலாம்.”

கொலைகார நிறுவனமான ஸ்டெர்லைட் தாமிர ஆலை, இலட்சக்கணக்கான மக்களை குற்றுயிரும், கொலை உயிருமாக ஆகியதை எதிர்த்து நடத்தப் போராட்டத்தில் 15 பேர் உயித்தியாகம் செய்தனர். அதன் பின்னரும், பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்திய பின்னர்தான் ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்பட்டது. மக்கள் வாழ்வையும், உடல் நலத்தையும் நாசமாக்கும் ஸ்டெர்லைக்குத்தான் ‘தற்காலிக அனுமதி’ கொடுக்கப் போகின்றன, தமிழக ஓட்டுக் கட்சிகள்.

ஆக்சிஜன் வேண்டும் என்பதால் ஸ்டெர்லைட் வேண்டும் என்று ஒரே வார்த்தையில் வாயடைக்கப் பார்க்கின்றனர். ஸ்டெர்லைட் தவிர வேறெந்த ஆலையும் ஆக்சிஜன் தயாரிக்க முடியாதா? ஸ்டெர்லைட் தயாரிக்கக் கூடிய ஆக்சிஜனை விட பன்மடங்கு ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய வல்லமை பொதுத் துறை நிறுவனங்களுக்கு இருக்கின்றன. 3 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்துப் பராமரிப்புப் பணிகளை முடித்து ஆக்சிஜன் தயாரிப்பு துவங்குவதற்கே சில வாரங்கள் தேவைப்படும்.

ஆனால், நாடு முழுவதும் உள்ள இரும்பு உருக்காலை, பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள், பெல் போன்ற கனரக ஆலைகள் இப்போதும் இடைவிடாமல் ஆக்சிஜன் உற்பத்தியை செய்து வருகின்றன. இந்த ஆலைகளது ஆக்சிஜன் உற்பத்தி இலக்கை போர்க்கால அடிப்படையில் உயர்த்தினால், ஓரிரு நாட்களிலேயே ஆக்சிஜன் தட்டுப்பாடு காணாமல் போய்விடும்.

உதாரணமாக, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்கிற மத்திய பொதுத்துறை அமைப்பின் கீழாக இயங்கக் கூடிய சேலம் உருக்காலை, பொகாரோ, பிலாய், ரூர்கேலா, துர்காபூர் பர்ன்பூர் உள்ளிட்ட டஜன் உருக்காலைகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பெட்ரோலிய சுத்திகரிப்பு மையங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. இவை எல்லாம் ஆக்சிஜன் தயாரிப்பை எப்போதும் செய்து வருகின்றன. இந்த ஆலைகள் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் 99.7% தரமாகவும் இருக்கின்றன.

ஒருவேளை பொதுத்துறை நிறுவனங்களால் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியாவிட்டால், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே இயங்கக் கூடிய நிறுவனங்கள் இருக்கின்றன. பிரிட்டன் ஆக்சிஜன் கம்பெனி என்ற பெயருடன் 1935-ல் இந்தியாவில் துவங்கப்பட்ட பன்னாட்டு நிறுவனம், தற்போது பல கைகளுக்கு மாறி லிண்டே இந்தியா லிமிடெட் என்கிற பெயரில் நாடு முழுவதும் ஆக்சிஜன் சப்ளை செய்கிறது. டாட்டா, ஜிண்டால், வேதாந்தா ஸ்டீல் நிறுவனங்கள் மக்கள் ‘நலனுக்காக’ ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்புவதாக பீற்றிக் கொள்கிறார்களே, அவர்களுக்கே ஆக்சிஜன் சப்ளை செய்வது லிண்டே நிறுவனம்தான்.

சென்னை அம்பத்தூரில் ரூபாய் ஒரு கோடி செலவில் மணி ஒன்றுக்கு 600 மீட்டர் கியூப் அளவுள்ள (வாயுக்களது அளவை மீட்டர் கியூப் என்பர்) ஆக்சிஜன் உற்பத்திக் கூடங்கள் அமைத்திருக்கிறது. பெரிய மருத்துவமனைகள் சுமார் 1-2 கோடி அளவுக்கு செலவிட்டால் தங்கள் மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜனை தடையின்றி உற்பத்தி செய்துவிட முடியும்.

முதல் லாக்டவுன் கட்டத்தில் மத்திய அரசு அறிவித்த ரூ.35,000 கோடி இதற்கெல்லாம் செலவிடப் பட்டிருந்தால் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் போய் இருக்கும். இந்த வாய்ப்பை எல்லாம் நீதிமன்றங்களும் பரிசீலிக்கவில்லை. மத்திய – மாநில அரசுகளும் பரிசீலிக்கவில்லை.

அரசுகளது நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆக்சிஜன் பற்றாக் குறையைக் காட்டி கார்ப்பரேட்டுகளது கல்லாப் பெட்டியை நிரப்புவது எப்படி; ஸ்டெர்லைட் போன்ற கொலைகார கம்பெனிகளுக்கு புத்துயிர் கொடுப்பது எப்படி என்பதுதான்.

இதே நிலைமைதான் தடுப்பூசி தட்டுப்பாட்டிலும் நிலவுகிறது. நாட்டில் பயன்படுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகள் கோவிஷீல்ட் (சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிப்பு) கோவாக்சின் (பாரத் பயோடெக் தயாரிப்பு). இந்த தடுப்பூசிகளை அரசே வாங்கினால் ஒரு முறைக்கான (டோஸ்) விலை கோவிஷீல்ட் ரூ. 400/ கோவாக்சின் ரூ.600/.

இந்த தடுப்பூசியை சொந்த செலவில் போட்டுக் கொண்டால் இரட்டிப்பு விலை தர வேண்டும். மத்திய அரசின் புதிய கொள்கை முடிவின்படி, 45 வயதுக்குட்பட்டவர்களது (சுமார் 101 கோடி பேர்) தடுப்பூசிக்கான செலவை அந்தந்த மாநில அரசுகள்தான் ஏற்க வேண்டும்.  

ஒரு டோஸ் தடுப்பூசியை கோவிஷீல்டும், இன்னொரு டோஸ் ஊசியை கோவாக்சினும் போடக்கூடாது என்பது இன்னொரு நிர்ப்பந்தம். இந்த பின்னணியில்தான் தடுப்பூசி தட்டுப்பாடு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இல்லை. முதல் டோஸ் கோவாக்சின் போட்டவருக்கு அது கிடைக்கவில்லை. கோவிஷீல்ட் போட்டவருக்கு அது கிடைக்கவில்லை.

மக்கள் கையறு நிலையில் நிற்கின்றனர். பாதி கிணற்றை தாண்டிவிட்டு அடுத்த பாதிக்கு நகர முடியாமல் நிற்கின்றனர். உயிர் பயம் துரத்துகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு தனியார் மருத்துவமனைகளுக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளுகிறது.

ஒரு பொருளின் விலையை தீர்மானிப்பதில் தேவைக்கும் (demand) அளிப்புக்கும் (supply) இடையிலான பற்றாக்குறையே தீர்மானிக்கிறது என்பது முதலாளித்துவ பொருளாதாரத்தின் அரிச்சுவடி.

தடுப்பூசியின் தேவை அதிகரிக்கிறது. ஆனால், சந்தையில் தட்டுப்பாடு தீவிரமடைகிறது. அரசின் கைகளில் இருப்பு இல்லை. கார்ப்பரேட் மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு குவிகிறது. இப்படியாக, இரட்டிப்பு விலை நம்மீது திணிக்கப்படுகிறது.

ஒரு கணக்குக்காக, 50 சதவீதம் பேர் அரசு மருத்துவமனையிலும், எஞ்சிய 50 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதாகவும்; 50 சதவீதம் பேர் கோவிஷீல்ட், எஞ்சிய 50 சதவீதம் பேர் கோவாக்சின் போட்டுக் கொள்வதாகவும் வைத்துக் கொண்டால் கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.35,350 கோடியும், கோவாக்சின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.75,750 கோடியும் இலாபமாக கிடைக்கும்.

இந்த இலாப விகிதம் மேலும் மேலும் அதிகரிக்குமே அன்றி குறையப் போவதில்லை. ஏனென்றால், கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பதற்கான காப்புரிமை (patent right) அரசு நிறுவனங்களுக்குக் கூட இல்லை. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளானது ஒட்டுமொத்தப் பொதுத் துறைகளையே மூடிவிடுவது என்பதாக இருப்பதால், அரசுக்குச் சொந்தமான டஜன் கணக்கான மருந்து – தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களும், ஆராய்ச்சி மையங்களும் செயலற்று நிற்கின்றன.

படிக்க :
♦ கொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்

♦ கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை || வீடியோ

தடுப்பூசி தயாரிப்பதற்கான கட்டமைப்பு முழுமையாக பெற்றிருந்தாலும், காப்புரிமைச் சட்டம், தனியார்மயமாக்கல் ஆகிய இரண்டும் பொதுத் துறை நிறுவனங்களை மக்கள் சேவையிலிருந்து அப்புறப்படுத்திவிட்டன சகலமும் கார்ப்பரேட்மயம். இதுதான் இன்றைய நிலைமை.

கொரோனா தொற்றைவிட ஆபத்தானதாக கார்ப்பரேட் தொற்று நம்மை கொன்று கொண்டிருக்கிறது. அரசோ, கார்ப்பரேட் நலனே நாட்டின் நலன் என்று ஓயாமல் செல்லியும், செயல்பட்டும் வருகிறது. இந்த சூழலில் ஓங்கி ஒலிக்க வேண்டிய குரல் தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை (patent right) ரத்து செய்து, மக்களுக்கு இலவசமாக வழங்கு!

ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் பொதுத் துறை நிறுவனங்களை முழுவீச்சில் ஈடுபடுத்து!

ஆக்சிஜன் தேவை என்கிற முகமூடியில் கொலைகார ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சிக்காதே!


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 805638629

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க