அன்பார்ந்த தொழிலாளர்களே!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (பு.ஜ.தொ.மு) துவங்கப்பட்டு கால் நூற்றாண்டாகிறது. பு.ஜ.தொ.மு 02.4.1998 தனது சட்டபூர்வமான பதிவைத் துவங்கியது. இந்த 25 ஆண்டுகளில் ஒரு புரட்சிகர தொழிற்சங்கமாக தன்னை நிலைநாட்டிக்கொள்ள பு.ஜ.தொ.மு முன்னெடுத்த அரசியல் நடவடிக்கைகள், தொழிலாளி வர்க்கத்துக்கு பாதுகாவலனாக செயலாற்றிய வரலாறு குறித்த பகிர்தல் அவசியமான ஒன்று என கருதுகிறோம். எமது 25 ஆண்டுகாலப் பயணத்தின் நெடுகிலும் சந்தித்த இழப்புகள், அடக்குமுறைகள், நெருக்கடிகள் ஆகிய அனைத்துக்கும் முகம் கொடுத்து ஆசான் லெனின் சொன்ன புரட்சிகர தொழிற்சங்கமாக பரிணமிக்க துணைநின்ற தொழிலாளர்கள், பல்வேறு இணைப்புச் சங்க, கிளைச்சங்க, துணை அமைப்பு மற்றும் சகோதர அமைப்புத் தோழர்கள் அனைவருக்கும் எமது மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
1998 சென்னை பாடியில் ஒரு ஆதரவாளர் வீட்டின் மொட்டைமாடியில் தென்னைகூரை வேய்ந்த ‘அலுவலகத்தில் ஒரே ஒரு இணைப்புச்சங்கத்தைக் கொண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது பல ஆயிரம் தொழிலாளர்களை ஒன்று திரட்டியுள்ளது. திரட்டப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் பு.ஜ.தொ.மு முன்வைத்த அரசியலை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் அல்ல. ஆனால், பெரிய ஜாம்பவான்களை தலைவர்களாக வைத்திருக்கக் கூடிய; முதலாளிகள் எளிதில் அங்கீகரிக்கக் கூடிய, ஆளும் வர்க்க அரசியல் செல்வாக்கு கொண்ட தொழிற்சங்கங்களை நிராகரித்துவிட்டு, நமது தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்க இயக்கத்தில் நிலவுகின்ற வெற்றிடத்தையே இது காட்டுகிறது. சரியான தலைமை அமைந்து விட்டால் அதனை தொழிலாளி வர்க்கம் தன்னுடையதாக்கிக் கொள்ளும் என்கிற வரலாற்று அனுபவத்தையே இவை உணர்த்துகின்றன. தொழிலாளி வர்க்கத்தின் அடிஆழம் வரை சென்று அவர்களை ஒன்றுதிரட்டும் வரலாற்றுக் கடமையை எமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.
பு.ஜ.தொ.மு ஆரம்பிக்கப்படுவதற்கான காரணமாக இருந்த நிலைமைகள் இன்று உச்சத்தை அடைந்திருக்கிறது. 1990 துவக்கத்தில் நரசிம்மராவ் மன்மோகன்சிங் கும்பல் புதிய பொருளாதரக் கொள்கையின் உச்சமாக ‘‘காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் விளைவாக தனியார்மயம் – தாராளமயம் உலகமயம் என்கிற புதிய தாராளவாதக் கொள்கை அமலாக்கப்பட்டு மறுகாலனியாக்கம் என்கிற திசையில் பயணிக்கத் துவங்கியது. 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க கும்பல் (பார்ப்பன) இந்துமதவெறி பாசிச அரசியலை தீவிரமாக்கிக் கொண்டிருந்தது. இந்த சூழலில், தொழிலாளி வர்க்கத்தை மறுகாலனியாக்கத்துக்கு எதிராகவும், (பார்ப்பன) இந்துமதவெறி பாசிசத்துக்கு எதிராகவும் அணிதிரட்டுவதை உடனடி நோக்கமாக வைத்து பு.ஜ.தொ.மு களம் கண்டது.
தனியார்மயமாக்கல் கொள்கை காரணமாக பொதுத்துறைகள் விற்கப்பட்டன. தாராளமயமாக்கல் கொள்கையை முன்னிறுத்தி தொலைத்தொடர்பு, காப்பீடு போன்ற துறைகளில் அரசின் ஏகபோகம் ஒழிக்கப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு போட்டியாக தனியார் மூலதனம் அனுமதிக்கப்பட்டது. உலகமயமாக்கல் கொள்கையானது பன்னாட்டு மூலதனத்தின் பாய்ச்சலுக்கு வித்திட்டது. பல புதிய உற்பத்திப் பிரிவுகளும், சேவைத்துறைகளும் கடைவிரிக்கத் தொடங்கின. இந்தியாவின் விவசாய பூமியும், இயற்கை வளங்களும் கார்ப்பரேட் கொள்ளைக்கு பலியிடப்பட்டன. இதற்கு இணையாக இந்தியாவின் மனிதவளம் மலிவான ‘விலைக்கு தயார் செய்யப்பட்டது. விவசாயம், சிறுவணிகம், சிறுதொழில்கள் ஆகிய வாழ்வாதார அடித்தளங்கள் பலியிடப்பட்டு, இலட்சக்கணக்கான அளவில் உழைப்பாளிகள் உழைப்புச் சந்தைக்கு தள்ளப்பட்டனர். இவர்கள் தான் பு.ஜ.தொ.மு ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் நாங்கள் சந்தித்த புதிய வகைப்பட்ட தொழிலாளர்கள்.
இலட்சக்கணக்கில் வேலைதேடி குவிந்த, குறைவான கூலிக்கு தயாராக இருந்த, எந்த உரிமையும் இல்லாத இந்த நவீன கொத்தடிமைகள் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு தேவைப்பட்டார்கள். காலனியாதிக்க காலகட்டத்தில் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் அளப்பரிய தியாகத்தின் விளைபொருளான தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக்கட்ட இரண்டாவது தொழிலாளர் நல ஆணையம் உருவாக்கப்பட்டது. அதன் நீட்சிதான் இன்று ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க; அம்பானி அதானி பாசிசம் அமலாக்கி வருகின்ற 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகள். ஏற்கனவே பெயரளவில் இருந்த 44 சட்டங்களை ஒழித்து, அவற்றை 4 தொகுப்புகளாக்கி தொழிலாளி வர்க்கத்தை உரிமைகள் ஏதுமற்ற அத்துக்கூலிகளாக்கும் 4 சட்டத்தொகுப்புகளும் அமலாக துவங்கியுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் துவங்கிய எமது பயணம் கோவை, ஓசூர், திருச்சி, வேலூர் என பல்வேறு தொழில்துறை மையங்களில் காலூன்றி வருகிறது. மேற்சொன்ன அரசியல் சூழல் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எமது 25 ஆண்டு கால பயணத்தில் கையாண்டிருக்கிறோம். 1999 மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் படுகொலைக்கு எதிராக மேற்கொண்ட பிரச்சார இயக்கம் முதலாவது மைய அரசியல் இயக்கமாக இருந்தது. டெல்லி மாருதி தொழிலாளர்களும் கோவை பிரிக்கால் தொழிலாளர்களும் தொழிற்சங்கம் ஆரம்பித்ததை முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியாமல் அடக்குமுறையை ஏவிவிட்டபோது போலீசு உள்ளிட்ட மொத்த அரசு எந்திரமே முதலாளிகளுக்கு அரணாக நின்றது. தொழிற்சங்க முன்னணியாளர்கள் வேட்டையாடப்பட்டனர். எச்.ஆர். அதிகாரிகளை கொன்றதாக கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு மாருதி தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு ஆயுள் தண்டனையும், பிரிக்கால் சங்க நிர்வாகிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மாருதி மற்றும் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துணைநின்று வருகிறோம். சுனாமி, 2015 பெருவெள்ளம் ஆகியவற்றின்போது வெகுமக்களுக்கு துணையாக நின்றிருக்கிறோம்.
உலகமயமாக்கல் விளைவாக புற்றீசல் போல கிளம்பிய பன்னாட்டு நிறுவனங்களான நோக்கியா, BYD போன்றவை மூடப்பட்டபோது வாழ்வாதாரத்துக்காகப் போராடிய தொழிலாளர்களுக்கு துணை நின்றோம். அதனால் எமது முன்னணி தோழர் ஆ.கா.சிவா குண்டர் சட்டத்தில் சிறைபட்டார். கோவையில் முதலாளிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்த இன்னொரு முன்னணியாளரான காலஞ்சென்ற தோழர் விளவை.இராமசாமியும் குண்டர் சட்டத்தில் குறிவைக்கப்பட்டார். போராடும் தொழிலாளர்கள் எந்த சங்கத்தின் தலைமையை ஏற்றிருந்தாலும் எவ்வித தயக்கமும் இல்லாமல் துணை நின்றோம். இப்போதும் அதை தொடர்கிறோம்.
எமது 25 ஆண்டுகால பயணத்தில் நூறுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உருவாக்கினோம். அவற்றில் கணிசமான ஆலைகளில் தொழிற்சங்கங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டன. எமது தொழிலாளர்களை அமைப்பாக்கும்போதே பொருளாதார கோரிக்கைகளை நிறைவேற்றும் பொறுப்போடு, அந்த தொழிலாளர்கள் ஏனைய போராடும் தொழிலாளர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்கிற கடமையையும் சேர்த்தே உறுதி செய்கிறோம். அந்த உணர்வு தான் பு.ஜ.தொ.மு – வின் பலம். அந்த உணர்வு தான் எமது தலைமையை ஏற்கின்ற தொழிலாளர்களை ஒன்றிணைத்திருக்கிறது. ஒருவருக்கு ஆதரவாக இன்னொருவர் துணை நின்று போலீசின் தாக்குதல், சிறை, வேலை இழப்பு ஆகியவற்றை சந்தித்திருக்கிறார்கள். வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
திருநின்றவூரின் டி.ஐ.மெட்டல் ஃபார்மிங், திருப்பெரும்புதூர் ஹனில் டியூப்ஸ், இண்டெக்ரா, கெஸ்டாம் சுங்வூ ஹைடெக் (GSH) அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஈசாப், பிரஸ்பார்ம், சாய்மிர்ரா, திருவள்ளூர் காக்களூர் தொழிற்பேட்டையில் மிண்டாசாய், பொன்னேரி வட்டாரத்தில் நெல்காஸ்ட், ஜம்போ பேக், கெம்பிளாஸ்ட சன்மார், பெரியபாளையத்தை ஒட்டிய ருச்சி ஆயில், HIL, கும்மிடிப்பூண்டியில் எஸ்.ஆர்.எப்., காஞ்சிபுரத்தை அடுத்த செய்யார் ஆக்சில்ஸ், பூவிருந்தவல்லி தூசான் பவர் சிஸ்டம்ஸ், ஓசூரில் கமாஸ் வெக்ட்ரா, குமி, குளோபல் ஃபார்மாடெக், கோவையில் சி.ஆர்.ஐ.பம்ப்ஸ், சென்னையில் ஐ.டி ஊழியர் பிரிவு, ஜேப்பியாரின் சத்தியபாமா மற்றும் ஏனைய பொறியியல் கல்லூரிகள்… இவை எல்லாம் போராட்டக்களத்தின் சில வகைமாதிரிகள். சிலவற்றில் வென்றோம், சிலவற்றில் பயின்றோம். ‘‘முதலாளித்துவ பயங்கரவாதம் என்கிற வரையறையும், ‘‘முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!! என்கிற முழக்கமும் பு.ஜ.தொ.மு. அரசியல் பங்களிப்புகள்.
இந்திய தொழிலாளி வர்க்க வரலாற்றில் ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டியது நமது அமைப்பின் இன்னுமொரு முக்கிய பங்களிப்பாகும். ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய பஞ்சாலைக்கழக (NTC) ஆலைகளில் தனித்தனி தொழிற்சங்க அமைப்புகள் இருந்தாலும் கூட்டுப்பேர உரிமை அற்றவைகளாக இருந்தபோது, நீதிமன்ற உத்தரவின் மூலமாக அங்கு கூட்டுப்பேர உரிமையை நிலைநாட்டினோம்.
தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை தொழிற்சங்கங்களின் ஒற்றுமையோடு பின்னிப் பிணைந்திருப்பதை நாமறிவோம். ‘‘ஆலைக்கு ஒரு சங்கம்; வேலைகள் அனைத்தும் நிரந்தரம் என்பது எமது முழக்கம். ஆனாலும், ஆளும்வர்க்க சங்கங்களான ஐ.என்.டி.யு.சி., பி.எம்.எஸ், அண்ணா தொழிற்சங்க பேரவை தவிர மற்ற எல்லா மத்திய சங்கங்களுடன் நிபந்தனையோடு ஒன்றுபட்டு நிற்க முயன்றோம். நாம் முன்னெடுத்த அரசியல் அந்த ‘மத்திய‘ சங்கங்களுக்கு ஒவ்வாதவையாக இருந்ததால் நம்மிடமிருந்து விலகிச் சென்றன. ஆனாலும், கடந்த 15 ஆண்டுகளாக அவை முன்னெடுத்த அனைத்து நாடு தழுவிய வேலை நிறுத்தங்களிலும் பங்கேற்று வருகிறோம். தற்போது அகில இந்திய அளவில் ஒத்த கருத்துடைய தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டமைப்பின் (MASA) ஒரு அங்கமாக இயங்கி வருகிறோம்.
2021 பு.ஜ.தொ.மு ஒரு பிளவை சந்தித்தது. எமது அமைப்பை அரசியல்ரீதியாக சீர்குலைத்து, பதிவு செய்யப்பட்ட மண்டல அளவிலான சங்கங்களை டம்மியாக்கி தலைமையை கைப்பற்றும் நோக்கத்தை எதிர்த்து உள்ளுக்குள் போராடினோம். அதன் விளைவாக எமது மாநில ஒருங்கிணைப்புக்குழு உருவானது. எமது அமைப்பின் 25 ஆண்டுகால பயணத்தின் துவக்க கட்டத்தில் பொருளாதாரவாதமே எம்மிடம் மிகுந்திருந்தது. இதனை களைந்து தொழிலாளி வர்க்கத்தை அரசியல்ரீதியாக வளர்க்கவும், அமைப்புரீதியாக அணி திரட்டவும் முன்முயற்சியுடன் செயலாற்றி வருகிறோம். தொழிலாளர் சட்டங்களை ஒழித்துவிட்டு காண்டிராக்ட் வேலைமுறை, வேலைநேரம் அதிகரிப்பு, பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளை திணிக்கும் அனைத்துக்கும் எதிராகவும், காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் துலக்கமான குறியீடான ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க; அம்பானி அதானி பாசிசத்துக்கு எதிராகவும் போராட உறுதியேற்கிறோம். எமக்கு துணைநிற்க அறைகூவி அழைக்கிறோம்.
வெள்ளிவிழா அரங்கக்கூட்டம்
தேதி: 02.4.2023 காலை 9.30 மணி
இடம் : SD மஹால், பட்டாபிராம்,சென்னை -72
அனைவரும் வாரீர்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்புக்குழு.
தொடர்புக்கு : ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
செல் : 73974 04242
👍