ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 1

நக்சல்பாரி இயக்கத்தில் நிலவிய போர்க்குணமிக்கப் பொருளாதாரவாதம் பு.ஜ.தொ.மு.வின் துவக்கக் கால செயல்பாட்டில் ஆதிக்கம் செலுத்தியது. “ஆலைக்கு ஒரு சங்கம்; வேலைகள் எல்லாம் நிரந்தரம்” என்பது பு.ஜ.தொ.மு.வின் இலக்காக இருந்தது. ஆலைக்கு ஒரு சங்கம் கட்ட வேண்டும் என்கிற முனைப்பானது அரசியலை ஆணையில் வைப்பதை இரண்டாம்பட்சமாக்கியது.

ஏப்ரல் 02, 2023, பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு!

தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதில் புரட்சிகரப் பாதையை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்!

1998-இல் தொடங்கப்பட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணிக்கு (பு.ஜ.தொ.மு. – NDLF) இது 25-ஆம் ஆண்டு. பொருளாதாரவாதம் கோலோச்சிய 1990-களின் இறுதி மற்றும் 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பு.ஜ.தொ.மு. கட்டியெழுப்பப்பட்டது. தமிழ்நாட்டின் தொழிலாளர்களைப் புரட்சிகரப் பாதையில் அணிதிரட்டும் நீண்ட நெடிய போராட்ட காலம்தான் பு.ஜ.தொ.மு.வின் இந்த 25 ஆண்டுகள். சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி. போன்ற பெரிய திரிபுவாதத் தொழிற்சங்கங்களின் செல்வாக்கில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை விடுவித்துப் புரட்சிகரப் போராட்டப் பாதையில் அணிதிரட்டியது பு.ஜ.தொ.மு.

தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக, சமரசமின்றி தொழிலாளர்களுடன் இணைந்து போராடியது; தொழிலாளர்கள் உரிமைக்கான போராட்டங்களைக் கட்டியமைத்து; தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் புரட்சிகர அரசியலைக் கொண்டு சென்றது என இந்த 25 ஆண்டுகள் தொழிலாளர் அரங்கில் பல்வேறு அளப்பரிய பங்களிப்புகளை பு.ஜ.தொ.மு. செய்துள்ளது. புரட்சிகர தலைமையின்கீழ் தொழிலாளர்கள் நடத்திய பல போராட்டங்கள் தமிழ்நாட்டின் தொழிற்சங்கப் போராட்டங்களில் முன்னுதாரணமிக்கவை.

இன்று தமிழ்நாட்டின் தொழிற்சங்க அரங்கிலும் இந்திய முன்னணி தொழிலாளர் அரங்கிலும் பு.ஜ.தொ.மு. என்ற இந்த புரட்சிகர தொழிற்சங்கம் புரட்சிகர அரசியலின் ஒரு முகமாக நீடிக்கிறது என்றால், அதன் பின்னால் எண்ணற்ற தொழிலாளர்கள், தோழர்களின் பங்களிப்பும் தியாகமும் உறுதிமிக்கப் போராட்டங்களும் அடங்கியுள்ளன.

ஒரு புரட்சிகரத் தொழிற்சங்கம் என்ற வகையில் பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகால அனுபவங்களை –  அளப்பரியப் போராட்டங்களைத் தொகுப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணியாகும். அவசியம் கருதி முக்கியமான சில அனுபவங்களையும் போராட்டங்களையும் தொகுத்துள்ளோம்.

பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டினைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், இந்த புரட்சிகரப் போராட்ட அனுபவங்களை ஆயுதங்களாகத் தரித்துக் கொண்டு புதிய நிலைமைகளில் தொழிலாளர்களை அமைப்பாக்க விளையும் எண்ணற்ற தொழிலாளர்களுக்கும் தோழர்களுக்கும் பு.ஜ.தொ.மு.வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பாக புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புரட்சிகரத் தொழிற்சங்கத்தின் உதயம்

இந்திய இடதுசாரி அரசியலைப் பீடித்திருந்த திரிபுவாதம் தொழிலாளர் அரங்கிலும் செல்வாக்கு செலுத்தி வந்த நிலையில், 1970-களில் புரட்சிகர நக்சல்பாரி அரசியல் புதிய தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு வித்திட்டது. பல நகரங்களில் தொழிலாளர்கள் “கெரோ” போன்ற புதிய போர்க்குணமிக்கப் போராட்ட வடிவங்களைப் பின்பற்றினர். திரிபுவாதத் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து புரட்சிகர அரசியலை ஏற்றுக்கொண்டு பல தொழிற்சங்கங்கள் கட்டியமைக்கப்பட்டன.

இருப்பினும், நக்சல்பாரி இயக்கத்தின் இடது சந்தர்ப்பவாதத் தவறுகளால், தொழிலாளர்களை அமைப்பாக்கும் போராட்டங்கள் முடங்கிப் போயின. மீண்டும் திரிபுவாதம் செல்வாக்கு செலுத்திய நிலையில், தமிழ்நாட்டின் தொழிலாளர் அரங்கத்தில், 1990-களின் இறுதியில் புரட்சிகர அரசியலை ஏற்றிருந்த தோழர்களால் புரட்சிகரத் தொழிற்சங்கத்தைக் கட்டியமைப்பதற்கானப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1998 ஏப்ரல் மாதம் 02-ஆம் தேதி, இந்திய தொழிலாளி வர்க்கத்தின் விடிவெள்ளியாக “புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி“ சட்டப்படி பதிவு செய்யப்பட்டது.

1990-களின் துவக்கத்தில், “தொழிலாளர் பிரச்சாரக்குழு” என்கிற பெயரில் சென்னை, கோவை, திருச்சி, நெய்வேலி, ஒசூர் பகுதிகளில் இயங்கி வந்த நிலையில், ஒரு சட்டப்படியான தொழிற்சங்கம் அமைப்பதன் மூலம் இந்திய தொழிற்சங்க இயக்கத்தில் புரையோடிக்கிடந்த பிழைப்புவாதப் போக்கை தளையறுக்கும் பணியை மேற்கொள்வது, 1990-களில் துவங்கிய தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டுவது, புதிய ஜனநாயக அரசியலைத் தொழிலாளர்களிடம் பரவலாக எடுத்துச்சென்று அவர்களது அரசியல் – சித்தாந்த மட்டத்தை உயர்த்துவது ஆகிய நோக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி துவங்கப்பட்டது.

பு.ஜ.தொ.மு.வின் பயணத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். 1998 முதல் 2010 வரையிலான முதலாவது காலகட்டம், 2011 முதல் 2021 பிளவு வரையிலான இரண்டாவது காலகட்டம், 2021 பிளவுக்குப் பிந்தைய இன்றைய காலகட்டம் என மூன்று காலகட்டங்களின் ஊடாக பு.ஜ.தொ.மு. பரிணமித்து வந்துள்ளது.

மறுகாலனியாக்கமும் பார்ப்பன இந்துமதவெறி பாசிசமும் தலைதூக்கிய புதிய அரசியல் சூழலில் பு.ஜ.தொ.மு.வின் தொடக்கம்

உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம், ஐ.எம்.எஃப். ஆகியவற்றின் உத்தரவின் பேரில், நமது நாட்டில் 1990-களில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் மூலமாக முதலாம் கட்ட சீர்திருத்தங்கள், இரண்டாம் கட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தவகையில், மாடர்ன் பிரட் போன்ற பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. விவசாயிகளை விவசாயத்தைவிட்டு விரட்டியடிக்கும் வகையிலான இறால் பண்ணைகள் அமைத்தல், தேக்குப் பண்ணைகள் அமைத்தல், மான்சாண்டோ மரபணு மாற்ற விதைகளுக்கு அனுமதி வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறுதொழில்களை அழிக்கும் வகையில், பல்வேறு பொருட்கள் மீது இருந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்த்தப்பட்டு ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிப்பதற்காக நாடு அகலத் திறந்துவிடப்பட்டது. பொதுத்துறை வங்கிகளில் தனியார் மூலதனத்தை அதிகரிப்பது; எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்கத் தொடங்கியது; விவசாயம், கல்வி, சுகாதாரம், மருத்துவம், சாலை உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளில் இருந்து அரசு மெல்ல ஒதுங்கிக் கொள்வது, அவற்றைத் தனியார்மயமாக்குவது, குடிநீர் உள்ளிட்ட பொதுச்சொத்துகளை வரைமுறையின்றி கொள்ளையடிக்கும் வகையில் கார்ப்பரேட்டுகளை அனுமதிப்பது என புதியவகையிலான அடக்குமுறைகள், சூறையாடல்கள் தொடங்கிவைக்கப்பட்டன.


படிக்க: ஏப்ரல் 02, 2023 : பு.ஜ.தொ.மு வெள்ளிவிழா!


இவற்றின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் இதுகாறும் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்தெடுக்கும் வகையில், “இரண்டாவது தொழிலாளர் ஆணையம்” அமைக்கப்பட்டது. ஏழு தொழிலாளர்கள் சேர்ந்தால் சங்கம் அமைக்கலாம், 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலைகளில் சங்கம் அமைக்கலாம் போன்ற பல உரிமைகளைப் பறித்தெடுக்கும் வகையிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் புகுத்துவது, அயல்பணி எனும் அவுட்சோர்சிங்கை அனுமதிப்பது போன்றவற்றை அறிமுகப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்த இரண்டாவது தொழிலாளர் ஆணையத்தின் பரிந்துரைகள் இந்தியத் தொழிலாளர் மத்தியில் பெரும் எதிர்ப்பலையை உருவாக்கியது.

இதேகாலத்தில், மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் மக்கள் போராட்டங்களைத் திசைத்திருப்பும் வகையில் பார்ப்பன இந்துமதவெறி பாசிஸ்டுகளும் உழைக்கும் மக்களைப் பிரித்தாளும் வகையில் மதவெறியைக் கிளப்பி வந்தனர். 1992-இல் நடந்த பாபர் மசூதி இடிப்பு அதன் ஒரு உச்சகட்ட நடவடிக்கையாகவும் அரசியல் அரங்கில் பார்ப்பன பயங்கரவாதம் தலைதூக்கி வருவதை அறிவிப்பதாகவும் அமைந்தது.

பு.ஜ.தொ.மு.வின் தொடக்கக் காலத்தில் நிலவிய இந்த அரசியல் சூழல், அதன் அரசியல் போராட்டங்களின் திசையைத் தீர்மானித்தது. “மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்”, “பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தை முறியடிப்போம்” ஆகிய மைய முழக்கங்களை முன்வைத்து செயல்படத் தொடங்கியது.

இந்த அரசியல் சூழலின் விளைவாக, புரட்சிகர அரசியலை ஏற்றுக்கொண்டு தொழிலாளர்கள் பலரும் செயல்பட முன்வந்தனர். அவ்வாறு செயல்பட வந்த முன்னணியாளர்களின் முயற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை செயல்பாட்டு எல்லையாகக் கொண்டு அம்பத்தூர் தொழிற்பேட்டையை அடுத்த பாடி பகுதியில் அன்றைய அரசியல் ஆதரவாளரான மாதவன் என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் தென்னங்கீற்று வேய்ந்த குடிசையில் பு.ஜ.தொ.மு. செயல்படத் தொடங்கியது.

ஐந்து பேரைக் கொண்டு தொடங்கப்பட்ட முதல் நிர்வாகக் குழுவில், பொதுச்செயலாளரைத் தவிர வேறு எந்த நிர்வாகிக்கும் தொழிற்சங்க அனுபவம் கிஞ்சித்தும் இல்லாத நிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வந்த அய்யப்பன் குரூப் ஆப் இன்ஞினியரிங் எம்ப்ளாயீஸ் யூனியன் பு.ஜ.தொ.மு.வின் முதலாவது இணைப்புச் சங்கமாக இணைந்தது.


படிக்க: ஏப்ரல் 02, 2023: பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா! | நிகழ்ச்சி நிரல்


அடுத்தடுத்து என்டைஸ் துணி விற்பனையகம், ஸ்பார்டெக் டைல்ஸ், மிண்டா சாய், ஹைதராபாத் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என பல இணைப்புச் சங்கங்கள், கிளைச் சங்கங்களை உருவாக்கியதன் மூலம் பு.ஜ.தொ.மு. திருவள்ளூர் மாவட்டத்தில் காலூன்றத் துவங்கியது. பிற்காலத்தில் பல முன்னணி தொழிற்சங்கத் தலைவர்களை உருவாக்கியது.

அருண் ஐஸ் கிரீம், ஆரோக்கியா பால், ருச்சி எண்ணெய், கெம்பிளாஸ்ட் சன்மார், நெல்காஸ்ட், ஜம்போ பேக் போன்ற ஆலைகளில் கிளைச்சங்கங்களைக் கட்டியமைத்த நிலையில், கோவை என்.டி.சி ஆலையான முருகன் மில்ஸ் ஆலையில் இயங்கத் தொடங்கினோம். கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டினோம். ஒசூரில் கமாஸ் வெக்ட்ரா தொழிற்சங்கமும் அதன் போராட்ட அனுபவங்களும் நமது தொழிற்சங்க அனுபவத்தைச் செழுமைப்படுத்தியது.

சென்னை மண்டலக் குழுவே தொடக்கத்தில் மாநில தலைமைக் குழுவாக செயல்படத் தொடங்கியது. இந்த ‘மாநில’க் குழுவின் வழிகாட்டுதலில் 2006-இல் கோவை மாவட்டத்துக்கான மாவட்ட சங்கமும், 2007-இல் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்கான சங்கமும் கட்டியமைக்கப்பட்டது.

இவற்றின் தொடர்ச்சியாக புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கம், புதிய ஜனநாயகக் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் போன்ற பலவகை தொழிற்சங்கங்கள் கட்டியமைக்கப்பட்டன. ஒப்பந்தத் தொழிலாளர் முறை பெருகிய காலத்தில், காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணி என்கிற துணை அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதில் புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கம் மட்டும் ஜேப்பியார் போன்ற செல்வாக்கு மிகுந்த நபர்களது அடக்குமுறைகளையும் தாங்கிக் கொண்டு உறுதியாக நின்று போராடி வருகிறது. தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச்செயலாளராக இருக்கும் தோழர் சி.வெற்றிவேல் செழியன் அவர்களைப் புரட்சிகர அரசியலுக்கு அர்ப்பணித்தது வாகன ஓட்டுநர்கள் சங்கம்தான்.

போர்க்குணமிக்கப் பொருளாதாரவாதமும் புரட்சிகர அரசியலின் செல்வாக்கும்

நக்சல்பாரி இயக்கத்தில் நிலவிய போர்க்குணமிக்கப் பொருளாதாரவாதம் பு.ஜ.தொ.மு.வின் துவக்கக் கால செயல்பாட்டில் ஆதிக்கம் செலுத்தியது. “ஆலைக்கு ஒரு சங்கம்; வேலைகள் எல்லாம் நிரந்தரம்” என்பது பு.ஜ.தொ.மு.வின் இலக்காக இருந்தது. ஆலைக்கு ஒரு சங்கம் கட்ட வேண்டும் என்கிற முனைப்பானது அரசியலை ஆணையில் வைப்பதை இரண்டாம்பட்சமாக்கியது.

தொடர்ச்சியான ஆரம்ப கால செயல்பாடுகளின் விளைவாக, இந்தப் போர்க்குணமிக்கப் பொருளாதாரப் போராட்டங்களில் இருந்து வெளியேறுவதற்கான முயற்சிகள் தொடங்கின.

தொக்கிநின்ற புரட்சிகர அரசியல் பிடிமானம் அரசியல் முழக்கத்தை நோக்கி தள்ளியது. ”முதலாளித்துவம் கொல்லும்; கம்யூனிசமே வெல்லும்!” என்கிற முழக்கமும் “முதலாளித்துவ பயங்கரவாதம்” என்கிற வரையறுப்பும் பு.ஜ.தொ.மு.வின் அரசியல் பங்களிப்புகளாகும்.

இவைமட்டுமின்றி, உள்நாட்டுப் பிரச்சினைகள், சர்வதேசப் பிரச்சினைகள், ஜனநாயகக் கோரிக்கைகள், அடக்குமுறைகள் மற்றும் உரிமைப் பறிப்புகளை அம்பலப்படுத்துதல் என பலவகையான அரசியல் போராட்டங்களிலும் பு.ஜ.தொ.மு. தலைமையில் தொழிலாளர்கள் போராடியுள்ளனர்.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய சகோதர அமைப்புகளை உள்ளடக்கிய மையப் போராட்டக் கமிட்டியுடன் இணைந்தும், நேரடி தலைமையேற்றும் பல்வேறு போராட்டங்களை நடந்தியிருக்கிறது பு.ஜ.தொ.மு. இதில், மையப்படுத்தப்பட்ட அளவிலான மே தின கிளர்ச்சிகள், நவம்பர் புரட்சி தின விழாக்கள், முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு போன்றவை முக்கியப் பங்களிப்புகளாகும். சகோதர அமைப்புகளுடன் இணைந்து நவம்பர் புரட்சியின் 100-வது ஆண்டு விழா, காரல் மார்க்சின் 200-வது பிறந்த நாள் விழா போன்றவை எழுச்சிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

2015-இல் மக்கள் அதிகாரம் உருவாக்கப்பட்ட பிறகு, அதனுடன் இணைந்தும் தொழிலாளர் அரங்கு சார்ந்த பிரச்சினைகளுக்காகவும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பு.ஜ.தொ.மு.வின் இந்த பிரச்சார இயக்கங்கள், போராட்டங்கள் தொழிலாளர்களைத் தொழிற்சங்க வாதத்தில் இருந்து மீட்டுப் புரட்சிகரப் போராட்டப் பாதையில் அணிதிரட்டியது.

தொடரும்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க