ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 5

பு.ஜ.தொ.மு.வின் இந்த 25 ஆண்டுகால போராட்ட வரலாறு, தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுக்கு இரத்தத்தில் தோய்ந்த அனுபவங்களை வழங்குகிறது. அவற்றை வரித்துக் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தைப் புரட்சிகர அரசியலுக்கு வென்றெடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.

பு.ஜ.தொ.மு வரலாறு இறுதிப் பகுதி!

பத்திரிகையாக தொடங்கி முகநூல்பக்கமாக தொடரும் புதிய தொழிலாளி

பு.ஜ.தொ.மு. கட்டமைப்புரீதியாக மட்டுமன்றி தொழிலாளி வர்க்கத்தை அரசியல்படுத்தும் நோக்கத்தில், தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வுகளை உணர்த்தி அமைப்பாக்கும் வகையில் தொழிற்சங்க அரங்குக்கான பத்திரிகை தொடங்குவது சரியாக இருக்கும் என கருதப்பட்டது.

இதேநோக்கத்தில், 2010 ஆம் ஆண்டு வாக்கில் ஒசூர் தோழர்கள் “புதிய தொழிலாளி” என்கிற பெயரில் சிற்றிதழ் ஒன்றை நடத்தினர். சில மாதங்களில் அது நின்று போனது. அதன் பின்னர், பு.ஜ.தொ.மு. மாநிலக் குழுவின் முயற்சியில் “புதிய தொழிலாளி” தொழிலாளர்களுக்கான ஒரே புரட்சிகர இதழாக வெளிவந்தது.

புதிய தொழிலாளியின் முதல் இதழ், 2014 செப்டம்பரில் கருப்பு வெள்ளை அட்டையில் வெளிவந்தது. இரண்டாவது இதழ் முதல் பல வண்ண அட்டையுடன் ரூ.5 விலையில் தனிச்சுற்று இதழாக வெளிவந்தது. 2019 இறுதி வரை வெளிவந்த புதிய தொழிலாளி சுமார் 5,000 படிகள் வரை அச்சிடப்பட்டு ரயில், பேருந்து, ஆலைவாயில்கள், இணைப்புச் சங்கங்கள், கிளைச்சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் என பரவலாக விநியோகிக்கப்பட்டது.


படிக்க: ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 1


பல படைப்பாளிகளின் பங்களிப்போடும், புதிய படைப்பாளிகளை உருவாக்கியும் புதிய தொழிலாளி தொழிலாளர் வர்க்கத்தினரிடையே அரசியல் உணர்வூட்டியது. சி.ஐ.டி.யு. போன்ற சில தொழிற்சங்கங்கள் பொருளாதாரவாதக் கண்ணோட்டத்தில், தொழிலாளர்கள் தொழிலாளர் பிரச்சினையை மட்டுமே பேசும் வகையில் பத்திரிகைகளை நடத்தி வரும்போது, புதிய தொழிலாளி தொழிலாளர் வர்க்கத்திற்கு தேவையான புரட்சிகர அரசியலை எடுத்துக் கூறியது.

பொருளாதாரவாதத்தில் மூழ்கிப்போன, புதுவை மாவட்டச் சங்கத்தினர் சீர்குலைவு வேலைகளைச் செய்தது மட்டுமின்றி, புதிய தொழிலாளிக்கு சில இலட்ச ரூபாய் நிலுவை வைத்து நெருக்கடிகளைக் கொடுத்தனர். இந்த நெருக்கடிகளையெல்லாம் தாண்டி, பிற மாவட்டங்களில் இருந்த தொழிலாளர்களின் பேராதரவுடன் கடனின்றி, தங்குதடையின்றி புதிய தொழிலாளி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வெளிவந்தது.

2021-ஆம் ஆண்டில் பு.ஜ.தொ.மு பிளவுக்குப் பின்னர் பு ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் இணையக் குரலாக, முகநூலாக தனது பணியை செய்து கொண்டிருக்கிறது புதிய தொழிலாளி.


படிக்க: ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 2


இதுமட்டுமின்றி, தொழிலாளர் வர்க்கத்திடம் புரட்சிகர அரசியலைப் பரப்பும் நோக்கத்தில், மார்க்சிய-லெனினிய மாத இதழான புதிய ஜனநாயகம் மாதந்தோறும் தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. புரட்சிகர அரசியலை நேசிக்கும் பலரும் இதனால் உந்தப்பட்டு பு.ஜ.தொ.மு.வில் இணைந்தது மட்டுமின்றி அதன் பல்வேறு மட்டங்களில் தலைமைக் குழுக்களில் இணைந்து பங்காற்றினர்.

மேலும், தொழிலாளர்களுக்கு பல்வேறு சமூகப் பிரச்சினைகளை உணர்த்தும் விதமாக, “புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயம்”, “சோசலிச சீனாவும் முதலாளித்துவ சீனாவும்”, “முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்”, “மனுதர்மம் – அம்பேத்கர்”, தோழர் லெனினின் “என்ன செய்யவேண்டும்?”, “முதலாளித்துவ ஜனநாயகமும் பாட்டாளி வர்க்க ஜனநாயகமும்” போன்ற பல்வேறு நூல்களும் அச்சிடப்பட்டு ஆயிரக்கணக்கில் விநியோகம் செய்யப்பட்டது.

பு.ஜ.தொ.மு.வின் இந்த 25 ஆண்டுகால வரலாற்றில் பல தியாகப் பூர்வமான தொழிலாளர்கள் தலைமைக்கு உயர்ந்தது மட்டுமின்றி, தங்களது வாழ்நாள் முழுவதும் தொழிலாளர்களுக்காக தொடர்ந்து அயராது பாடுபட்டனர், இன்றளவும் பாடுபட்டு வருகின்றனர். விளவை இராமசாமி, வெங்கடேசன், நாராயணமூர்த்தி போன்ற எண்ணற்ற தோழர்கள் தங்களது இறுதி மூச்சுவரை அமைப்பில் அயராது உழைத்தனர். மூத்த தோழரான தோழர் செல்வராஜ் மே தினத்தின் போது பேருந்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, படியில் இருந்து தவறி விழுந்து தியாகியானார். இன்னும் நூற்றுக்கணக்கான தோழர்கள், பல்வேறு பொய் வழக்குகள், நெருக்கடிகள், அடக்குமுறைகளை எதிர்க்கொண்டு இன்றளவும் தொடர்ந்து தொழிலாளர் வர்க்கத்திற்கு வர்க்க உணர்வுடன் தங்களது பங்களிப்புகளைச் செலுத்தி வருகின்றனர்.


படிக்க: ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 3


பு.ஜ.தொ.மு. தலைமையில் நிலவிய பொருளாதாரவாதப் போக்குக்கும் அதற்கு எதிரான புரட்சிகர அரசியலை உயர்த்திப் பிடிக்கும் போக்குக்கும் இடையே அதன் தொடக்கக் காலந்தொட்டு போராட்டங்கள் நிலவி வந்தது. இந்த அணிசேர்க்கை அவ்வப்போது மாறி மாறி வந்திருந்தாலும் 2019 காலகட்டத்தில் பொருளாதாரவாதத்தை உயர்த்திப் பிடித்த புதுச்சேரி பழனிச்சாமி, சுப.தங்கராசு, முகுந்தன் போன்றவர்கள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சீரழிந்து போயினர். சுப.தங்கராசு ரியல் எஸ்டேட் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தலித் மக்களின் நிலங்களை விற்பனை செய்யும் ஏஜென்டாக மாறினார். இது தொடர்பான விசாரணை முறையாக நடத்தப்பட்டு, அமைப்பு முழுவதும் விசாரணை அறிக்கை சுற்றுக்குவிடப்பட்டு அதன் முடிவில் அவர் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைப் புரிந்த வகையில் தலைமைக்குழுவினர் மீண்டும் தலைமைக்கு வரக்கூடாது என அமைப்பு ஒருமனதாக முடிவு செய்தது.

இதன் பின்னர், சுப.தங்கராசுக்கு சாதகமாக முகுந்தன், பழனிச்சாமி நடந்து கொண்டதை அடுத்து, அந்தப் பிரிவினர் அமைப்பு விரோத நடவடிக்கைகள், சதி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதன் காரணமாக அமைப்பில் இருந்து நீக்கப்பட்டனர். முறைப்படி தொழிலாளர்கள் சங்கங்களைக் கூட்டி அமைப்பின் பெரும்பான்மை தக்கவைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் பெரும்பான்மை மாவட்டகளில் பதிவு செய்யப்பட்ட ஒரே பு.ஜ.தொ.மு. சங்கமாக மாநில ஒருங்கிணைப்புக் குழு செயல்பட்டு வருகிறது. புரட்சிகர அரசியலை தொழிலாளர் வர்க்கத்தினர் மத்தியில் முன்னெடுத்துச் சென்று வருகிறது.


படிக்க: ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 4


பு.ஜ.தொ.மு.வின் இந்த 25 ஆண்டுகால போராட்ட வரலாறு, தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுக்கு இரத்தத்தில் தோய்ந்த அனுபவங்களை வழங்குகிறது. அவற்றை வரித்துக் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தைப் புரட்சிகர அரசியலுக்கு வென்றெடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.

காவி-கார்ப்பரேட் பாசிசத்தால் தொழிற்சங்க சட்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர். இந்த நெருக்கடியான காலத்தில் அல்லல்பட்டு துயருறும் வர்க்கமாகத் தன்னை கருதிக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்கத்தை புரட்சிகர அரசியல் உணர்வூட்டி அணிதிரட்டுவோம். வர்க்கப் போராட்டத்தில் உயிர்நீத்த எண்ணற்ற தியாகிகளின் சோசலிச இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்போம். மறுகாலனியாக்கத்தையும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தையும் வீழ்த்துவோம். காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி வீசுவோம்!

மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனை வாழ்க! புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக!

முற்றும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க