ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 4

2009-இல் கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் மீது கொலைப்பழி சுமத்தி அரசும், முதலாளிகளும் தொழிற்சங்கத் தலைவர்களை வேட்டையாடியபோது “அஞ்ச வேண்டாம்!” என துணிவூட்டி முன்னெடுத்த பிரச்சார இயக்கம் தொழிலாளர்களுக்கு துணிவையும், நம்பிக்கையையும் ஊட்டியதைக் காண முடிந்தது.

முதலாளித்துவ அடக்குமுறைகள்தான் பயங்கரவாதம்,
அதற்குகெதிரான போராட்டங்கள் வன்முறை அல்ல

2011-இல் மாருதி தொழிலாளர்கள் தங்களது ஒற்றுமை மிகுந்த போராட்டங்களின் மூலம் தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டினார்கள். மாருதி தொழிலாளர்களது அனுபவம் இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. அதே காலகட்டத்தில் அமெரிக்காவின் உழைக்கும் மக்கள் “நாங்கள் 99%; முதலாளிகள் வெறும் 1%தான். 99% பேருக்கான உரிமையை வெல்வோம்” என வால்ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். “மாருதி தொழிலாளர் மற்றும் வால் ஸ்ட்ரீட் முற்றுமைப் போராட்டங்களிலிருந்தும் கற்போம்” என்கிற முழக்கத்துடன் பு.ஜ.தொ.மு. பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது.

பு.ஜ.தொ.மு.வின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. அந்த நம்பிக்கை தானாக உருவாகவில்லை. தொடர்ச்சியான போராட்ட-பிரச்சார இயக்கங்களினூடாக உருவாக்கப்பட்டது.

2009-இல் கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் மீது கொலைப்பழி சுமத்தி அரசும், முதலாளிகளும் தொழிற்சங்கத் தலைவர்களை வேட்டையாடியபோது “அஞ்ச வேண்டாம்!” என துணிவூட்டி முன்னெடுத்த பிரச்சார இயக்கம் தொழிலாளர்களுக்கு துணிவையும், நம்பிக்கையையும் ஊட்டியதைக் காண முடிந்தது.

அதேபோல 2012-இல் டெல்லி மனேசரில் உள்ள மாருதியின் இன்னொரு ஆலையில் தொழிலாளர்களை இழிவுபடுத்திய அதிகாரிகளைக் கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். ஆலையில் போலீசு அதிரடியாக நுழைந்தது. திடீரென ஆலையில் தீப்பிடித்தது. அவனேஷ் குமார் தேவ் என்கிற எச்.ஆர். அதிகாரி மர்மமான முறையில் எரிந்து கிடந்தார். தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும், எஞ்சிய தொழாளர்கள் மீதும் கொலைப்பழி விழுந்தது. தொழிலாளர்கள் வேட்டையாடப்பட்டனர். அந்த நேரத்தில் “எது வன்முறை? யார் வன்முறையாளன்?” என்கிற தலைப்பில் பு.ஜ.தொ.மு. தலைமையில் மாநிலந் தழுவிய இயக்கம் எடுக்கப்பட்டது.


படிக்க: ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 1


2009-2012 ஆண்டு காலகட்டத்தில் டெல்லி கிராசியானோ, புதுவைக்குட்பட்ட ஏனாம் பகுதியில் ரீஜென்சி டைல்ஸ், கோவை பிரிக்கால், டெல்லி மாருதி என பல ஆலைகளில் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் சில சமயத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைச் செயல்களை நிர்வாகமே அரங்கேற்றின என்பதே உண்மை. இந்த சதிகளை பு.ஜ.தொ.மு அம்பலப்படுத்தியது. தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது.

இதைக் கண்டஞ்சிய முதலாளிகள் சங்கம் பு.ஜ.தொ.மு.வை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை நிர்ப்பந்தித்தனர். இதை சில ஆங்கிலப் பத்திரிக்கைகள் முன்னுரிமை கொடுத்து பிரசுரித்தன. முதலாளிகள் சங்கத்தின் தென்னிந்திய அமைப்பு பு.ஜ.தொ.மு.வை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை நிர்ப்பந்தித்தது. இதைக் கண்டித்து உடனடியாக ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் முதலாளிகள் சங்கத்தின் தீய உள்நோக்கத்தை அம்பலப்படுத்தியதன் விளைவாக தடை பிரச்சினை முடிவுக்கு வந்தது.

ஐ.டி. தொழிலாளர்களை சங்கமாக்கிய அனுபவம்

கிட்டத்தட்ட 50 லட்சம் ஊழியர்கள் பணி செய்யக்கூடிய ஐ.டி துறை ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை இல்லாமல் கொத்துக் கொத்தான வேலை இழப்புகளை சந்தித்து வந்தனர். வேலை இழப்புக்குள்ளான தொழிலாளிகள், தொழிலாளர் சட்டங்களின் கீழ் உரிமை கோர முடியாமல் இருந்தனர். தப்பித்தவறி ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பான “நாஸ்காம்“ அந்த ஊழியர்களை கருப்பு பட்டியலில் வைத்தது. இதனால் அந்த ஊழியர்கள் வேறு எங்கும் வேலைக்குச் செல்ல முடியாத அளவுக்கு அச்சமூட்டப்பட்டிருந்தனர்.

இதை உடைத்தெறிந்து, ஐ.டி ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தும் என்கிற அறிவிப்பை தமிழ்நாடு அரசு 2016-இல் வெளியிட பு.ஜ.தொ.மு. காரணமாக இருந்தது. அதற்கு முன்னதாக பு.ஜ.தொ.மு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஐ.டி ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்துமா என்பது குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இவ்வாறு நீதமன்றம் உத்திரவிட்ட பின்னரும் தமிழ்நாடு அரசு எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தபோது, பு.ஜ.தொ.மு. தொடர்ச்சி கொடுத்து அரசிடம் போராடியதன் விளைவாக, ஐ.டி ஊழியர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமைப் பெற்றுதரப்பட்டது.


படிக்க: ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 2


ஐ.டி. தொழிலாளர்களை அமைப்பாக்கும் நோக்கத்தில், பு.ஜ.தொ.மு. மேற்கொண்ட இந்தப் போராட்டமானது முன்னுதாரணமிக்கதாகும். குறிப்பாக, 2015-இல் டி.சி.எஸ். நிறுவனத்தில் சுமார் 25,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிர்வாகம் முயற்சி செய்தபோது “ஆட்குறைப்பை எதிர்ப்போம்” (Combat Layoff) என்கிற முழக்கத்தின் கீழ் பு.ஜ.தொ.மு. பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது. ஐ.டி நிறுவனங்கள் குவிந்துள்ள சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் காலை 7 மணிக்கே 20-30 முன்னணி தோழர்கள் சிக்னலில் நின்று கொண்டிருக்கும் ஐ.டி நிறுவனப் பேருந்துகளில் பிரசுரம் விநியோகித்ததும், ஆலை வாயிலில் நின்று பிரச்சாரம் செய்ததும், படூர் பகுதியில் ஒரு அரங்கு கூட்டம் நடத்தியதும் ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டிய முன்னுதாரணமிக்க முயற்சிகளாகும்.

இதுகுறித்த செய்திகள் பல ஆங்கில செய்தி தாள்களில் வெளிவந்தன. சன் டிவி, புதிய தலைமுறை ஆகியவை பு.ஜ.தொ.மு.வை தங்கள் விவாத மேடைக்கு அழைத்தன.

ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வரும் பொருளாதாரவாதத்தினால், ஐ.டி ஊழியர் பிரிவில் கொத்துக்கொத்தாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டாலும், சில மாதங்களில் சோர்ந்து போனதைக் கண் முன்னே காணமுடிந்தது. தற்சமயம் நாடு தழுவிய அளவில் ஐ.டி ஊழியர் சங்கங்கள் இருந்தாலும் அவற்றின் ஒட்டுமொத்த உறுப்பினர் எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டாமல் இருப்பதும், சட்டவிரோத வேலைபறிப்பு பல்லாயிரக்கணக்கில் இருந்தபோதும் மயான அமைதி நிலவுவதும் தொழிற்சங்கவாதத்தின் தோல்வியே என்பதை பு.ஜ.தொ.மு.வின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

தொழிலாளர் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து

பு.ஜ.தொ.மு.வின் தொழிற்சங்கப் போராட்ட நடவடிக்கைகள், தொழிலாளர்களைத் தமது சொந்த அமைப்பு பிரச்சினைகளோடு முடங்கிவிடவில்லை. தமக்கு மட்டுமின்றி, முதலாளித்துவ பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுகின்ற, அடக்கப்படுகின்ற தொழிலாளர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவைத்தது. சங்கம் செயல்பட்ட பகுதிகளில் அன்றாடம் நடந்த தொழிலாளர் மீதான அடக்குமுறைகளுக்கு பு.ஜ.தொ.மு. தெரிவித்த எதிர்ப்புகள் அதற்குச் சான்றுகளாகும். நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளியை பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது முதல் பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பட்டங்களை பு.ஜ.தொ.மு. நடத்தியுள்ளது.

நிறுவனரீதியாக தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முதலாளித்துவ, அரச அடக்குமுறைகளை எதிர்த்து பு.ஜ.தொ.மு. அமைப்புரீதியாக மாநிலம் தழுவிய அளவில் இயக்கம் எடுத்து தொழிலாளர் ஒற்றுமைக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.

மாருதி தொழிலாளர் போராட்டத்தில் பொய் வழக்கு போடப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணியாளர்கள் 148 பேரில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மத்திய தொழிற்சங்கங்கள் கண்டன இயக்கம் எடுத்தன. பு.ஜ.தொ.மு சார்பிலும் 2017 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் “மாருதி தொழிலாளர் சிறை மீட்பு இயக்கம்“ மேற்கொள்ளப்பட்டது.


படிக்க: ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 3


2009-இல் கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது ராய் ஜார்ஜ் என்கிற எச்.ஆர். அதிகாரி மர்மமான முறையில் செத்துப்போனதை ஒட்டி 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர், பலர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. இதில் எட்டு தொழிலாளர் தோழர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து ஜனவரி 2016-இல் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு தொழிலாளர் ஒற்றுமைக்கு தோள்கொடுக்கப்பட்டது. கோவையில் அனைத்து மத்திய சங்கங்களுடன் இணைந்து கண்டன இயக்கம் எடுக்கப்பட்டது.

இதைப்போலவே, என்ஃபீல்டு தொழிலாளர்கள் போராட்டம், பேருந்து தொழிலாளர்கள் போராட்டம், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக அறிவிக்கப்படும் நாடுதழுவிய வேலைநிறுத்தங்கள் என பலவகையிலும் பு.ஜ.தொ.மு. தொடர்ந்து தனது கருத்துகளை எடுத்துச் சென்று அத்தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளது. மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த 15 ஆண்டுகளாக முன்னெடுத்துவருகின்ற அகில இந்திய வேலைநிறுத்தங்கள் அனைத்திலும் பு.ஜ.தொ.மு. பங்கேற்றுள்ளது.

தொழிலாளர் ஒற்றுமைக்காக பிற மாநில தொழிற்சங்கங்களுடன் இணைந்த நடவடிக்கைகள்

மும்பை எதிர்ப்பியக்கம் 2004-இல் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அதுமட்டுமின்றி பல்வேறு வகைகளில் அகில இந்திய அளவில் புரட்சிகர அரசியலுக்கு நெருக்கமான தொழிற்சங்கங்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு. பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளது.

2000 ஆண்டுகளின் துவக்கத்தில் பு.ஜ.தொ.மு.வுடன் கைகோர்த்த இஃப்டு சங்கத்துடன் என்.டி.யு.ஐ. (NTUI – New Trade Union Initiative) என்கிற இன்னொரு மத்திய சங்கமும் இணைந்து கொண்டது. இன்னும் சில பகுதியளவு சங்கங்கள் பு.ஜ.தொ.மு.வுடன் இணைந்தன. இதன்மூலம் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்யும் வாய்ப்பு உருவானது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை நெய்வேலியைத் தவிர வேறு சுரங்கங்கள் இல்லாத நிலையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத் தொழிலாளர் மத்தியில் அவர்களை அமைப்பாக்கும் வேலையில் பு.ஜ.தொ.மு. மேற்கொண்டது.

ஒப்பீட்டளவில் பரந்த வேலைப் பகுதிகளைக் கொண்ட மேற்குறித்த சங்கங்களுடன் இணைந்து “சர்வதேச சுரங்கத் தொழிலாளர் மாநாடு” 2017-இல் ஆந்திர மாநிலம் வாரங்கல் நகரில் நடக்க பு.ஜ.தொ.மு. துணை நின்றது. சுமார் ஐந்து நாட்கள் மாநாட்டுப் பகுதியில் தங்கி இருந்து, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த சுரங்கத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் பு.ஜ.தொ.மு. தோழர்கள் விவாதித்தனர்.

மாநாட்டுக்கு முன்னதாக நடந்த பேரணியில் சுமார் தமிழ்நாட்டில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு பு.ஜ.தொ.மு.வின் செங்கொடியை உயர்த்திப் பிடித்து விண்ணதிர முழக்கமிட்டனர். பொதுக்கூட்ட உரை, பொது மாநாட்டு உரை, குறிப்பிட்ட தலைப்புகளில் நடந்த ஆய்வரங்க உரை ஆகியவற்றை திறம்பட செய்து முடித்தனர். மாநில நிர்வாகக்குழுவின் இரண்டு நிர்வாகிகளைத் தவிர ஏனைய அனைவரும் இரண்டாம் மட்ட தோழர்கள்தான். ஆனாலும், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழி பேசும் பிரதிநிதிகளிடம் அவர்களது மொழியிலும் ஸ்பானிஷ், பிரெஞ்ச் மொழி பேசியவர்களிடம் மொழிபெயர்ப்பாளர் மூலமாகவும் விவாதித்த அனுபவம் செழுமையானது. சர்வதேச சுரங்கத்தொழிலாளர் கூட்டமைப்பின் இந்தியப் பிரதிநிதிகள் ஐவரில் பு.ஜ.தொ.மு. தோழரும் தேர்வு செய்யப்பட்டார்.

அகில இந்திய அளவில் பு.ஜ.தொ.மு.வின் செயல்பாட்டை எடுத்துச் செல்வதில் இஃப்டு அமைப்பு பு.ஜ.தொ.மு.வுக்கு தோழமைரீதியாக துணையாக இருந்தது. 2012-இல் ஆந்திரமாநிலம் எலூரு-விலும் 2016 ஆம் ஆண்டில் கொல்கத்தாவிலும் அவர்கள் நடத்திய அகில இந்திய மாநாட்டில் பு.ஜ.தொ.மு. தோழர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இஃப்டு அமைப்பின் அடுத்த முயற்சி காரணமாக என்.டி.யு.ஐ. அமைப்புடன் இணைந்து காண்டிராக்ட் தொழிலாளர்களது பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடு தழுவிய இயக்கங்கள் எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஜனவரி 2018-இல் “கழுத்தை நெறிக்கும் காண்டிராக்ட் முறைக்கு முடிவுகட்டுவோம்!” என்கிற உள்ளடக்கத்தில் சென்னை எழும்பூரில் ஒரு முழுநாள் கருத்தரங்கமும், மாலையில் ஆவடி மாநகரில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.

முழுக்கமுழுக்க பு.ஜ.தொ.மு பொறுப்பேற்று நடத்திய கருத்தரங்கமும் – பொதுக்கூட்டமும் சுரங்கத் தொழிலாளர்களை அமைப்பாக்கும் நோக்கத்தில் மேற்கொண்ட போராட்டங்களும் அகில இந்திய தொழிலாளர் ஒற்றுமைக்கும் அதன்வழியே உலக அளவிலான தொழிலாளர் ஒற்றுமைக்கும் மேற்கொண்ட போராட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.

தொடரும்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க