ஈரான் மீதான போர்: மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி!

எத்தனை தலைவர்களை அமெரிக்கா வான்வழியாகப் படுகொலை செய்தாலும், சொந்த நாட்டு மக்களின் ஆதரவு இல்லாமல் தாங்கள் விரும்பும் ஒரு கைப்பாவை ஆட்சியை அங்கு நிலைநிறுத்த முடியாது.

ரிந்துவரும் அமெரிக்க நிதி மூலதன ஆதிக்கத்தையும், உலக மேலாதிக்கத்தையும் எப்பாடு பட்டாவது தக்கவைப்பதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் பிராந்திய அடியாளான யூதவெறி பிடித்த இசுரேலும் இணைந்து, மேற்காசியாவில் ஒரு மாபெரும் பேரழிவுப் போரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

இரத்த வெறிபிடித்த அமெரிக்கா-இசுரேலின் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி உட்பட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியைக் குறிவைத்து இசுரேல் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் 165 அப்பாவி பெண் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இரத்தம் தொய்ந்த அக்குழந்தைகளின் புத்தகங்களும், புத்தகப் பைகளும் அக்கோரத் தாக்குதலின் இரத்தச் சாட்சியங்களாக இருக்கின்றன. மார்ச் 3 நிலவரப்படி, 787 ஈரானிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த இரத்தக்களரியை இன்னும் ஐந்து வாரங்களுக்கு நீட்டிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கொக்கரிப்பது ஏகாதிபத்தியத்தின் உச்சக்கட்டத் திமிரைக் காட்டுகிறது.

அமெரிக்காவின் பேச்சுவார்த்தை நாடகம்

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்ற பொய்யான குற்றச்சாட்டை சாக்காக வைத்துதான் ஈரான் மீது “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) தாக்குதலை அமெரிக்கா தொடுத்துள்ளது.

ஆனால், இத்தாக்குதலுக்கு முன்பாக ஓமன் மற்றும் ஜெனிவாவில் ஈரானுடன் அமெரிக்கா நடத்திய மறைமுக ‘அமைதிப் பேச்சுவார்த்தைகள்’ என்பவை, ஈரானின் விழிப்புணர்வையும் இராணுவத் தயார்நிலையையும் மட்டுப்படுத்துவதற்காக அரங்கேற்றப்பட்ட அப்பட்டமான நாடகமாகும்.

பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்ற டிரம்பின் மருமகன் ஜெரார்ட் குஷ்னரும், வெள்ளை மாளிகையின் சிறப்புத் தூதரான ஸ்டீவ் விட்காஃபும் அடிப்படையில் இசுரேலிய ஆதரவாளர்கள் மட்டுமின்றி, ஈரானுக்கு எதிரான தீவிரப் போர்வெறி மனநிலை கொண்டவர்கள் ஆவர். பேச்சுவார்த்தைக்கு இத்தகையோரை அமெரிக்கா அனுப்பியதே அப்பட்டமான சதியாகும். அதனால்தான், அவர்கள் தொடர்ந்து அதிருப்தியைக் காட்டியதுடன், தாக்குதலை உடனே நடத்த வேண்டுமென்றும் திரைமறைவில் காய்களை நகர்த்தினர். மறுபக்கத்தில், ஈரான் சார்பில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியோ, ஏகாதிபத்தியத்தின் இந்தச் சதியைப் புரிந்துகொள்ளாமல், “பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கிறது, விரைவில் நல்ல முடிவை எட்டுவோம்” என்று கூறிவந்தார்.

இந்நிலையில், பல நாட்களாகப் பாதுகாப்பான இடத்தில் தலைமறைவாக இருந்த ஈரான் உச்சத்தலைவர் அலி கமேனி, சிறப்புக் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியே வந்தார். இதனை எதிர்பார்த்திருந்த அமெரிக்கா, பேச்சுவார்த்தை குறித்து முடிவு கூறும் முன்பே பிப்ரவரி 27 அன்று ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. பிப்ரவரி 28 அன்று காலையில் ஒரே தாக்குதலில் கமேனி உட்பட 48 தலைவர்களையும் கமேனியின் குடும்பத்தினரையும் மொத்தமாக படுகொலை செய்தது.

உண்மையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தை என்பதே ஈரானைத் தாக்குவதற்கான அமெரிக்காவின் ‘தயாரிப்புக் காலகட்டம்’ மட்டுமேயாகும். பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஈரானை உளவியல் ரீதியாக நிராயுதபாணியாக்கிவிட்டு, அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி வளைகுடாவில் தனது போர்க் கப்பல்களையும் ஏவுகணைகளையும் குவித்துத் தாக்குதலுக்கு முழுமையாகத் தயாராகிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது.

“அமைதி ஒப்பந்தம் நமது கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. ஆனால், இந்தத் தீவிரமான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுச் சீர்குலைக்கப்பட்டுள்ளன” என்று இப்பேச்சுவார்த்தையின் முக்கிய மத்தியஸ்தரான ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அல்-புசைதி வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார். ஏகாதிபத்தியவாதிகளின் எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பின்னாலும் ஒரு பேரழிவுக்கான சதி ஒளிந்திருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த சான்று.

அதேசமயம், ஈரானியத் தலைமையின் இந்த வீழ்ச்சியானது, அதன் அரசியல் பலவீனத்தை மட்டுமல்ல, ஈரானிய உளவுத்துறையின் மாபெரும் தோல்வியையும் அப்பட்டமாகக் காட்டுகிறது.

உண்மையான “மொசாட்” உளவாளிகள் தங்களின் இராணுவ மற்றும் அரசியல் உயர்மட்டக் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவித் தங்கள் உயர்மட்டத் தலைவர்களையே படுகொலை செய்வதைத் தடுக்கத் தவறிய இதே ஈரானிய அரசுதான், தங்களுக்கு எதிராகப் போராடிய நூற்றுக்கணக்கான தொழிற்சங்கத் தலைவர்களையும் ஜனநாயகச் செயற்பாட்டாளர்களையும் “மொசாட் உளவாளிகள்” என்று முத்திரை குத்தி ஈவிரக்கமின்றித் தூக்கிலிட்டது என்பது மாபெரும் வரலாற்று முரண்பாடாகும்.

அரபு நாடுகளின் அப்பட்டமான துரோகமும்
நிதியியல் ஆயுதமும்

போருக்கு முன்பு, “அமெரிக்கத் தாக்குதலுக்கு எங்கள் வான் பரப்பையோ, இராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்று அரபு நாடுகள் (சவூதி, அமீரகம்) நாடகமாடின. ஈரானின் பதிலடிக்கு அஞ்சியும், தங்கள் நாட்டு மக்களின் கிளர்ச்சிக்கு அஞ்சியுமே இந்த நாடகத்தை அரங்கேற்றின.

ஆனால், போர் தொடங்கிய சில நாட்களிலேயே, இந்த அரபு மன்னர்களின் அப்பட்டமான ஏகாதிபத்திய விசுவாசமும் துரோகமும் முழுமையாக அம்பலமாகிவிட்டன. ஈரானை ஆயுதங்களால் வீழ்த்துவதற்கு இணையாக, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அமெரிக்காவின் உத்தரவுப்படி ஈரானுக்கு எதிராக ஒரு “நிதியியல் அணு ஆயுதத்தை” கையில் எடுத்துள்ளது.

சர்வதேசப் பொருளாதாரத் தடைகளால் உலகச் சந்தையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஈரான், வேறு வழியின்றித் தனது அத்தியாவசிய வணிகங்களுக்காகவும் டாலர் பரிமாற்றங்களுக்காகவும் கடந்த பல ஆண்டுகளாகத் துபாயையே ஒரு நிழல் நிதியியல் மையமாகச் சார்ந்திருந்தது. இந்த நிர்பந்தமான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அமீரகம் தற்போது ஈரானின் கழுத்தை அறுக்கும் சதியில் இறங்கியுள்ளது.

மார்ச் 2 நிலவரப்படி, துபாய் மற்றும் அபுதாபி பங்குச் சந்தைகளைத் தற்காலிகமாக மூடியுள்ள அமீரகம், ஈரானிய நிறுவனங்களின் நிதிப் பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஈரானின் அத்தியாவசியத் தேவைகளுக்காக அமீரகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியாதாரங்களையும், டாலர் விநியோகத்தையும் முற்றிலுமாக முடக்கும் நடவடிக்கையில் அமீரகம் இறங்கியுள்ளது.

இது ஏகாதிபத்தியம் தொடுத்துள்ள அப்பட்டமான பினாமி போராகும். நேருக்கு நேர் மோதாமல், தனது அடியாள் படையான அமீரகத்தைக் கொண்டு ஈரானியப் பொருளாதாரத்தை வேரறுக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. ஈரானின் பொருளாதாரம் ஏற்கெனவே அமெரிக்கத் தடைகளால் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள நிலையில், அமீரகத்தின் இந்த அதிரடித் தடையால் ஈரானிய நாணயமான “ரியால்” வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திக்கும். இதன் கொடூரமான விளைவாக உருவாகும் பணவீக்கம், விலையேற்றம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றின் ஒட்டுமொத்தச் சுமையும் ஈரானிய உழைக்கும் மக்களின் முதுகில்தான் வந்திறங்கும்.

“அரபு நாடுகளின் பாதுகாப்பு” என்ற பெயரில் அமெரிக்க இராணுவத் தளங்களைத் தங்கள் மண்ணில் தொடர்ந்து அனுமதித்தது மட்டுமின்றி, இப்போது ஈரானிய மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிதியியல் சூழ்ச்சிகளையும் அரங்கேற்றும் அமீரகத்தின் இந்தத் துரோகம், ஏகாதிபத்தியத்தின் இரத்தவெறிக்குத் துணைபோகும் அப்பட்டமான அடிமைத்தனமாகும். அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் அரபு அடிமை அரசுகளின் இந்த வரலாற்றுத் துரோகத்தை மேற்காசிய உழைக்கும் வர்க்கம் ஒருபோதும் மன்னிக்காது.

உலகப் பொருளாதார முடக்கமும்
அம்பலமான ரஷ்ய – சீன ஏகாதிபத்தியங்களும்

இந்தப் போர் வெறுமனே இராணுவத் தளங்களோடு நிற்கவில்லை; உலகப் பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளின் மீதும் நீண்டுள்ளது.

“ஸ்கை லைட்” என்ற எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 150-க்கும் மேற்பட்ட பிரம்மாண்டக் கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையில் (Strait of Hormuz) முடங்கியுள்ளன. சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா (அராம்கோ) சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமேசான் தரவு மையம் தாக்கப்பட்டதால் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் கிளவுட் சேவைகளும் (Cloud services) முடங்கியுள்ளன. இவற்றின் விளைவாக கச்சா எண்ணெய் விலை 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட இழப்பு மட்டுமல்ல; இந்த விலை உயர்வு மாபெரும் பணவீக்கமாக மாறி, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வின் மீதே கொடூரமான பொருளாதாரச் சுமையாக வந்திறங்கும் என்பதே உண்மை.

ஒருபுறம் உலகளாவிய பொருளாதார முடக்கமும், போர்ச் சூழலும் உழைக்கும் மக்களைக் காவு வாங்கும் அதே வேளையில், மறுபுறம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாக தங்களைக் காட்டிக்கொள்ளும் சீனா, ரஷ்யா ஆகிய ஏகாதிபத்தியங்கள், இந்த நெருக்கடியைத் தங்களின் சொந்த முதலாளித்துவ நலன்களுக்கான கண்ணாடியின் வழியாக மட்டுமே பார்க்கின்றன.

மத்திய கிழக்கில் சீனாவின் “பட்டுச் சாலைத் திட்டத்தின்” (Belt and Road Initiative – BRR) கீழ் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் குவிந்துள்ளன. மேலும், சீனாவின் மாபெரும் உற்பத்திப் பொருளாதாரத்திற்குத் தேவையான கச்சா எண்ணெயில் கணிசமான பகுதி வளைகுடாவிலிருந்தே வருகிறது. அதனால், அமெரிக்க-இசுரேலிய குண்டுவீச்சுகளால் தங்களின் விநியோகச் சங்கிலியும் வர்த்தக முதலீடுகளும் பாதிக்கப்படுமோ என்ற முதலாளித்துவ நலனிலிருந்தே சீனா தவிக்கிறது. அதனால்தான் களத்தில் ஈரானுக்கு எந்தவொரு இராணுவ உதவியும் செய்யாமல், ஐ.நா. சபையில் “இரு தரப்பினரும் நிதானம் காக்க வேண்டும்” என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறது. அத்துமீறித் தாக்குதல் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், தாக்கப்படும் ஈரானையும் தராசின் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் சீனாவின் சந்தர்ப்பவாதம் இதன் மூலம் அம்பலமாகிறது.

ரஷ்யாவோ ஈரானை வெறும் அரசியல் பகடைக்காயாக மட்டுமே பயன்படுத்துகிறது. உக்ரைன் போரில் தனக்கு அமெரிக்கா கொடுக்கும் இராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பதிலடி கொடுக்கவும், உலக அரங்கில் அமெரிக்காவின் பிம்பத்தைச் சிதைக்கவும் ஈரானின் அழிவை ரஷ்யா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. ஐ.நா. சபையிலும் தங்கள் நாட்டு ஊடகங்களிலும் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சிக்கும் ரஷ்யா, களத்தில் ஈரானுக்குத் தேவையான எஸ்-400 போன்ற அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்காமல் ஈரானை நடுத்தெருவில் கைவிட்டுவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஹார்மூஸ் நீரிணை முடக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டுவது, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ரஷ்யப் பொருளாதாரத்திற்குப் பெரும் லாபமே ஆகும். ஆக, ஏகாதிபத்தியப் போரில் உழைக்கும் மக்கள் சிந்தும் இரத்தத்தில் ரஷ்யா குளிர் காய்கிறது என்பதே அப்பட்டமான உண்மையாகும்.

அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வீழ்த்தித் தங்களைக் காப்பாற்ற இவர்கள் வருவார்கள் என்று ஒடுக்கப்பட்ட நாடுகள் நம்புவது எவ்வளவு பெரிய அரசியல் மாயை என்பதை இவர்களின் அப்பட்டமான சுயநலம் முழுமையாகத் தோலுரித்துக் காட்டுகிறது.

மோடி அரசின் பாசிசக் கூட்டு

அமெரிக்கா மற்றும் இசுரேலுடன் கொஞ்சிக் குலாவி வரும் பாசிச மோடி அரசும் தனது அப்பட்டமான ஏகாதிபத்திய விசுவாசத்தை இந்தப் போரில் காட்டியுள்ளது. ஈரானின் சாபஹார் கடற்படைத் தளம் தாக்கப்பட்டாலும், தங்களால் நிர்வகிக்கப்படும் வணிக முனையம் பாதுகாப்பாக உள்ளதே என இந்திய ஆளும் வர்க்கம் சுயநலத்தோடு நிம்மதியடைகிறது. இசுரேலியப் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் ஆலோசனைகளை மேற்கொள்ளும் மோடி அரசு, ஈரானில் நடக்கும் படுகொலைகளைக் கண்டிக்காமல் வெட்கக்கேடான மவுனம் சாதிக்கிறது. மேலும், கமேனியின் படுகொலையை கண்டிக்க வக்கற்ற அமெரிக்க அடிமை மோடி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத், பஹ்ரைன் நாடுகளில் உள்ள அமெரிக்க ஆயுத தளங்கள் மீதான ஈரானின் பதில் தாக்குதலை மட்டும் கண்டித்துள்ளார்.

அதேபோல், அமெரிக்க-இசுரேலின் போர்வெறியைக் கண்டித்து இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்களும், சிறுபான்மையினரும் வீதிக்கு வந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில், அனைத்து மாநில அரசுகளுக்கும் ‘சட்டம்-ஒழுங்கு’ எச்சரிக்கையை விடுத்துத் தனது பாசிச முகத்தைக் காட்டுகிறது மோடி அரசு.

உழைக்கும் வர்க்கத்தின்
தனிப்பெரும் வரலாற்றுக் கடமை

ஈரானிய மக்களை மதவாத சர்வாதிகாரத்தில் இருந்து விடுவிப்பதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா நடத்தும் இந்தத் தாக்குதலின் உண்மையான நோக்கம் ஈரானில் அமெரிக்க ஆதரவு ஆட்சி மாற்றத்தை நடத்துவதே ஆகும். மறுபுறம், கமேனியின் மரணத்தால் ஈரானுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொள்ள, 1979-இல் ஈரானிய மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அமெரிக்கக் கைக்கூலியான மன்னர் ஷாவின் வாரிசு ரேசா பஹ்லவியும் முயற்சித்து வருகிறார்.

ஆனால், எத்தனை தலைவர்களை அமெரிக்கா வான்வழியாகப் படுகொலை செய்தாலும், சொந்த நாட்டு மக்களின் ஆதரவு இல்லாமல் தாங்கள் விரும்பும் ஒரு கைப்பாவை ஆட்சியை அங்கு நிலைநிறுத்த முடியாது.

ஈரானிய மதவாத ஒடுக்குமுறை அரசை வீழ்த்த வேண்டியது அமெரிக்காவின் குண்டுகளோ, இசுரேலின் ஏவுகணைகளோ அல்ல, அது ஈரானிய உழைக்கும் வர்க்கத்தின் தனிப்பெரும் வரலாற்றுக் கடமை என்பதை உணர்ந்துள்ள மக்கள், அமெரிக்காவை நாட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியடிக்க வேண்டும் என்பதையும் நன்குணர்ந்துள்ளனர்.

எனவே, அமெரிக்க மற்றும் இசுரேலின் இந்தப் பாசிசப் போர்வெறி நடவடிக்கைகளுக்கும், அதற்குத் துணைபோகும் அரபு மன்னர்களுக்கும் எதிராக உலகம் முழுவதும் உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் வீதிக்கு வந்து போராட வேண்டும். உழைக்கும் மக்களின் சமரசமற்ற வர்க்கப் போராட்டங்கள் மட்டுமே ஏகாதிபத்தியத்தையும் போர்வெறியர்களையும் நிரந்தரமாக வீழ்த்தி உண்மையான விடுதலையைப் பெற்றுத்தரும்!


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க