தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NRC) நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.3000 கோடிக்கு மேல் நடுவண் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் இதை செயல்படுத்தப் போவதில்லை என சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. விரைவில் தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) திட்டம் ஆதாரமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டமும் நாடு முழுவதற்கும் செல்லத்தக்கது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 256 -இன் படி இதை நடைமுறைப்படுத்த வேண்டியது ஒவ்வொரு மாநில அரசின் கடமையாகும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை செயல்படுத்த முடியாது என்று சொல்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்கிற கேள்வி இங்கு எழுகிறது. ஆனால் இத்தகைய திட்டங்கள் சட்டத்தின் ஒரு பகுதியா என்பதிலிருந்தே இதற்கான விடையைத் தேட வேண்டும்.
இந்தக் கேள்வி மிக முக்கியமானது. அரசியலமைப்புச் சட்டப்படி பார்த்தால் மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசுகள் மறுக்க முடியாது. சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒரு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும். மத்திய அரசின் உத்தரவை மீறும் மாநில அரசுகளை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356 இன்படி கலைப்பதற்கும், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவதற்கும் இடமிருக்கிறது.
அத்தகைய சூழல் இன்னும் உருவாகவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பதற்குப் பதிலாக, அதைத் திரும்பப் பெறக்கோரி சில மாநில அரசுகள் வெறுமனே தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றி உள்ளன. முதன் முதலில் கேரளதான் இது போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தகைய தீர்மானங்களுக்கு சட்டமன்ற விதிகளின்படி எவ்வித அனுமதியும் கிடையாது என்றாலும், ஒரு பிரச்சனையைப் பற்றி விவாதிப்பதற்காக சட்டமன்ற விதிகளைக்கூட நிறுத்தி வைக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
CAA செல்லுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரைவில் பரிசீலிக்க உள்ளது. துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள சட்டவிரோதக் குடியேறிகள் குறித்து நீதிமன்றம் எத்தகைய ஒரு தீர்ப்பையும் வழங்கி இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரலாம். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஏதோ வகையில் நீண்ட காலத்துக்கு இந்தியர்களை விரட்டிக் கொண்டே இருக்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும், தாங்கள் முகாம்களில் அடைக்கடுவோமோ அல்லது நாடு கடத்தப்படுவோமோ என்கிற ஒரு சாராரின் அச்சம் மட்டும் நீங்கப் போவதில்லை.
படிக்க:
♦ வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன் கவிதை
♦ CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !
வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் போதே குடியுரிமைச் சட்ட விதிகள் 2003 இன் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) உருவாக்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேலையை முடுக்கி விட்டுள்ளது நடுவண் அரசு. குடியுரிமைச் சட்டம் 1955, விதி 18 இன் கீழ் வரும் துணை விதிகள் 1 மற்றும் 3 இன் படி குடியுரிமைச் சட்ட விதிகள் 2003 உருவாக்கப்பட்டுள்ளன. இதன் பிரிவு 2(l) இன் படி வரையறுக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) என்பது ஒரு கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் நபர்களின் விவரங்களைக் கொண்ட பதிவேடாகும்.
மாநில அரசின் வருவாய் அலுவலரே உள்ளூர் பதிவாளராகவும் செயல்படுவார். இவர்தான் தனது ஆளுகைக்கு உட்பட்ட கிராம மட்டம் வரை வசிக்கும் மக்கள் அனைவரையும் பற்றிய விவரங்களை சேகரித்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் (NPR) தயாரிப்பார் என துணை விதி 4 சொல்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR) உள்ள விவரங்கள்தான் உள்ளூர் பதிவேட்டிலும் இருக்கும் என துணை விதி 5 சொல்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சரிபார்க்கப்பட்ட பிறகு அதன் விவரங்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) சேர்க்கப்படும்.
ஆக NPR என்பது குடிமக்களைப் பற்றிய விவரம் மட்டுமன்றி கிராம மட்டம் வரை வசிக்கும் அனைவரின் விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமாகும். NRC -க்கான தரவுகள் இதிலிருந்தே எடுக்கப்படும். எனவே NRC தயாரிப்பதற்கு NPR மிகவும் அவசியமானது. NPR மற்றும் NRC ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை விதிகள் தெளிவுபடுத்துகின்றன. NRC உடன் CAA சட்டபூர்வமாக இணைக்கப்படவில்லை என்றாலும், பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களின் அறிக்கைகள் இவற்றுக்குள்ள இணைப்பை தெளிவு படுத்துகின்றன.
CAA, NRC மற்றும் NPR பற்றிப் பேசும் பொழுது இவை சட்டப்படி செல்லத்தக்கவைதானா? என்கிற முக்கியமான விசயம் மட்டும் விவாதிக்கப்படாமலேயே விடுபட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட குடியுரிமை சட்ட விதிகளில் NPR நடைமுறை பற்றி பேசப்பட்டாலும், இதன் மூலச் சட்டமான குடியுரிமைச் சட்டம் 1955-ல், எந்த ஒரு விதியிலும் NPR நடைமுறைப்படுத்துவதைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. இது ஆச்சரியமானது என்றாலும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
படிக்க:
♦ குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !
♦ அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram
குடியுரிமைச் சட்டத்தின் 18-வது பிரிவின் (1) மற்றும் (3) துணைப் பிரிவுகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள NPR குறித்த விதிகள் மிகவும் விசித்திரமானது. குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று பிரிவு (1) தெளிவாகக் கூறுகிறது. ஆனால் NPR தயாரிப்பது பற்றி குடியுரிமைச் சட்டத்தில் எங்குமே பேசப்படவில்லை. மூலச் சட்டமான குடியுரிமைச் சட்டத்தில் சொல்லியிருந்தால் மட்டுமே அது பற்றிய விதிகளை உருவாக்க முடியும். விதிகள் உருவாக்குவதற்கு இது மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும். விதிகள் தனிப்பட்ட முறையில் அதிகாரம் கொண்டவை அல்ல. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை என்றால் எந்த ஒரு முக்கியமான திட்டத்தையும் இந்த விதிகளை மட்டும் கொண்டு நடைமுறைப்படுத்த முடியாது. அதிகார முறைகேட்டுக்கு வழிவகுக்கும் இத்தகைய விதிகள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல. சட்டக் கோட்பாடுகளும் கொள்கைகளும் போதுமான அளவு வகுக்கப்பட்டிருந்தால் மட்டுமே சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு வழங்கப்படுகிறது என டாடா நிறுவனத்திற்கும் அதன் தொழிலாளர்களுக்கும் இடையிலான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தி உள்ளது.
NPR தயாரிப்பதற்கு குடியுரிமைச் சட்டம் 1955 இல் இடமில்லை என்பதே உண்மை. எனவே அதற்கான விதிகளையும் வகுக்க முடியாது. அதற்கான சட்டக் கொள்கைகளும் கோட்பாடுகளும் முதலில் வகுக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் விதிகளை வகுக்க முடியும். இதுதான் துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கான அடிப்படைக் கொள்கையாகும். விதிகள் என்பவை துணைச் சட்டமாகும், அவை மூலச் சட்டத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
மூலச்சட்டத்திற்குப் புறம்பாக விதிகள் இருந்தால் அவை முறைகேடானவை எனக்கூறி நீதிமன்றம் அவற்றை இரத்து செய்து விடும். அரசுத் துறைகள் இந்த விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரத்தை மூலச்சட்டத்திலிருந்தே பெறுகின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட திட்டம் குறித்து மூலச்சட்டத்தில் இடமில்லை என்றால் அது குறித்த விதிகளை உருவாக்க அரசுத் துறைகளுக்கு அதிகாரமில்லை.
NPR தொடர்பான விதிகள் பாரதூரமான குறைபாடுகளைக் கொண்டதாகவே உள்ளது. விதிகள் வடிவமைக்கப்பட்ட காலத்திலிருந்தே இக்குறைபாடுகள் நீடிக்கின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்பட்டதாலேயே இவ்விதிகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்துவிட முடியாது. மூலச் சட்டத்தில் வழிவகை செய்தால் மட்டுமே இக்குறைபாடுகளை சரி செய்ய முடியும்.
கட்டுரையாளர் : P.D.T Achary
தமிழில் : ஊரான்
நன்றி : தி வயர்.
குறிப்பு : P.D.T ஆச்சாரி மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் அரசியலமைப்பு நிபுணர் ஆவார்.
NPR கணக்கெடுப்பை புறக்கணிக்க ஒருசாரார் திட்டமிட்ட நிலையில் புறக்கணிப்பால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை விளக்கவும்.
லாரன்ஸ் பிரிக் எனும் அரசியல் அறிஞர் பாஸிசம் என்றால் என்னவென்று பதிநான்கு கூறுகளாய்ப் பிரித்து நமக்கு விளக்குகிறார், அவை என்னவென்று பார்க்கலாம்.
1) அதீத தேசியவாதம்.
அதாவது நாடுதான் எல்லாமும் எனப் பேசுவது, நாடுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று பேசுவது, அது தேசப்பற்று என்பதை மிஞ்சி அடுத்தவர் மீதான வன்முறை என்று மாறிப்போவது.
2) மனித உரிமை மறுப்பு.
அதிகாரத்தில் இருப்பவர் தம்மைக் காத்துக் கொள்ள மனித உரிமையற்ற சூழலை உருவாக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, அதிகாரத்தில் இருப்பவர் எவரும் வன்முறையைக் கையில் எடுக்கலாம் என்பது போல.
3) பொது எதிரி என்கிற கற்பனையை உருவாக்குவது, அதாவது மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பாமல் இருக்க குற்றமே செய்யாத சம்பந்தமே இல்லாத ஒரு பிரிவினரை நாட்டுக்கே எதிரியென சித்தரிப்பது, அந்த எதிரி என்கிற ஒன்று ஒரு இனமாகவோ மதமாகவோ நாடாகவோ இருக்கலாம்.
4) ராணுவத்தின் அதிகாரம்.
அதாவது நாட்டின் பொருளாதாரம் பெருமளவு ராணுவத்திற்கே செலவழிக்கப்படும். அந்த ராணுவமும் வெளிநாட்டினருடன் போரிடுவதை விட உள்நாட்டு மக்களை கட்டுப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்குமே அதிகமாக பயன்படுத்தப்படும்.
5) ஆணாதிக்கம்.
அதிகாரத்திலிருப்பவர் அனைவரிடமும் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும். அதிகாரத்தில் பெண் அமர்த்தப்பட்டாலும் அவர் ஆணாதிக்கத்தைத் தூக்கிச் சுமப்பவர்களாகவே இருப்பார்.
6) ஊடகங்களில் அரசின் தலையீடு.
அரசிற்கு சாதகமாகவே ஊடகங்கள் செயல்படும் அல்லது செயல்படுத்தப்படும்.
7) தேசப் பாதுகாப்பு என்ற அச்சம்.
அதாவது தேசத்திற்கு பாதுகாப்பில்லை என்கிற ஒரு அச்சத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டேயிருப்பது. அதன் வழியே அரசு செய்யும் எல்லா செயல்களுக்கும் மக்களிடம் ஆதரவைத் திரட்டிக் கொள்ளுவது.
8) மதமும் அரசும் ஒன்றாக இருக்கும். அதாவது குறிப்பிட்ட மதத்தின் ஆதிக்கம் அரசில் அதிகமாக இருக்கும். அரசிலிருக்கும் அமைச்சர்கள் அதிகாரிகள் தம் பெரும்பான்மை மதத்தையே முன்னிருத்தி அரசியல் செய்வர். அரசின் குறைபாடுகள் எல்லாமும் மதம் என்கிற போர்வையால் மூடி மறைக்கப்படும்.
9) முதலாளிகள் பாதுகாக்கப்படுவர். அதாவது தொழிலதிபர்கள் முதலாளிகளின் சொகுசு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பையும் அரசு ஏற்படுத்தாது, அவர்களை முதற் கடமையாக பாதுகாக்கும். அவர்கள் மக்களைச் சுரண்ட அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
10) உழைக்கும் சக்தி ஒடுக்கப்படும். அதாவது தொழிலாளர் நலன் நசுக்கப்படும். தொழிலாளர்கள் சங்கங்கள் அழிக்கப்படும். தொழிலாளர்கள் அரசியல் சக்தியாக உருவாவதை அரசு முறியடிக்கும்…
11) அறிவு மறுக்கப்படும்.
அதாவது அரசு விரும்பும் கல்வி மட்டுமே அனுமதிக்கப்படும், அதை எதிர்க்கும் அறிஞர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள், கலைகளும் ஒடுக்கப்படும்…
12) தண்டனைகள் மீதான ஆர்வம். அதாவது பாஸிஸ ஆட்சியில் காவல்துறைக்கு கட்டுமீறிய அதிகாரம் வழங்கப்படும். தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட முன்னுரிமைகள் வழங்கப்படும். நியாயமான கோரிக்கைகள் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படும்.
13) ஊழல்.
அதாவது முதலாளிகளுக்கு ஏதுவான வழிமுறைகள் தங்கு தடையின்றி திறந்துவிடப்படும். முதலாளிகளுக்கு ஆதரவானவர்களே அதிகாரங்களில் நியமிக்கப்படுவர்.
14) முறைகேடான தேர்தல்கள்.
அதாவது பாஸிசம் பரவும் நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் முறைகேடுகள் மிகுந்திருக்கும். மாற்றுக் கட்சித் தலைவர்கள் கொல்லப்படுவர் அல்லது சட்டம் வளைக்கப்படும் அல்லது வாக்கு எந்திரங்கள் திருடப்படும் குளறுபடியாகும், வாக்கு எண்ணிக்கை பொய்யாக சொல்லப்படும்.
இந்த 14 விஷயங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இந்த 14 விஷயங்களும் உங்களுக்கு பரிச்சயமானதாகத் தோன்றுகிறதா என யோசியுங்கள்.
பரிச்சயமானது போல் தோன்றினால் குறித்துக் கொள்ளுங்கள் உங்களையும் முசோலினி போன்ற ஒரு பாஸிஸ்டே ஆண்டு கொண்டிருக்கிறார் என்று.
ஏனென்றால் பாஸிசம் மக்களின் ஆதரவின்றி வளர்வதில்லை.
2003 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாஜக அரசின் குடியுரிமை சட்டதிருத்ததில் 14A என்ற சட்டபிரிவு புதிதாக சேர்க்கப்பட்டு இதில் 1 வது உட்பிரிவில் The Central Government may compulsorily register every citizen of India and issue national identity card to him. ஏற்றுள்ளது. கட்டாயமாக ஒவ்வொரு குடிமகனாக பதிவு செய்வது மற்றும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்றும் உள்ளது.
மேற்கண்ட 1955 சட்டத்தின் 18(1) இச்சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற விதிகளை உருவாக்கலாம் என்றுள்ளது.
அதன் படி குடிமக்களை பதிவு செய்ய அவர்களை கணக்கெடுப்பதும் தரவுகளை சேகரிப்பதும் அவசியம் என்ற வகையில் கணக்கெடுப்பு நடத்துவது இன்றியமையாதது என்று பாஜக அரசு சொன்னால் அது எப்படி மேற்கண்ட திருத்த சட்டத்திற்கு எதிரானதாக அமையும்?