பொது சுகாதாரம் மற்றும் சமூக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் பலரும் சமீபத்தில் உத்தரப் பிரதேச அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் தொகை (கட்டுப்படுத்துதல், உறுதிப்படுத்துதல், நலம்) 2021-ஆல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த மசோதாவானது, இரு குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை சட்டப்படியாக்குவதில் கவனம் கொண்டுள்ளது. மேலும், இதனை நடைமுறைப்படுத்துவதற்காக சலுகைகள் மற்றும் சட்ட மீறலுக்கான அபராதம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. இந்த மசோதாவின் உள்ளார்ந்த அபாயங்களால் எதிர்மறை விளைவுகள் அதிகரிக்கின்றன.

ஆனால், பெரும்பான்மையான நிபுணர்கள் “வளர்ச்சியே கருத்தடைக்கான சிறந்த வழிமுறை” என்று கூறுகின்றனர். சலுகைகள் – அபராதங்கள் போன்ற பகுத்தறிவற்ற மூடத்தனமான நடவடிக்கைகளால் உறுதியற்ற நீண்ட பயணத்தை நோக்கி செல்ல முடியுமே தவிர தீர்வை அல்ல.

படிக்க :
♦ உ.பி : முசுலீம்களை எதிரிகளாக சித்தரிக்க துணைபோகும் மக்கள் தொகை வரைவு !
♦ இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !

1994-ம் ஆண்டில் திட்டமிடல், நடைமுறைக்கான மக்கள்தொகை மற்றும் வளர்ச்சி பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது. அம்மாநாடானது “கடுமையான முறையில் கட்டாயப்படுத்துதல், சலுகை மற்றும் அபராதங்கள் போன்றவை மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் மிக மிகச் சிறிய பங்கையே ஆற்றும். அதற்குப் பதிலாக மக்களையே தெரிவு செய்யும் முறையை கையாளுவதன் மூலம் மட்டுமே நோக்கத்தை நிறைவேற்ற முடியும்” என்று தெரிவித்தது. அந்த மாநாட்டில் இந்தியாவும் கையொப்பமிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயத்திற்கிடமின்றி எளிய முறையில் வெளிப்படையாக நம்முடைய கவனத்தை கல்வி, தாய்மை, குழந்தை மருத்துவம் மற்றும் வாழ்வாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவைகளை மேம்படுத்துவதை முக்கிய தந்திரங்களாக நடைமுறைப்படுத்தும் போது மட்டுமே மக்கள் தொகையை நிலைப்படுத்துவதை உறுதிப்படுத்த முடியும். இதனை தேசிய மக்கள்தொகை கொள்கை (2000) ஆனது தெரிவித்தது. இக்கொள்கையானது இப்போதும் எதிரொலித்த வண்ணமே இருக்கின்றது.

தர்க்க ரீதியாகவும் பகுத்தறிவு ரீதியாக காணும்போது சர்வதேச மற்றும் தேசத்தின் வெளிப்பாடு என்பது கூட சலுகைகள் மற்றும் அபராதங்களுக்கு எதிரானதாகவே உள்ளது. மேலே குறிப்பிட்ட வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மக்கள் தொகை கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதானது உத்தரப் பிரதேசம் மற்றும் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடியது.

மக்கள் தொகை நிலைப்படுத்தலின் அடையாளம்

காரண காரியங்களின் அடிப்படையில் வந்தடையப்பட்ட கோட்பாடானது கீழ்க்கண்ட உண்மைகளை தெரிவிக்கிறது. அவற்றை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரு குழந்தை கொள்கையானது மீண்டும் மீண்டும் எதார்த்தத்தைப் பொருட்படுத்தாமல் கட்டாயப்படுத்துவதன் பெயரில் நிலையற்று சென்று கொண்டிருக்கிறது.

உத்திரப் பிரதேச தாய்மார்களின் கருவுறும் விகிதமானது தேசிய குடும்ப சுகாதார கணக்கீட்டின்படி 2.1 என்ற அளவில் உள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு 3.8 என்ற விகிதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை வளர்ச்சியோடு ஒப்பிட வேண்டும். இதுபோலவே குழந்தை இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவைகளும் மேற்குறிப்பிட்ட ஆண்டுகளோடு ஒப்பிடும்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பல மாநிலங்களின் தொடர் முயற்சியின் விளைவாக குழந்தை பிறப்பு வீதமானது 2.1 என்ற அளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனை தேசிய குடும்ப சுகாதார கணக்கீடு-4 தெரிவிக்கிறது. அந்த அறிக்கையின் மூலம் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, தமிழ்நாடு உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் (யூனியன் பிரதேசங்கள் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள் தவிர) ஆகியவை இந்த முன்னேற்ற நிலையை அடைந்துள்ளன. இவை அனைத்தும் வளர்ச்சிக்கான அறிகுறியே.

தேசிய குடும்ப சுகாதார கணக்கீடு நான்கின் படி குழந்தை இறப்பு விகிதம் ஆனது உத்தரப் பிரதேசத்தில் 78 ஆகவும், கேரளாவில் 7 ஆகவும் தமிழகத்தில் 27 ஆகவும் உள்ளது.

பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் விகிதமானது உத்திரப் பிரதேசத்தில் 33 சதவீதம், கேரளாவில் 72 சதவீதம், தமிழகத்தில் 50 சதவீதமாக உள்ளது.

கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை கொடுப்பதற்கான எந்த அளவுக்கு நடவடிக்கைகளை முடுக்கி விடுகிறோமோ அந்தளவுக்கு மக்கள் தொகையை நிலைப்படுத்துதலுக்கான பலனை உணர முடியும்.

ஆண், பெண் விகிதம் குறைபாடு என்ற மிகப் பெரிய பிரச்சினை

இரு குழந்தை கொள்கையினை கட்டாயப்படுத்தும் போது அதன் தாக்கமானது ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் மட்டுமே அதிக முனைப்பு காட்டுவதில் போய் முடியும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சீனா.

சீனாவானது தொடக்கத்தில், இரு குழந்தை கொள்கையினை நடைமுறைப்படுத்தியது. அத்திட்டம் எதிர்பார்த்த விளைவை தராததால் ஒரு குழந்தை கொள்கையினை மிகவும் கெடுபிடியுடன் நடைமுறைப்படுத்தியது. இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக குழந்தை பாலின விகிதத்தில் மிகப் பெரியப் பேரழிவை சந்தித்தது.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் குழந்தை பாலின விகிதமானது 903 என்ற மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. அதே நேரத்தில் கேரளாவில் 1047 என்றும் தமிழகத்தில் 954 என்ற அளவிலும் உள்ளன. தேசிய குடும்ப சுகாதார கணக்கீடு 4 மற்றும் 3 ஆகியவற்றை ஒப்பிடும் பொழுது உத்திரப் பிரதேசத்தில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் மிகவும் மோசமடைந்து இருக்கின்றன.

இப்படி இருந்தபோதும் மடத்தனமான தவறான பாதையை நோக்கி அம்மாநிலம் செல்வதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.

பின்தங்கிய சமூக பொருளாதாரம் மற்றும் குடும்பத்தின் அளவு ஆகியவற்றுக்கான உள்ளார்ந்த உறவுகள் பொருளாதார ரீதியான பாகுபாட்டுடன் ஆராயப்பட வேண்டும்.  சமூகத்தில் ஏழ்மையிலும் ஏழ்மையாக உள்ள சிறுபான்மையினர், தலித்துகள் நிலை ஆராயப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட மக்களுக்கு அரசியல் மற்றும் நிர்வாகத்திடம் இருந்து நலத்திட்டங்களை கிடைப்பதற்கான இடைவெளியை குறைக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் சமூகநீதி உரிமையும் கிடைப்பது மிகவும் கடினமாகிவிடும்.

எங்களின் அனுபவத்தில் பார்க்கும் பொழுது, ஏழைச் சமூகமானது மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், உண்மை என்னவெனில் பெரும்பான்மையான ஏழை மக்கள் கருத்தடைக்கான சேவைகளை பயன்படுத்துகின்றனர் என்பது தான்.

உத்திரப் பிரதேசத்தில் ஐந்தில் ஒரு பகுதி மக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்கத் தவறிய அரசு, தேவையற்ற அளவில் 18 சதவீதமாக கருத்தடை சேவையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. (தமிழகத்தில் 10 சதவீதமாக இதன் அளவு உள்ளது)

சட்டமானது சரியான முறையில் சரியான நேரத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுகாதார பராமரிப்பு உரிமைக்காக ஏன் பல பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம்?

இத்தனை ஆண்டுகளில் அரசு மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வதில் தோல்வி அடைந்துள்ளதே, அதற்காக நாங்கள் ஏன் அபராதம் விதிக்கக் கூடாது ?

கிரிமினல்தனமாக உருவாக்கப்பட்ட கட்டாயக் கருத்தடை மையங்களில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டு மனித உரிமைகள் நசுக்கப்பட்ட நினைவுகள் நம்மை விட்டு எப்போதும் அகலப் போவதில்லை. தேவிகா பிஸ்வாஸ் எதிர் யூனியன் ஆப் இந்தியா வழக்கில் கருத்தடை மையங்களை முறைப்படுத்துவதற்காக முயற்சி எடுத்தது உச்சநீதிமன்றம்.

மிக மிக சமீபத்தில், உத்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஊனமுற்ற ஒருவர் கொரோனா தடுப்பூசிக்கு செலுத்த சென்றபொழுது அவர் கட்டாயப்படுத்தப்பட்டு கருத்தடை செய்யப்பட்டார். கொடுக்கப்பட்ட இலக்கை நிறைவேற்றுவதற்காக இச்செயல் நடந்ததாக கூறப்படுகிறது.

தவறான பாதையில் செல்லும் அரசு

வெளிப்படையாகத் தெரியக் கூடிய விஷயம் என்னவெனில், அரசானது மக்களின் நல்வாழ்விற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் குடிமக்களின் மீது நம்பிக்கை வைக்காமல் பிரபுத்துவ அடக்குமுறை வகைகளையே பெரிதும் வெளிப்படுத்துகின்றது என்பதை சமீபகால செயல்கள் மூலம் உணர முடியும்.

போலீஸின் கேவலமான அராஜகமான அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்து மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது உரிமைகளை நிலை நாட்டுவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?
♦ தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்

மக்கள் தொகை நிலைப்படுத்துதல் தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கூட்டு முயற்சிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அறிவியல் பூர்வமான சான்றுகளை பாராமல் கொண்டுவரப்பட்ட இந்த மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் மசோதாவானது திரும்பப் பெறப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். பிற மாநில அரசாங்கங்கள் எந்த அடிப்படையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறதோ அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நமது அரசாங்கங்களுக்கு வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களை குற்றம் சாட்டி அவர்களுக்கு அபராதம் விதிப்பது மூலம்தான் கல்வி மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருந்த தங்களது பொறுப்பின்மையையும் தோல்விகளையும் மூடி மறைக்க முடியும்.

(AN IRRATIONAL DRAFT POPULATION CONTROL BILL THAT MUST GO என்ற தலைப்பில் தி இந்து ஆங்கில நாளிதழில் 17.07.2021 அன்று வெளிவந்த கட்டுரை)


கட்டுரையாளர்கள் : வந்தனா பிரசாத் மற்றும் தீபா சின்கா
தமிழாக்கம் : மருது
செய்தி ஆதாரம் : The Hindu

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க