தொழிலாளர் உரிமைக்கான உறுதிமிக்கப் போராட்டங்கள்!
பு.ஜ.தொ.மு. தொழிற்சங்கப் பிரச்சினைகளைக் கையாள்வதில் வெளிப்படுத்தும் நேர்மை, உறுதி போன்றவை காரணமாக முதலாளித்துவ பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுகின்ற தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு.வின் தலைமையை ஏற்றுக்கொண்டு செயல்பட முன்வருவது அதிகரிக்கத் தொடங்கியது.
இதன் விளைவாக 2011 காலங்களில் பு.ஜ.தொ.மு.வின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்குள்ளும், மாநிலத்துக்கு வெளியேயும் விரிவடையத் துவங்கியது. தொழிற்சங்க அரங்கிலிருந்து புரட்சிகர அரசியலுக்கு பல முன்னணியாளர்கள் வரத் தொடங்கினர்.
அதேகாலகட்டத்தில் தொழிலாளர்களுக்கு இருந்த குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்புகள் முடிவுக்கு வரத் தொடங்கின. இதனால், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் புதிய முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனூடாக பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டது பு.ஜ.தொ.மு.
நெல்காஸ்ட் (பொன்னேரி), எஸ்.ஆர்.எஃப். (SRF – கும்மிடிப்பூண்டி) சங்கங்களில் நாம் நடத்திய போர்க்குணமிக்கப் போராட்டங்கள் பு.ஜ.தொ.மு.வின் சமரசமில்லாத உறுதிமிக்கப் போராட்டப் பாதையை எடுத்துக்காட்டின.
நெல்காஸ்ட் பொதுத் தொழிலாளர் சங்கமான நாம் ஆலை விபத்தில் பலியான ஒடிசா மாநில தொழிலாளிக்கு இழப்பீடு கோரி போராடியதால் நிர்வாகத்தின் அங்கீகாரத்தை இழந்ததுடன் பல முன்னணியாளர்களை பலி கொடுக்கவும் நேர்ந்தது. எஸ்.ஆர்.எஃப். கும்மிடிப்பூண்டி தொழிலாளர்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டம் 20 தொழிலாளர்களது வேலைபறிப்புக்கு வழிவகுத்தது. பிற்காலத்தில் அந்த வேலை இழப்பை (சில நிபந்தனைக்குட்பட்டு) சரி செய்ததும், அந்த ஆலையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக உருவெடுத்ததும், அதன் தொடர்ச்சியாக எஸ்.ஆர்.எஃப். மணலி ஆலையின் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் வருடாந்திர தேர்தல்களில் பு.ஜ.தொ.மு. வெற்றி பெற்றதும் பு.ஜ.தொ.மு. மீது தொழிலாளர்களுக்கு நம்பிக்கை வளர்ந்ததன் வெளிப்பாடாடுகளாகும்.
படிக்க: ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 1
ஆவடி – அம்பத்தூர் பகுதியில் இயங்கிய கட்டத்தில் ஈசாப் இந்தியா நிறுவனத்தில் ஐ.என்.டி.யூ.சி. சங்கத்தின் துரோகத்தால் பல ஆண்டுகளாக பணி நிரந்தமில்லாமல் தவித்த 64 தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம் பெற்றுத்தந்த நம்மை அனைத்துத் தொழிலாளர்களும் அரவணைத்துக் கொண்டனர். ஐ.என்.டி.யூ.சி. சங்கத்திலிருந்து வெளியேறி நமது தலைமையை ஏற்றனர். இந்த செய்தி காஞ்சிபுரம் வரை பரவியதால் டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த ஆக்சில்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத் தொழிலாளர்களும் நம் தலைமையை ஏற்றனர்.
ஆனாலும், ஐ.என்.டி.யூ.சி. சங்கமும், நிர்வாகமும் கூட்டு சேர்ந்து பு.ஜ.தொ.மு.வை ஒழித்துக் கட்டுவதில் முனைப்பாக இருந்தது. இதனால் பல முன்னணியாளர்கள் வேலையை இழந்தாலும் இன்று வரை நமது செயல்பாடுகள் நிற்கவில்லை. அதே போல, ஐ.என்.டி.யூ.சி. சங்கத்தின் ஆள்காட்டித்தனத்தால் ஈசாப் இந்தியா நிறுவன தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ஐந்து பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால், அச்சமடைந்த தொழிலாளர்கள் மீண்டும் ஐ.என்.டி.யூ.சி. சங்கத்தில் சரணடைந்தனர். ஈசாப், ஆக்சில்ஸ் ஆகிய இரண்டிலும் சற்றேறக்குறைய ஒரே நேரத்தில் சங்கம் துவங்கியபோதிலும், ஈசாப் ஆலையில் முன்னணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த அடக்குமுறையின் காரணமாக ஈசாப் ஆலையில் நமது சங்கம் கலைந்தது. ஆனால், ஆக்சில்ஸ் ஆலையில் இன்று வரை சங்கம் இயங்கி வருகிறது. அரசியல் உணர்வு கொண்ட தொழிலாளர்கள் எங்கெல்லாம் முன்வரிசையில் நிற்கிறார்களோ அங்கெல்லாம் கடும் இழப்புகளுக்குப் பிறகும் சங்கம் உயிர்வாழ்கிறது என்பதற்கு ஆக்சில்ஸ் சங்கம் ஒரு சிறந்த சான்றாகும்.
இந்த சூழலில் ஆவடி – அம்பத்தூரை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற முருகப்பா குழுமத்தின் டி.ஐ மெட்டல் பார்மிங் ஆலையில் இரண்டு முறை தொழிற்சங்கம் அமைத்தும் அவை வீழ்த்தப்பட்ட சூழலில், இளம் தொழிலாளர்கள் நமது தலைமையின் கீழ் அமைப்பாகத் திரண்டனர். நவம்பர் 2011-இல் பு.ஜ.தொ.மு. தலைமையில் தொழிலாளர்கள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டம் நிர்வாகம் சங்கத்தை அங்கீகரிக்க வைத்தது. இதன் தொடர்ச்சியாக, அதே குழுமத்தின் மேலும் இரண்டு ஆலைகளில் இயங்கிய தொழிற்சங்கங்களுக்கு பு.ஜ.தொ.மு. தலைமையேற்றது. அந்த குழுமத்தில், ஒரே நேரத்தில், ஒரு சங்கத் தலைமை மூன்று சங்கங்களுக்கு தலைமை தாங்கிய வரலாற்றைப் படைத்தது பு.ஜ.தொ.மு.
எஸ்.ஆர்.எஃப்., டி.வி.எஸ். மற்றும் முருகப்பா குழும நிறுவனங்களில் பு.ஜ.தொ.மு. சங்கங்களின் செயல்பாடுகள் பல முன்னணி தோழர்களை புரட்சிகர அரசியலுக்கு கொண்டுவந்தது. இதன் தொடர்ச்சியாக, திருப்பெரும்புதூர் – ஒரகடம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பு.ஜ.தொ.மு.வின் செயல்பாடுகள் விரிவடைந்தன.
படிக்க: ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 2
ஜி.எஸ்.எச். என்கிற தென்கொரிய ஆலைத் தொழிலாளர்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து 2014 ஆகஸ்ட் 15 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யும் பேரணியை அறிவித்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர்களும் அணிதிரட்டனர். பெண்கள் உள்ளிட்டு சுமார் 250 தொழிலாளர்கள் அணி திரண்டபோது அவர்கள் மீது போலீசு கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி, 168 ஆண் தொழிலாளர்களைக் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தது.
இந்த தொழிலாளர்களின் கைது-சிறை நடவடிக்கைகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பு.ஜ.தொ.மு. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதானது, ஞாயிற்றுக் கிழமையன்று சிறப்பு அமர்வு நீதிபதிகள் விசாரிக்கும் சூழலை ஏற்படுத்தியது. போலீசும், பல ஆலைகளைச் சேர்ந்த முதலாளிகளும் தொழிலாளர்களுக்குப் பிணை கிடைக்கவிடாமல் தடுக்கும் வேலைகளில் ஈடுபட்டனர்.
பு.ஜ.தொ.மு.வின் இடைவிடாத சட்டப்போராட்டத்தால் ஒரு வார காலத்தில் பிணை பெறப்பட்டது. தொழிலாளர்கள் மீது போடப்பட்ட இப்பொய் வழக்கு 2022-இல் உயர்நீதிமன்ற தலையீட்டில் தவிடுபொடியாக்கப்பட்டது. அடுத்த சில வாரங்களில் தொழிலாளர் துறையை முதலாளிகள் கூட்டமைப்பு நெருக்கியதன் விளைவாக அன்றைய காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா.சிவா குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தொழிற்சங்கப் போராட்டங்களுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் தொழிற்சங்கத் தலைவர் தோழர் சிவா-வாகத்தான் இருக்க முடியும்.
ஜி.எஸ்.எச். என்கிற ஒரு ஆலையின் தொழிலாளர்களுக்காக பத்துக்கும் மேற்பட்ட ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிறை சென்றது தொழிற்சங்க வரலாற்றில் தொழிலாளர் ஒற்றுமைக்கு முன்னுதாரணமிக்கப் போராட்டமாகும். பு.ஜ.தொ.மு.வின் புரட்சிகர அரசியலின் மீதான ஈடுபாடுதான் இந்த அளவிற்கு தொழிலாளர்கள் ஒற்றுமையாக திரள்வதற்கு அடிப்படையாக அமைந்தது.
இந்தப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் திருப்பெரும்புதூர் – ஒரகடம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பு.ஜ.தொ.மு.விற்குப் ஆதரவு பெருகியது.
நோக்கியா ஆலைத் தொழிலாளி அம்பிகா இயந்திரத்தில் தலை நசுங்கி மாண்ட போது முதலாளித்துவ இலாபவெறிக்கு தொழிலாளர்கள் பலியிடப்படுவதை அம்பலப்படுத்தியது பு.ஜ.தொ.மு. இதே போல ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் ஆலையில் பணிபுரியும்போது பலியானபோதும், நிசான் ஆலை விபத்தில் ஒரு இடைநிலை பொறியாளர் இறந்தபோதும் உடனுக்குடன் பு.ஜ.தொ.மு. தலையிட்டு அம்பலப்படுத்தியது. இதன் விளைவாக திருப்பெரும்புதூர் தொழிற்பூங்காவில் பு.ஜ.தொ.மு.வின் தலைமையில் ஹனில் டியூப்ஸ் ஆலையில் முதல் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் ஹூண்டாய் ஆலையில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் அமைக்க தவியாய் தவித்துக் கொண்டிருந்தது. ஆனால், மற்ற எல்லா சங்கங்களையும் பின்னுக்குத்தள்ளி பு.ஜ.தொ.மு. முதல் சங்கத்தை கட்டியமைத்தற்குக் காரணம், பு.ஜ.தொ.மு.வின் புரட்சிகர அரசியலும் தொழிலாளர்களுக்காக பு.ஜ.தொ.மு. தோழர்கள் காட்டிய அர்ப்பணிப்புமிக்கப் போராட்டங்களும்தான்.
000
கோவையின் அடையாளமாகத் திகழ்ந்த தேசிய பஞ்சாலை நிறுவனத்தின் (NTC) பல ஆலைகளை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல், தொழிற்சங்க கட்டைப்பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது. என்.டி.சி.யின் கீழ் இயங்கிய முருகன் மில்ஸ் தொழிற்சங்கத்தின் செயலாளரும், கோவை மாவட்ட பு.ஜ.தொ.மு.வின் மாவட்ட தலைவரும், அதன் கீழ் இயங்கிய கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் விளவை.இராமசாமி தலைமையில் முன்னெடுத்த சட்டப்போராட்டத்தின் காரணமாக என்.டி.சி. மில்களில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடந்ததும், அதில் நமது சங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக தொழிலாளர்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ததும் கோவை மாவட்ட தொழிற்சங்க வரலாற்றில் முக்கிய தருணமாகும்.
இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீரங்கநாதன் இன்டஸ்ட்ரீஸ் (SRI) என்கிற நெசவாலையில் கிளைச் சங்கம் கட்டியமைக்கப்பட்டது. உலகெங்கும் வணிகம் கொண்டிருக்கும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் முதலாளி ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களை வைத்து அவற்றை தனித்தனி ஆலைகளாக கணக்கு காட்டி அரசையும், தொழிலாளர்களையும் ஏமாற்றி வந்தார். இந்த மோசடிகளுக்கு முடிவு கட்டிய தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு தலைமையின் கீழ் திரண்டார்கள். முதலாளியின் அடக்குமுறை தீவிரமானது. முதலாளியின் வீட்டிற்கு எதிரே பாடைகட்டும் போராட்டத்தை முன்னெடுத்தோம். போலீசின் அடக்குமுறைகளை பெண் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன் வரிசையில் நின்று எதிர் கொண்டனர்.
சி.ஆர்.ஐ. முதலாளிக்கும், போலீசுக்கும் சவாலாக பு.ஜ.தொ.மு விளங்கியதால், தோழர் விளவை.இராமசாமி அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க முயன்றனர், அது சட்டப்பூர்வமாக முறியடிக்கப்பட்டது. தோழர் விளவை.இராமசாமி 2019-இல் இயற்கை எய்தினாலும், அவர் இன்றளவும் கோவை மாவட்ட தொழிலாளர்கள் நினைவில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
000
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களை உள்ளடக்கிய பு.ஜ.தொ.மு. மண்டலச் சங்கம் ஒசூர் தொழில் நகரை மையமாக வைத்து இயங்கி வந்தது. ஒசூர் அசோக் லேலண்டில் தொழிலாளர்கள் மத்தியில் களப்பணியாற்றி, ஏனைய தொழிற்பகுதிகளுக்கும் தனது செயல்பாட்டை விரிவாக்கியது.
சென்னையைப் போலவே, ஒசூரில் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு பு.ஜ.தொ.மு. தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. ஆலை விபத்துகளின்போது தொழிலாளர்கள் மரணமடைந்தபோது, தொழிலாளர்களுக்கு நியாயமான நிவாரணங்களைப் பெற்றுத்தரவும் தொழிற்சங்கப் புரோக்கர்களின் தலையீடுகளைத் தடுத்து தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் பல போராட்டங்களை நடத்தியது.
படிக்க: ஏப்ரல் 02, 2023 : பு.ஜ.தொ.மு வெள்ளிவிழா!
இதன் விளைவாக, முதலாம் காலகட்டத்தின் இறுதிப் பகுதியில் (2010) ரசிய கனரக வாகன உற்பத்தி நிறுவனமான காமாஸ்வெக்ட்ரா ஆலையில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தீவிரமடைந்தபோதும், குளோபல் ஃபார்மாடெக், வெக் இண்டியா போன்ற பல ஆலைகளில் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்தபோதும் பு.ஜ.தொ.மு. தலைமையில் தொழிற்சங்கங்கள் கட்டியமைக்கப்பட்டன. ஏற்கெனவே, அந்த ஆலைகளில் தொழிலாளர்கள் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி. சங்கங்களில் இருந்து வெளியேறி பு.ஜ.தொ.மு.வின் தலைமையை ஏற்றுக்கொண்டு சங்கம் கட்டிப் போராடினர்.
காமாஸ் வெக்ட்ரா ஆலையில் தொழிலாளர்கள் மேற்கொண்ட உள்ளிருப்புப் போராட்டம் சுமார் 26 நாட்களுக்கும் மேலாக நீடித்தது. சட்டவாத மாயையில் இருந்து விடுபட்டு போராடி உரிமைகளை நிலைநாட்டும் முயற்சியில் தொழிலாளர்கள் வீறுகொண்டு போராடினர். இதனால், ஒசூர் நகரத்தில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பு.ஜ.தொ.மு.வின் போராட்டங்களுக்கு ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, தொழிலாளர்களது கொந்தளிப்பையும் நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. அன்றைய துணை முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் ஒசூர் நகரத்துக்கு வருகை செய்ய திட்டமிட்டிருந்த தருணம் அது. நம்மை போராட்டக் களத்தில் சந்திக்க முடியாத நிர்வாகம் மாவட்ட ஆட்சியரை அணுகி சமரசம் பேசியது. துணை முதல்வர் வருகின்ற நேரத்தில் ‘தொழில் அமைதிக் குலைவு’ ஏற்பட்டுவிடக் கூடாது என்றஞ்சிய மாவட்ட நிர்வாகம் ஒரு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தற்காலிக இணக்கத்தை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒசூரின் முக்கியத் தொழிலான மருந்துகள் உற்பத்தி, வாகன உற்பத்தி துறை தொழிலாளர்கள் நம் தலைமையை ஏற்றனர். குளோபல் பார்மாடெக், வெக் இந்தியா போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. ஒசூரில் இயங்கி வந்த கார்பொரண்டம் யூனிவர்சல் (குமி – CUMI) நிறுவனத்தில் சங்கம் ஆரம்பித்த சில மாதங்களில் அடக்குமுறை தீவிரமானது. பொதுவாக சொந்த ஆலைத் தொழிலாளர்களை ஒடுக்கும் முதலாளிகள், வெளித்தலைவர்கள் பற்றி கவலைப்பட்டதில்லை. ஆனால், பு.ஜ.தொ.மு மட்டும் இதில் விதிவிலக்கு. தோழர் ஆ.கா.சிவா, தோழர் விளவை.இராமசாமி ஆகியோரது வரிசையில் ஒசூரைச் சேர்ந்த தோழர் பரசுராமனும் குறி வைக்கப்பட்டார்.
குமி நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை தோழர் பரசுராமன் அம்பலப்படுத்தியதால் அந்த நிறுவனத்தின் பெயர் கெட்டு விட்டதாக கூறி ரூ.10 இலட்சம் நட்ட ஈடு கேட்டு போடப்பட்ட வழக்கு இன்றும் நிலுவையில் இருக்கிறது. தோழர் பரசுராமன் பேசினால் ஒசூரின் தொழில் அமைதி கெடுவதாகச் சொல்லி மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 107-ன் கீழாக தடுப்புக்காவல் வாய்ப்பூட்டு உத்தரவுகளை போட்டு வருகிறது.
பு.ஜ.தொ.மு. அங்கு பெரிய அளவில் சங்கங்களை வைத்திருக்காவிட்டாலும், ஒசூர் தொழிலாளர்கள் மத்தியில் பு.ஜ.தொ.மு.வின் பெயர் பசுமையாக நிறைந்திருக்கிறது. சமீபத்தில் ஒசூர் குளோபல் பார்மாடெக் (தற்போது மைவா பார்மா டெக்) நிறுவன தொழிலாளர்கள் நம்மை சந்தித்தபோது, அந்த காலகட்டத்தில் நாம் அவர்களுக்கு வழிகாட்டிய பாதைதான் எவ்வளவு அடக்குமுறை வந்தாலும் எதிர்க்கும் துணிவைத் தருகிறது என நெஞ்சார உணர்ந்து சொன்னார்கள்.
000
பு.ஜ.தொ.மு. தோழர்கள் அச்சமூட்டுபவர்களாகவே முதலாளிகளால் பிரச்சாரம் செய்யப்பட்டார்கள். பு.ஜ.தொ.மு. மீது முதலாளிகள் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்? ஏன் பு.ஜ.தொ.மு.வைப் பற்றி பீதியூட்டும் கருத்துகளை பரப்ப வேண்டும்? தொழிற்சங்கச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி இயங்குகின்ற பு.ஜ.தொ.மு.வை அங்கீகரிக்காமல், சங்கம் அமைக்கவிடாமல் முதலாளிகளைத் தடுக்கச் செய்வது எது? இதற்குக் காரணம், பு.ஜ.தொ.மு. ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் என்பதே ஆகும்.
நேரடியாகவோ மறைமுகமாகவோ முதலாளிகளுடன் கூடி குலாவிக் கொண்டு, தொழிலாளர்களுக்கு எப்போதும் முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்தின் மீது ஒரு அச்சத்தை விதைத்துக் கொண்டு அவர்களை சுயமாக சிந்திக்கவிடாமல், கூலி, போனஸ் என்ற பிழைப்புவாதக் கண்ணோட்டத்திலேயே ஆழ்த்தி வைக்கும் தொழிற்சங்கவாதத்தைக் கைவிட்டு, தொழிலாளர்களைப் பு.ஜ.தொ.மு. அரசியல்படுத்த முயன்றது. பு.ஜ.தொ.மு. முன்வைக்கும் அரசியல் கருத்துகள்தான் அவர்களை அச்சுறுத்துகிறது. இது மட்டுமின்றி, தொழிலாளர்களை அச்சுறுத்தும் எச்.ஆர். அதிகாரிகளை சமரசமின்றி தோலுரித்த சம்பவங்கள் அவர்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியது.
அம்பத்தூர் ஈசாப், எஸ்.ஆர்.எஃப். கும்மிடிப்பூண்டி, ஒசூர் குளோபல் பார்மா டெக் போன்ற ஆலைகளில் எச்.ஆர். அதிகாரிகளது போட்டோக்களுடன் கூடிய சுவரொட்டிகள் பொதுவெளியில் கொண்டு வரப்பட்டன. இவை முதலாளிகளுக்கு அச்சத்தை தந்தன. “பு.ஜ.தொ.மு.வை அடக்காவிட்டால் தொழில் துறையே சீர்குலைந்து விடும்” என்கிற அளவு அவதூறுகள் கிளப்பி விடப்பட்டன.
தொடரும்…