ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 2

முதலாளிகள் என்பவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான வர்க்கப் பகை கொண்டவர்கள் என்பதையும் “தொழிற்சங்கவாதம்” என்பது தொழிலாளர்களை முதலாளிகளுக்கு கொத்தடிமைகளாக்குவதாகும் என்பதையும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் உணர்த்தும் வகையில், “முதலாளி என்பவன் யார்?” என்ற தலைப்பில் இயக்கங்கள் கட்டியமைக்கப்பட்டன.

ஏப்ரல் 02, 2023, பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு!

தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதில்
புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்!

பகுதி 2

மாஞ்சோலைப் படுகொலை

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாம்பே-பர்மா டிரேடிங் கம்பெனியில் பணிபுரிந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 30 ரூபாய் கூலி உயர்வு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றதற்காக, ஜூலை 23, 1999-இல் திமுக அரசால் தாக்குதல் நடத்தப்பட்டு 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் சிறைவைக்கப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலைக்கூட ஒரே இடத்தில் புதைக்க அனுமதிக்கவில்லை அன்றைய திமுக அரசு.

இச்சூழலில், பு.ஜ.தொ.மு. ஒரு தொழிலாளர் வர்க்க அமைப்பு என்கிற முறையில் முன்னெடுத்த முதல்  இயக்கம் 1999-இல் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாத்தின் பின்னால் இருந்த ஆளும் வர்க்க நலன்களை அம்பலப்படுத்திய இயக்கமாகும். சென்னை துறைமுகம் ரயில் நிலையம் எதிரில் இரண்டாவது கடற்கரை சாலையில் உள்ள ஏ.கே.நாயக் பவனில் இப்படுகொலையை அம்பலப்படுத்தி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான வழக்கறிஞர் திரு.பி.வி.பக்தவத்சலம் அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு விபரங்கள், புகைப்படங்கள், காணொலிகளை சேகரித்து தொகுப்பாக்கி சென்னை அண்ணா சாலையில் இருந்த ஆனந்த் திரையரங்கின் சிறிய அரங்கம் ஒன்றில் பு.ஜ.தொ.மு.வால் வெளியிடப்பட்டது. பல தொழிற்சங்கங்கள் வெற்று அறிக்கைகள் வெளியிட்ட நேரத்தில், பு.ஜ.தொ.மு.வின் இந்த முயற்சிகள் தொழிலாளர்களின் அவலநிலையையும் அவர்களது தரப்பிலான நியாயத்தையும் பொதுவெளிக்குக் கொண்டுவந்தது.

இரண்டாவது தொழிலாளர் ஆணையம்

உலக வர்த்தக கழகத்தின் கட்டளைக்கு அடிபணிந்து தனியார்மய தராளாமய உலகமயமாக்கலை தீவிரமாக அமல்படுத்திய வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு இதற்கேற்ப தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி அமைக்க, 2000-ஆம் ஆண்டில், இரண்டாவது தேசிய தொழிலாளர்  ஆணையத்தை அமைத்தது. இது தொழிலாளிகள் போராடி பெற்ற உரிமைகளை குழி தோண்டி புதைக்கும் பாசிச நடவடிக்கையாகும் என்பதை பு.ஜ.தொ.மு. பிரச்சார இயக்கமாக முன்னெடுத்தது.

இப்பிரச்சார இயக்கத்தின் ஒரு அங்கமாக பு.ஜ.தொ.மு. கொண்டுவந்த வெளியீடு பல்லாயிரக்கணக்கில் தொழிலாளர்கள் மத்தியில் வினியோகம் செய்யப்பட்டது. மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அம்பத்தூரில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் அபாயத்தை தொழிலாளர்களுக்கே தெரிவிக்காமல், முன்னணியாளர்கள் மட்டும் பேசிவந்த தொழிற்சங்கவாதம் செல்வாக்கு செலுத்திய அக்காலத்தில், பு.ஜ.தொ.மு.வின் இந்த முயற்சியானது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பு.ஜ.தொ.மு.வை அறியச் செய்தது.

புரட்சியாளர் கஜூரோல் பாதுகாப்பு இயக்கம்

2003-இல் நேபாளப் புரட்சியாளர் தோழர் கஜூரோல் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தினமே “நேபாள புரட்சியாளர் தோழர் கஜூரேலை விடுதலை செய்!“ என நீதிமன்ற வளாகத்தில் கூடி பு.ஜ.தொ.மு. மற்றும் தோழமை அமைப்பின் தோழர்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து “தோழர் கஜூரோல் உயிர் பாதுகாப்பு குழு” உருவாக்கப்பட்டது. அதில் தன்னார்வக் குழுக்கள் உள்ளே புகுந்து கூட்டமைப்பின் நிகழ்ச்சிநிரலை திசை திருப்பியதன் காரணமாக 2004-இல் பு.ஜ.தொ.மு. கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. ஆனாலும், கஜூரோல் விடுதலையை முன்னிறுத்தி தனியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


படிக்க: ஏப்ரல் 02, 2023: பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா! | நிகழ்ச்சி நிரல்


தோழர் கஜூரோல் மூன்றாண்டு சிறைத்தண்டனைக்குப் பிறகு நேபாளத்துக்கு இரவோடு இரவாக அனுப்பி வைக்கப்பட்டார். நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் 2008-இல் அவர் சென்னைக்கு வந்தபோது, சகோதர அமைப்புகளுடன் இணைந்து பு.ஜ.தொ.மு. அங்கம் வகித்த “இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்“ சார்பில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி அதில் தோழர் கஜூரோலுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இவை அனைத்தும் மன்னராட்சிக்கு எதிரான நேபாளப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டங்களுக்கு நமது மாபெரும் பங்களிப்புகளாகும்.

சோசலிசமே மாற்று

அகில இந்திய அளவில் அமைப்பை எடுத்துச் செல்லும் வகையில், ஆந்திரா உள்ளிட்டு பல மாநிலங்களில் இயங்கி வந்த ஐ.எஃப்.டி.யூ. (இஃப்டு – IFTU – Indian Federation of Trade Unions) என்கிற அமைப்புடன் இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டது. இந்த சூழலில், 2004-இல் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான “உலக சமூக  மன்றம்” (உ.ச.ம. – World Social Forum) மும்பையில்  ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தியது. “முதலாளித்துவத்துக்கு மூன்றாம் மாற்று சாத்தியமே!” என்கிற கருப்பொருளில் அந்த மாநாட்டை நடத்தியது. உலகெங்கும் உள்ள பல வண்ண திரிபுவாத, போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும், இந்திய போலிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்தின.

இதற்கு எதிராக பு.ஜ.தொ.மு.வும், இஃப்டு அமைப்பும் இணைந்து, மும்பை மாநகரிலேயே எம்.ஆர். 2004 (மும்பை எதிர்ப்பு 2004 – Mumbai Resistance 2004) என்கிற பெயரில் பிரச்சார இயக்கத்தை நடத்தினோம். சுமார் 10 நாட்கள் பு.ஜ.தொ.மு. முன்னணியாளர்கள் மும்பை தாதரில் தங்கி, மாநாடு நடந்த கொரேகான் பகுதிக்கு தினமும் சென்று பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்திக் காட்டினோம். இதில் பு.ஜ.தொ.மு.வின் செயல்பாடுகள் உற்சாகமூட்டுவதாக இருந்தன. இஃப்டு அமைப்பினர் கடைசி நாள் அன்று நடக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிநிரலில் மட்டுமே கவனம் செலுத்திய நிலையில் பு.ஜ.தொ.மு. தோழர்கள் உ.ச.ம. மாநாட்டுக்கு வந்திருந்த பல்வேறு நாடுகளின் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளது பிரதிநிதிகளான  நூற்றுக்கணக்கானவர்களிடம் “முதலாளித்துவத்துக்கு மாற்று சோசலிசமே அன்றி வேறு ஏதோ மூன்றாவது மாற்று இருப்பதாக சொல்வது மோசடியானது” என வாதிட்டு பிரச்சாரம் செய்தனர். “முதலாளித்துவத்துக்கு சோசலிசமே மாற்று” என்பதை வலியுறுத்தும் வகையில், பு.ஜ.தொ.மு. தோழமை அமைப்புகளின் பெயரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.


படிக்க: ஏப்ரல் 02, 2023 : பு.ஜ.தொ.மு வெள்ளிவிழா!


இந்தி தெரியாமல், அரைகுறை ஆங்கிலத்தில்தான் பு.ஜ.தொ.மு. தோழர்கள் உரையாற்றினர். மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், ஆங்கிலம், லத்தீன் என பல மொழிகளில் பேசினார்கள். பு.ஜ.தொ.மு. தோழர்கள் அறிந்த அரைகுறை ஆங்கிலத்தில் அரசியல் பிழையின்றி விவாதித்தனர். “சோசலிசம் தான் மாற்று” என்கிற கருத்தைப் பதிய வைத்தனர். இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் WSF மாநாடு நடந்த இடம் முதல் பு.ஜ.தொ.மு. கூட்டமைப்பின் பொதுக்கூட்டம் நடந்த இடம் வரை ஒட்டப்பட்ட ஆங்கில சுவரொட்டிகள் அதிர்வலையை உருவாக்கின.

இதைத் தொடர்ந்து பு.ஜ.தொ.மு.வுடன் ஒத்த கருத்துடைய பல்வேறு அமைப்புகள் இணைந்து “ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கெதிரான அமைப்பு  – FAIG ( Forum Against Imperialist Globalisation) உருவானபோது பு.ஜ.தொ.மு.வும் அதன் அங்கமாக செயல்பட்டது. கெடுவாய்ப்பாக மிகக் குறுகிய காலத்தில் இந்த அமைப்பு (FAIG) செயல்படாமல் முடங்கிப் போனது.

சுனாமி மீட்பு நடவடிக்கைகள்

2004-இல் சுனாமி தாக்கியபோது முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகள் பு.ஜ.தொ.மு.வின் இரண்டாவது பெரிய செயல்பாடுகளாகும். சென்னை கடற்பகுதி பிணக்காடாகி இருந்த நேரம். மக்கள் மனதில் அச்சமும், கையறு நிலையும் குடி கொண்டிருந்த நேரமது. உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து, மாற்றுத் துணி கூட இல்லாமல் குளிரில் நடுங்கிய மக்களுக்கு நள்ளிரவு வரை மீட்புப்பணிகளில் உதவினோம். சுனாமியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட எண்ணூர் சுற்றுப்புற மக்களின் தோளோடுதோள் நின்று துயர் தீர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.

முதலாளித்துவ பயங்கரவாதம் என்ற வரையறுப்பு

முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பு காரணமாக ஏகாதிபத்திய உலகம் கடும்பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. ஆலையில் திட்டவகைப்பட்ட கடுமையான உழைப்புச் சுரண்டல், பொதுவெளியில் அராஜகமான போட்டி என்ற இந்த முரண்பாட்டை 2007-09 உலகப் பொருளாதார நெருக்கடி (சப்-பிரைப் நெருக்கடி) பளிச்செனக் காட்டியது.

இச்சூழலில், “முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” என்கிற முழக்கத்தின் கீழ் 25-01-2009-இல் பு.ஜ.தொ.மு தனது சொந்தபலத்தில் அம்பத்தூர் பகுதியில் மாநாட்டையும் அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தையும்  நடத்தியது. ஆலையில் தொழிலாளர்கள் மீது கார்ப்பரேட் கம்பெனிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளானது, தொழிலாளியை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்கும் வேலைமுறையானது பயங்கரவாதமாகும் என்று வரையறுத்து மேற்கொள்ளப்பட்ட இந்த இயக்கம், பலரையும் முதலாளித்துவ பயங்கரவாதத்தைப் பற்றி பேசவைத்தது.

இந்த மாநாட்டுக்குப் பிறகு, அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்களின் கவனத்தை பு.ஜ.தொ.மு. ஈர்த்தது. ஆனாலும் பு.ஜ.தொ.மு.வின் அரசியல் முழக்கங்கள் அந்த தொழிற்சங்கங்களுக்கு ஒவ்வாதவையாக இருந்ததால் அவை பு.ஜ.தொ.மு.விடமிருந்து ஒதுங்கியே இருந்தன.

“இயற்கையையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்” என்ற பு.ஜ.தொ.மு.வின் இயக்கமானது, முதலாளித்துவ பயங்கரவாதம் என்பது ஆலையில் மட்டும் கோலோச்சுவதல்ல, அது மனித சமூகத்திற்கும் இயற்கைக்கும் எதிரானது என்பதை உணர்த்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

முதலாளிகள் என்பவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான வர்க்கப் பகை கொண்டவர்கள் என்பதையும் “தொழிற்சங்கவாதம்” என்பது தொழிலாளர்களை முதலாளிகளுக்கு கொத்தடிமைகளாக்குவதாகும் என்பதையும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் உணர்த்தும் வகையில், “முதலாளி என்பவன் யார்?” என்ற தலைப்பில் இயக்கங்கள் கட்டியமைக்கப்பட்டன.

மழைவெள்ளப் பாதிப்புகள் – அரசின் அலட்சியங்கள்

ஜெயா ஆட்சிகாலத்தில், 2015 டிசம்பரில் சென்னையில் பெய்த கனமழையும், அதன் தொடர்ச்சியாக செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறந்து விடப்பட்டதாலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாயின. பல பகுதிகள் முதல்மாடி அளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது. ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யும் அவலம் நடந்தேறியது. சற்றேறக்குறைய கடலூர் பகுதியும் இதே அளவு பேரழிவைச் சந்தித்தது.

சென்னையின் நீர்வழிப்பாதைகளை கார்ப்பரேட்டுகள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியதும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த ஆற்றுமணல் கொள்ளையும் இந்த பேரழிவுக்கு முதன்மைக் காரணமாக இருந்தது. வெள்ளத்தில் வீடுகள் மூழ்கிய நிலையும் உடுத்த துணியும், உண்ண உணவும் இன்றி தவித்த மக்களுக்கு உணவுப்பொருட்களும், துணிமணிகளும் வழங்கி பாதுகாக்கும் பொறுப்பை பு.ஜ.தொ.மு தன் தோளில் சுமந்தது. இணைப்புச் சங்கங்கள், கிளைச்சங்கங்கள், சகோதர சங்கங்கள் மூலமாக பல இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் உழைக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நமது பணி ஒரு நம்பிக்கையை ஊட்டியது. வெள்ள நிவாரணப் பணிகளின் ஊடாக நீர்நிலைகள் மீதான கார்ப்பரேட் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போராட்டங்களை பு.மா.இ.மு., மக்கள் அதிகாரம் அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுத்தது.

பு.ஜ.தொ.மு. தொடங்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை பல்வேறு அடக்குமுறைகள், உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க