01.06.2022

இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் அடுத்த நிகழ்ச்சி நிரல் மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டம்!

ட்டீஸ்கரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் “இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்” என பேசியுள்ளார்.

பாஜக ஆளக்கூடிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், அசாம் போன்றவற்றில் இதே மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதற்கான வேலைகளை செய்து வருகிறார்கள். ஆனால், 2019-லேயே மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டம் உத்தரப்பிரதேசத்தில் அமலானது.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் கொண்டு வந்த சட்டத்தின்படி, 2 குழந்தைகளுக்கு மேல் யாரும் பெற்றுக் கொள்ளக் கூடாது. அதை மீறினால் அவர்களுக்கு அரசின் பலா பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படும். அரசு வேலை கிடைக்காது. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் அரசு வேலையில் இருந்தால் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாது. இன்னும் இதுபோன்ற பல்வேறு வகையான அடக்குமுறைகளை இந்தச் சட்டம் கொண்டுள்ளது. ஆனால், இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்ற தனது எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தாது என்பதுதான் இந்த யோகி கும்பலின் நீதி.

காலம் காலமாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்தியா முழுவதும் ஒரு சதிக் கோட்பாட்டை உருவாக்கி வைத்துள்ளது. அதாவது இஸ்லாமியர்கள் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் அவர்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது; ஆதலால் இந்துக்களே எச்சரிக்கையாக இருங்கள் என சொல்லி ஒரு பொய்யான பீதியையும் பரபரப்பையும் எப்போதும் ஏற்படுத்துவார்கள். ஆனால் இந்தியா முழுவதுமே குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்பதுதான் எதார்த்தம்.

படிக்க :

♦ ஒழித்துக் கட்டப்பட வேண்டிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா!

♦ உ.பி : முசுலீம்களை எதிரிகளாக சித்தரிக்க துணைபோகும் மக்கள் தொகை வரைவு !

உத்தரப்பிரதேசத்தில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த 1993-ம் ஆண்டு 4.82 ஆக இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டில் 2.7 ஆக சரிந்திருக்கிறது. இது வரும் 2025-ம் ஆண்டில் 2.1 சதவீதமாக குறையலாம் என அரசின் எதிர்கால மதிப்பீட்டில் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் 22-ல் 19 மாநிலங்களில் மக்கள் தொகை மாற்று நிலை (Population Replacement Rate) 2.1-ஐ விட குறைந்துவிட்டது என சமீபத்திய தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு கூறுகிறது. முன்பு அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்ட பெண்களைப்போல இன்று பெற்றுக் கொள்வது இல்லை என்றும் கூடுதலாக அந்த ஆய்வு சொல்கிறது.

ஒட்டுமொத்தமாகவே இன்று மக்கள் தொகை விகிதம் குறைந்து வரும்போது இஸ்லாமியர்கள் மட்டும் பல குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதாக பேசுவது எவ்வளவு போலியானது. இன்று   ஒரு ஊரில் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களையே விரல்விட்டு எண்ணி விடலாம். அப்படி இருக்கும்போது இந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் தொடர்ச்சியான பொய் பிரச்சாரத்தின் மூலம் ஆதாயம்மடைய நினைக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மக்கள் தொகையை சமநிலைப்படுத்த ஒரு பொதுவான சட்டம் தேவை எனக் கூறினார். 2015-ம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ், மக்கள் தொகைக் கொள்கையைக் கோரும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அனைவருக்கும் இயற்கை வளங்கள் கிடைப்பதைக் கருத்தில் கொண்டு கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் எனக் கூறிய அந்த தீர்மானத்தில் நாட்டில் முசுலீம்கள் அதிகளவு 26 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் கேரள மாநிலத்தில் சமநிலையற்ற தன்மை நிலவுவதாக உதாரணம் கூறியது.

அப்படியானால் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நோக்கம் தெளிவாக தெரிகிறது; மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வரப்படுவதே இஸ்லாமியர்களின் சதவீதம் அதிகரிப்பதாக காட்டி அதை வைத்து அவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடத்தான் என்று.

CAA, NRC, NPR சட்டம் கொண்டு வரும்போது மற்ற நாடுகளில் இருந்து வந்த பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பினும் அவர்களை விட்டுவிட்டு இஸ்லாமியர்களை மட்டும் அந்த சட்டத்தில் குறி வைத்தார்கள். அது நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை ஏற்படுத்தியது அது அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றது.

முத்தலாக் சட்டம் கொண்டு வந்தார்கள். பொதுவாக உள்ள விவாகரத்து சட்டத்தில் விவாகரத்து வாங்குவது ஒரு பெரிய கிரிமினல் குற்றம் அல்ல அதன்படி எந்த தண்டனையும் விதிக்கப்படாது. ஆனால், முத்தலாக் அடிப்படையில் ஒருவர் விவாகரத்து அறிவித்தால் அந்த நபருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் அது கிரிமினல் குற்றமாக மாற்றப்பட்டுவிட்டது. முத்தலாக் என்ற விதிமுறையை மட்டும் நீக்கியிருக்கலாம் ஆனால் இஸ்லாமிய ஆண்களைக் குறிவைத்து சிறையில் தள்ளுவதற்கு திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுள்ளது இந்த சட்டம்.

இன்று மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் திட்டமிட்டு வன்முறையை கலவரங்களை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் கலவர தடுப்பு சொத்து பறிமுதல் சட்டம் என ஒன்றைக் கொண்டு வந்துள்ளார்கள் அதன்படி இஸ்லாமியர்கள் மட்டுமே கலவரம் செய்பவர்கள் என்று முத்திரை குத்தி இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்து தள்ளுகிறார்கள். அடுத்தகட்டமாக இஸ்லாமியர்களின் சொத்துக்களை மட்டுமல்ல போராட்டம் நடத்தக்கூடிய உழைக்கும் மக்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்வார்கள் வீடுகளை இடிப்பார்கள் இந்த காவி கும்பல்.

இதைப்போல இஸ்லாமியர்களுக்கு எதிரானது பல்வேறு சட்டங்களையும் கொண்டு வந்து ஒரு மிகப்பெரிய இன அழிப்பு செய்ய துடிக்கிறது இந்த காவி கும்பல். இதற்கு எதிராக உழைக்கும் மக்களாகிய நாம் சாதி, மதம், இனம் கடந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டியுள்ளது. அதுவே இந்த காவி கும்பலையும் இந்த காவி கும்பலின் எஜமானர்களாகிய கார்ப்பரேட் சூரையாடிகளையும் ஒழித்துக்கட்டும்.

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
9444836642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க