“கிறிஸ்தவ தலித்துக்கு பட்டியல் சாதி அந்தஸ்து பொருந்தாது” – பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக உச்சநீதிமன்றம்

மதம் மாறுவதாலேயே சாதிய அடையாளம் நீங்கி விடுவதாகச் சட்டம் கருதினால் சாதியத்தின் பிறப்பிடமே இந்து மதம்தான் என்ற உண்மையைச் சட்டம் ஒப்புக்கொள்வதாகப் பொருள். அப்படியெனில் தடை செய்யப்பட வேண்டியது சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்து மதம்தானே தவிர, தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகள் அல்ல.

ந்திராவைச் சேர்ந்த சின்தடா ஆனந்த் என்பவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி, போதகர் ஆன நிலையில் 2021-ஆம் ஆண்டில் தன்னை சாதி ரீதியாகத் துன்புறுத்திய ராமிரெட்டி என்பவர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். ஆந்திர உயர்நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, மன்மோகன் அடங்கிய அமர்வு இந்து, சீக்கியம், பௌத்தம் தவிர பிற மதத்தினர் பட்டியலின அந்தஸ்து கோர முடியாது; வேறு மதத்திற்கு மாறும் போது அதுவரை அனுபவித்து வந்த பட்டியல் சாதி அந்தஸ்தை அவர்கள் உடனடியாக இழப்பர்; இது பட்டியல் சாதியினர் தொடர்பான “அரசியலமைப்பு (பட்டியல் சாதி) ஆணை, 1950”-இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என கடந்த மார்ச் 24 அன்று தீர்ப்பு வழங்கியது.

உச்சிக் குடுமி மன்றமானது, ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ தனது தீர்ப்பால், மீண்டும் ஒருமுறை இந்திய அரசியல் சாசனத்தின் வழியாக இந்து மதம்தான் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது‌.

மேலும், தனது தீர்ப்பில், பிற மதத்திற்கு மாறியவர்கள் மீண்டும் திரும்பி பட்டியலின அந்தஸ்து பெற வேண்டுமெனில், மூன்று ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என விளக்கியுள்ளது.

  1. “இந்து, சீக்கியர், பௌத்த மதத்திற்கு மீண்டும் மாறிவரும் நபர் துவக்கத்தில், அதாவது 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியல் சாதி) ஆணையின்கீழ் அறிவிக்கப்பட்ட சாதியில்தான் பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்”.

நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால், கிறிஸ்தவர் அல்லது இஸ்லாமிய மதத்திலிருந்து மீண்டும் தாய்மதத்திற்கு திரும்பும் ஒரு பட்டியல் சாதியினர் 75 ஆண்டுகளுக்கு முன் தன் தந்தையோ, தாத்தாவோ பட்டியல் சாதி பிரிவைச் சேர்ந்தவராகத்தான் இருந்தார் என சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்கிறது. இது சாத்தியமா?

இந்த விளக்கத்தின் மூலம் இந்து மதத்திலிருந்து எவரொருவரும் வெளியேறினால் அவர்கள் உரிமைகளை இழப்பார்கள் என மிரட்டுகிறது உச்சிக் குடுமி மன்றம்.

  1. “மாறிய மதத்தை முழுதாக துறந்துவிட்டு மீண்டும் தாய் மதம் திரும்பியதற்கான நம்பகமான சான்றுகள் இருக்க வேண்டும்.”

அதாவது மாற்று மதத்தைத் துடைத்தெறிந்துவிட்டு வந்துவிட வேண்டும், இனி எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது, திரும்பிக் கூட பார்க்கக் கூடாது என்கிறது.

  1. “அவர் தன் பழைய சாதியின் சடங்குகள், பழக்கவழக்கங்கள், வழிபாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். தாய் மதம் திரும்பியது தொடர்பான, சமூகத்தினர் ஏற்றுக் கொண்டதற்கான சான்று இருக்க வேண்டும். சுயமாக அறிவித்துக் கொண்டால் மட்டும் போதாது, அசல் சமூக மக்கள் அவரை தங்களது சமூகத்தைச் சேர்ந்தவராக அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது.”

இதில் நீதிமன்றம் சொல்ல வருவது என்ன?

பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் தன் பழைய சாதியின் சடங்குகள், பழக்கவழக்கங்கள், வழிபாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்கிறது தீர்ப்பு. அதாவது, தனது வீட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் இந்து மதம் சொல்லி வைத்திருக்கின்ற சாதி கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுத்தான் செய்ய வேண்டும். கோவிலுக்கு வெளியே நின்றுதான் சாமி கும்பிட வேண்டும்; உள்ளே செல்ல உரிமை கேட்கக் கூடாது‌. செத்த மாட்டின் தோலை உரிக்க வேண்டும். குலத்தொழில் செய்ய வேண்டும். சுருக்கமாக, பார்ப்பனியத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும். இந்த இழிவுகள் அனைத்தையும் கடைப்பிடிக்கப்படுவதை அவர் சார்ந்த ஒட்டு மொத்த சமுதாய மக்களும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது. இது தீண்டாமையை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து நடைமுறைப்படுத்துவதற்குச் சமமாகும்.

மேலே குறிப்பிடப்பட்ட மூன்றில் ஒரு ஆதாரத்தைச் சமர்ப்பிக்கத் தவறினாலும், மீண்டும் பட்டியல் சாதி அந்தஸ்தை அந்த நபரால் பெற முடியாது என்று விளக்கியுள்ளது இத்தீர்ப்பு.

மேலும், ஒருவர் இந்து பட்டியல் சாதி என பதிவு செய்து கொண்டு கிறிஸ்தவ வழிபாட்டை கடைப்பிடிப்பதைத் தீவிரமாக உற்று நோக்குகிறது சட்டம். ஒருவரின் வழிபாட்டு உரிமையைச் செல்லாது என சட்டப்படி மறுப்பதென்பது, மக்களின் மத நல்லிணக்க மரபை இல்லாது ஒழிக்கும் இந்துத்துவ பாசிசப் போக்கு ஆகும். இந்துவாக இருக்கும் ஒருவர் வேளாங்கண்ணி கோவிலுக்குப் போகிறார்; இஸ்லாமிய கந்தூரி விழாவிலும் பங்கேற்கிறார். இதையெல்லாம் எச்சரித்து தடை செய்கிறது. மேலும் அவர்களை இந்து சாதிய கட்டமைப்பிலேயே அடக்கத் துடிக்கும் சாதி இந்துவின் மனநிலையை அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது இத்தீர்ப்பு.

எந்த ஒரு மதத்தையும் பின்பற்றுவதென்பது ஒருவரது அடிப்படை ஜனநாயக உரிமை. பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களுக்கு மாறினாலும் சாதிய தீண்டாமை துரத்துகிறது. இதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.

மதம் மாறுவதாலேயே சாதிய அடையாளம் நீங்கி விடுவதாகச் சட்டம் கருதினால் சாதியத்தின் பிறப்பிடமே இந்து மதம்தான் என்ற உண்மையைச் சட்டம் ஒப்புக்கொள்வதாகப் பொருள். அப்படியெனில் தடை செய்யப்பட வேண்டியது சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்து மதம்தானே தவிர, தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகள் அல்ல.

அரசியலமைப்பு உறுப்பு 341-இன் படியான எஸ்.சி. பட்டியலின் நோக்கம் என்பது மதத்தின்படி மக்களை வகைப்படுத்துவதல்ல. சமூக ரீதியில், கல்வி ரீதியில் தாழ்த்தப்பட்ட மக்களை இனங்கண்டு அறிவித்து அவர்களுக்கான பாதுகாப்பு உரிமைகளை அங்கீகரிப்பதே.


படிக்க: ஈரான் மீதான போர்: மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி!


பழங்குடியினர் விவகாரத்தைப் பொறுத்தவரை மதமாற்றம் என்பது பெரிய தடையாக இல்லை. அதாவது அவர் மாற்று மதத்திற்கு மாறினாலும், பழங்குடியின அந்தஸ்தை உடனடியாக இழக்க மாட்டார் என்கிறது சட்டம். பரவாயில்லையே இந்திய நாட்டுச் சட்டம் இந்நாட்டுப் பழங்குடியினருக்கு ஜனநாயகத்தை வழங்குகிறது என நினைத்தால் நம் முகத்தில் மீண்டும் கரியைப் பூசுகிறது நீதிமன்றம்.

பழங்குடியினராக இருந்தாலும் மதம் மாறியவர்கள் பழங்குடியின மரபுகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சார வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனரா என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும் பழங்குடியின சமூகத்தவரால் ஏற்கப்பட்டவராக இருக்க வேண்டும் என இரு நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

பழங்குடியின பிரிவைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐந்து வேளை தொழுகை நடத்த அனுமதி உண்டா என்றால் அதற்குத் தடை. அதுதான் சட்டம் சொல்கிறதே, பழங்குடியின மரபுகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சார வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனரா என்பதை நிரூபிக்க வேண்டும் என்று. ஆக இதுவும் ஒரு ஏமாற்று வேலை.

ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான வனவாசி கல்யாண், பழங்குடியின மக்கள் மத்தியில் வேலை செய்து “கர்வாப்சி” எனும் “தாய் மதம் திரும்புதல்” என்ற பெயரில் இந்து மதத்தை அவர்கள் மத்தியில் திணித்து வருகிறது.

மோடி தலைமையிலான இந்துத்துவ பாசிச கும்பல் அதிகாரத்திற்கு வந்த பின், இந்தியா முழுவதும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதிலும் கிறித்தவ, இஸ்லாமிய உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

வனவாசி கல்யாணும், ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி கும்பல்களும் கலவரங்கள் மற்றும் சதித்தனங்கள் மூலம் இந்து மதத்திற்குச் செய்கின்ற சேவையைத்தான் இந்திய அரசியல் சட்டமும், இந்திய நீதிமன்றங்களும் சட்டத்தின் பெயரால் செய்து வருகின்றன.

இந்த தீர்ப்பு வந்தவுடன் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத், வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 44 தனித் தொகுதிகளில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களில், 90 சதவிகிதம் கிறிஸ்தவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவின் மூலம், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்புமனுக்களைத் தீவிரமாகப் பரிசீலித்து, தகுதியற்ற வேட்பாளர்களை நிராகரிக்க உத்தரவிட வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய பொய்யைப் பரப்பி கிறிஸ்தவ தலித் மக்கள் மீது பாசிஸ்டுகள் தாக்குதல் நடத்துவதற்கான அடிப்படையையும் இத்தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மேலும், மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்குப் பட்டியலின அந்தஸ்து வழங்கப்படக் கூடாது என்ற சங்கப் பரிவார கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்கு இத்தீர்ப்பு அப்பட்டமாகத் துணைபோகிறது.

இன்று பாசிச கும்பல் இந்திய ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து கண்டு, அனைத்து உறுப்புகளையும் பாசிசமயமாக்கி வருகிறது. இந்த நாட்டை இந்துராஷ்டிரமாக மாற்றுவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீதிமன்றங்களும் சட்டத்துறையும் விதிவிலக்கல்ல. பாசிச கும்பலின் ஆட்சியில் இப்படியான தீர்ப்புகள் வருவதில் எந்த விதமான ஆச்சரியமும் இல்லை. இந்த பாசிச கும்பலை வீழ்த்தி மாற்றுக் கட்டமைப்பு – அரசியல் சாசனத்தைப் படைக்காமல், தலித் கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் வாழும் கோடான கோடி உழைக்கும் மக்களுக்கும் நம்மால் விடுதலை பெற்றுத்தர முடியாது.

உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவோம். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல்களை வீழ்த்தி, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைக்கக் களமிறங்குவோம்.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்,
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க