செயல்படாத பி.எம்-கேர்ஸ் வெண்டிலேட்டர்கள் பற்றி புகார் தெரிவித்த கான்பூரைச் சேர்ந்த மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார் மருத்துவர் அகர்வால். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை செய்யாத இரண்டு வெண்டிலேட்டர்கள் பற்றி அவருடையத் துறைத் தலைவருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

“பிஎம்-கேர்ஸ் நிதியின் கீழ் அக்வா ஹெல்த்கேர்(AgVa Healthcare) நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் அவ்வப்போது தான் வேலை செய்கின்றன” என்று தனது கடித்தத்தில் அம்மருத்துவர் கூறியுள்ளார்.

இதேபோன்று பழுதடைந்த வெண்டிலேட்டர்கள் பற்றியும், அவற்றை மீண்டும் மீண்டும் பழுதுபார்த்தாலும் பிரச்சனை தீராதது பற்றியும் இதற்கு முன்னர் மருத்துவர் ராவ் என்பவர் ஜூலை 6-ம் தேதியன்று கல்லூரி முதல்வர் ஆர்.பி.கமலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

படிக்க :
♦ பி.எம். கேர்ஸ் நிதியில் வாங்கப்பட்ட வெண்டிலேட்டர்களின் நிலை என்ன ?
♦ கொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்!

கொரோனா முதல் அலையின் போது 26 வெண்டிலேட்டர்கள் பி.எம்-கேர்ஸ் நிதியின் கீழ் பெறப்பட்டது. அவை குழந்தைகளுக்கான இரண்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டது.

கடந்த ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில், மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு வெண்டிலேட்டர், திடீரென பழுதாகிவிட்டது. நான்கு நாட்களுக்கு பிறகு அந்தக் குழந்தை இறந்துவிட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகுதான் மருத்துவர் அகர்வால் பழுதடைந்த வெண்டிலேட்டர் பற்றி துறைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் குழந்தையின் மரணத்திற்கு மருத்துவர் அகர்வால்தான் பொறுப்பு என்று கூறி அவரை இடைநீக்கம் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் குழந்தை மரணம் குறித்தும் பழுதடைந்த தரமில்லாத வெண்டிலேட்டர்கள் குறித்தும் மாநில அரசு ஆய்வு செய்யவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“அப்போதைய முதல்வர் மருத்துவர் ஆர்.பி. கமல், பழுதடைந்த வெண்டிலேட்டர்கள் குறித்து மாநில அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். குழந்தை மரணம் குறித்து எனக்கு தெரியாது. நான் அப்போது முதல்வராக இல்லை” என்று தற்போதைய மருத்துவக் கல்லூரியின் முதல்வர், மருத்துவர் சஞ்சய் காலா கூறியுள்ளார்.

“மருத்துவர் அகர்வாலுக்கு எதிராக கடுமையான முடிவை எடுத்த உயர் அதிகாரிகள் அவரது கடிதத்தை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். மேலும் வெண்டிலேட்டர் திடீரென நிறுத்தப்பட்டதால் தான் ஒரு குழந்தை இறந்தது என்று எழுதவில்லை. இறந்த குழந்தையின் பெற்றோர் கூட எங்கள் மருத்துவ ஊழியர்கள் எவருக்கும் எதிராக புகார் செய்யவில்லை” என்கிறார் மருத்துவர் ராவ்.

இதேபோல் பல்வேறு மருத்துவமனைகளில் பி.எம்-கேர்ஸ் நிதியின் மூலம் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கிய வெண்டிலேட்டர்கள் அடிக்கடி பழுதடைவது குறித்து பல செய்திகள் வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் ஜார்கண்டிற்கு மத்திய அரசு வழங்கிய வெண்டிலேட்டர்களில் 25% வெண்டிலேட்டர்கள் செயல்படவில்லை என்றும், காணாமல் போன வெண்டிலேட்டரின் பாகங்களை பழுதுபார்க்க வேண்டும் என்றும் செய்தி வெளியானது. அதாவது ஜார்கண்ட் அரசு பெற்ற 663 வெண்டிலேட்டர்களில் 164 வெண்டிலேட்டர்கள் பாகங்கள் இல்லாமலும் இயந்திர குறைபாடுகளுடனும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பி.எம்-கேர்ஸ் நிதியின் மூலம் பெறப்பட்ட வெண்டிலேட்டர்களில் பழுதான வெண்டிலேட்டர்களும் இருந்ததாக சண்டிகர் அரசு கூறியுள்ளது.

கடந்த 2020 ஜூலை 5-ம் தேதி தரமற்ற வேன்டிலேட்டர்களை நரேந்திர மோடி அரசாங்கம் வாங்குவதாக குற்றம்சாட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையில் உள்ள ஜே.ஜே.மருத்துவமனையின் அறிக்கைகள் பி.எம்-கேர் நிதி மூலம் வாங்கப்பட்ட வெண்டிலேட்டர்களின் குறைபாடுகள் பற்றி கூறுகிறது. அதில், தற்போது மதிப்பீடு செய்யப்பட்ட அக்வே வெண்டிலேட்டர்கள் தோல்வியடைய அதிக வாய்ப்புள்ளது. அதிக FiO2 (ஆக்சிஜன்) சதவீதத்தை வழங்குவதற்கு அதனால் முடியவில்லை. இவைகளால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு தேவையான பிராண வாயுவை பூர்த்தி செய்ய முடியவில்லை.

ஒரு அக்வா வெண்டிலேட்டர் சோதனை இயந்திரத்தில் பொருத்தப்பட்ட ஐந்து நிமிடங்களில் பழுதடைந்து விடுகிறது. இதனால், வெண்டிலேட்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு “அமைதியின்மை, மூச்சிறைத்தல் மற்றும் அதிக வியர்வை வருகிறது” என்று ஜெ.ஜெ.மருத்துவமனை அறிக்கை கூறுகிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் உயிர்காக்கும் வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு மோடி அரசு பி.எம்-கேர்ஸ் நிதியை மிகவும் குறைவாகவே பயன்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் படி, ரூ.1,532 கோடி மட்டுமே பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து வெண்டிலேட்டர்கள் வாங்க தரப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இரண்டாம் அலைக்கு பிறகும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட 16,000 வெண்டிலேட்டர்கள் இன்னும் மருத்துவனைகளுக்கு வழங்கப்படவில்லை என்று கடந்த ஜூலை மாதம் மத்திய சுகாதாரத்துறையின் அதிகாரி தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் பி.எம்-கேர்ஸ் நிதியை குறைவாக பயன்படுத்தியது ஒருபுறமிருக்க, மறுபுறம் தரமற்ற, பழுதாகக் கூடிய வெண்டிலேட்டர்களை ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களிடமிருத்து வாங்கி பி.எம்-கேர்ஸ் நிதியை வீணடித்துள்ளது.

பி.எம்.கேர்ஸ் நிதி என்பது எவ்வித தணிக்கைக்கும் உட்படாத வண்ணம் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாத இடத்தில் அனைத்து விதமான நிதி மோசடியும் நடைபெறும் என்பது உறுதி. அந்த வகையில் பி.எம். கேர்ஸ்  நிதியில் இருந்து வாங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் பெரும்பான்மையானவை சரியாக வேலை செய்யவில்லை என்ற இந்தக் குற்றச்சாட்டு, இந்தப் பரிவர்த்தனையில் ஊழல் நடந்திருப்பதற்கான வாய்ப்பை உறுதிபடுத்துகிறது.

அதன் அடிப்படையில்தான், வெண்டிலேட்டர்கள் தரக்குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டிய மருத்துவர் அகர்வால், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பி.எம். கேர்ஸ்  நிதி மக்களுக்கானது இல்லை. கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கானதுதான் என்பதை இச்சம்பவம் நிரூபிக்கிறது.


சந்துரு
செய்தி ஆதாரம் : The Wire, Huffpost

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க