மதுரை : கொரோனா இறப்புக் கணக்கு புள்ளிவிபர மோசடியில்
ஒளிந்து கொள்ளும் அரசும், அதற்குக் காவடி தூக்கும் பத்திரிகைகளும் !

மதுரையில் கொரோனாவுக்கு 15 பேர் பலி என்று 16/5/2021 தேதியிட்ட ஆங்கில இந்து பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் 23 அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தோழர் ஒருவரின் தாயார் மரணத்தை ஒட்டி சென்றபோது, அப்போதே அங்கு மட்டும் 25 நபர்கள் இறந்துள்ளதாக தெரிய வந்தது.

ஏப்ரல் 23-க்கு பிறகு கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பிறகு கொரோனா பரவுவதும் இறப்பும் அதிகரித்துள்ளது. ஆனால், அரசின் கணக்கு மட்டும் 15,17 என பத்திரிக்கைகளில் வெளிவருகிறது. இதை தெரிந்து கொண்டு அம்பலப்படுத்த வேண்டும் என மதுரை ராஜாஜி மருத்துவமனை சென்று நிலைமையை விசாரித்தோம்.

படிக்க :
♦ புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசு || புமாஇமு கண்டனம்
♦ சென்னை பல்கலை : உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம்

அங்கு பார்த்த நிகழ்வுகளும் ஊழியர்கள் கொடுத்த புள்ளிவிவரங்களும் அதிர்ச்சி அளிக்கின்றன. கொரோனா positive என முடிவு வந்தவர்கள் அந்த மருத்துவச் சீட்டுடன் மருத்துவமனையின் நுழைவு வாயில் முன்பு வரிசையாக காத்துக் கிடக்கிறார்கள்.

17/05/2021 திங்கட்கிழமை காலை பத்து முப்பது மணியிலிருந்து காத்துக் கிடந்து மதுரை, வில்லாபுரத்தைச் சேர்ந்த பெரியவர் (60 வயதிற்கும் மேற்பட்டவர் பெயர் தெரியவில்லை) ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்துக் கிடந்து 11.30 மணிக்கு மயங்கி விழுந்தவர் தான், பேச்சு மூச்சு இல்லை. முன்பதிவு செய்யும் இடத்தில் இருந்து அவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு கொரோனா சோதனை அறையின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அரை மணி நேரமாக அவரை மருத்துவமனைக்குள் தூக்கிக் கொண்டுபோக யாரும் வரவில்லை.

கோப்பு படம்

வெளியே பெரியவரை சோதிக்க வந்த மருத்துவரை ஆட்டோத் தொழிலாளி கண்டிக்கிறார். இவ்வளவு நேரமா என்ன பண்ணுறீங்க என கேட்கிறார். டாக்டரோ எல்லோரும் வேலையில் இருக்கிறார்கள் என்றும் அதன் பிறகும் அந்த மருத்துவர் செயல்படவில்லை. வேறு வழியே இல்லாமல் அந்த ஆட்டோ தொழிலாளி மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளியை கூப்பிட்டு வண்டியில் ஏற்றி உள்ளே கொண்டு போகிறார்கள். மருத்துவர் வந்து அந்தப் பெரியவரின் மார்பில் ஒரு ஊசி போட்டுவிட்டு பத்து நிமிடத்தில் ஏதாவது ஆகிறதா என பார்ப்போம் என சொல்லிவிட்டு சென்றார். பத்து நிமிடத்தில் ஏதும் ஆகாமல் அந்த பெரியவர் இறந்து போனார்.

அவர் கொரோனா கணக்கில் வரமாட்டார் ஏனென்றால் அந்த வண்டியில் இருந்து அப்படியே அந்த பெரியவர் வீடு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனைக்கு கொரோனா பாசிட்டிவ் என வரும் நபர்களில் யாரின் நிலைமை மோசமாக உள்ளது என பார்த்து அவர்களுக்கு உடனடியாக தேவையான உதவி செய்யாமல் அவர்களை வரிசையில் நிற்க வைப்பது கொடுமை. மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அரை மணி நேரத்திற்கு ஒருவர் வந்து கொண்டே இருக்கிறார்கள் வந்தவர்கள். பதிவு செய்த பின்னர் சோதனை அறையில் காக்க வைக்கப்படுகிறார்கள்.

கோப்பு படம்

அங்கு 16/5/2021 அன்று மாலை வந்த நபர் இன்றும் (17/05/2021) படுக்கையில் அனுமதிக்கப்படவில்லை. காத்திருக்கும் அந்த இடத்தில் வெறும் 3 குழாய்கள் மூலம் ஆக்சிசன் கொடுக்கிறார்கள். புதிதாக வரும் நபர்கள் வெகு நேரம் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. இப்படி வந்ததில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம். ஆக்சிஜன் படுக்கைகள், சாதாரண படுக்கைகளின் பற்றாக்குறை அதிகமாக உள்ள மதுரை அரசு பொது மருத்துவமனையில், இதனைக் களைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது.

வெளியில், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 என்கிறது மருத்துவமனையின் ஊழியர்களோ 16/ 5/2021 அன்று 48 பேர் என்றும், மற்றும் 15/5/2021 அன்று 60 பேர் என்றும் கூறுகிறார்கள்.

இதை இன்னும் ஆழமாக தெரிந்துக் கொள்ள கொரோனா உடல்களை எரிக்கும் தத்தனேரி சுடுகாட்டிற்கு சென்றால் அங்கு இரண்டு யூனிட் உள்ளது. ஒரு யூனிட்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு உடல் தானம் செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் தகனம் செய்யப்படுகிறது. உடல்கள் அதிகமாக வந்தால் 3/4 மணி நேரம் மற்றும் 1/2 மணி நேரங்களுக்கு எல்லாம் ஒரு உடலை எரிப்போம் என்கிறார்கள் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள்.

குறைந்தபட்சம் 25 முதல் 30 உடல்கள் ஒருநாளைக்கு எரிக்கப்படுவதாக சொல்கிறார்கள். அப்படி என்றால் எவ்வளவு பேர் இறக்கிறார்கள் 50 பேர் குறைந்தபட்சம் இதுபோன்ற மதுரை கீரைத்துறை சுடுகாட்டிலும் அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் கொண்டு செல்லப் படுவதாக சொல்கிறார்கள். இதில் இருந்து அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் மோசடியானவை எனத் தெரிய வருகிறது.

கோப்பு படம் : மதுரை தத்தனேரி சுடுகாட்டு

இத்தனை இழப்புகளுக்கு பின்னும் அரசு மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளை முடுக்கி விடாமல் மெத்தனம் காட்டுகிறது. அவற்றை ஊடகங்கள் அம்பலப்படுத்தாமல், அரசுக்கு ஜால்ரா போட்டு மக்களுக்கு உண்மை நிலையை வெளிவராமல் இருட்டடிப்பு செய்கின்றன.

ஊடகங்கள், அரசு செய்ய வேண்டியவை !

1. ஊடகங்கள் அரசு கொடுக்கும் குறைந்தபட்ச புள்ளி விவரங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல், உண்மையான நிலவரங்களை ஆய்வு செய்து, அரசின் போலித்தனத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

  1. கொரோனா பேரிடரில் மக்கள் படும் இன்னல்களை ஊடகங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். மேலும் மக்கள் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி வலியுறுத்த வேண்டும்.
  2. மதுரையில் உள்ள தனியார், கார்ப்பரேட் (வடமலையான், அப்பலோ, மீனாட்சி, வேலம்மாள் போன்ற)  மருத்துமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், பிற தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுக்களை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உடனடியாகக் கொண்டு வர அவசரகால உத்தரவு இடவேண்டும்.
  3. அரசு மருத்துவ கட்டமைப்புகளை விரைவுபடுத்த வேண்டும். அதற்கு தனியார்/அரசு கல்லூரிகள், பள்ளிகள் மண்டபங்கள், மடாலயங்கள் இவற்றையெல்லாம் கொரோனா தடுப்பு முகாம்களாக அந்தந்த பகுதியில் மாற்ற வேண்டும். அதில் தனியார் மருத்துவக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.

    படிக்க :
    ♦ கொரோனா : கார்ப்பரேட் – சனாதன வைரஸுக்கு எதிரான இருமுனைப் போராட்டம் தேவை !
    ♦ கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு

  4. பகுதி இளைஞர்களை, தன்னார்வலர்களை, அரசியல் கட்சி உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதி, தெரு, கிராமம் வாயிலாக தன்னார்வ குழுக்களையும் ஊழியர்களையும் உருவாக்க வேண்டும்.
  5. மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசிப் போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு உட்பட மக்களின் பீதியைப் போக்கும் வகையில் பிரச்சாரம் மற்றும் உதவிகளைச் செய்ய வீதிதோறும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்படிப்பட்ட முன்னெடுப்பை விரைவில் செய்வதன் மூலமாக மட்டுமே மக்களுடைய உளவியல் பிரச்சினையையும் மருத்துவப் கட்டமைப்பு பிரச்சினையையும் குறைந்தபட்சம் நாம் சரி செய்ய முடியும்.


பு‌.மா.இ.மு
மதுரை
82200 60452.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க