பா.ஜ.க. கும்பல் தான் ஆட்சியைக் கைப்பற்றும் மாநிலங்களில் அரசு – அதிகார வர்க்கத்தின் துணையுடன் சட்டப்பூர்வமாகவும், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் குண்டர்கள் மூலம் சட்டவிரோதமாகவும் இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறது. அந்தவகையில், குஜராத், உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற இந்துராஷ்டிரத்திற்கான சோதனைச்சாலைகளின் வரிசையில் தற்போது ஒடிசா மாநிலமும் இணைந்திருக்கிறது.
ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான “பிஜூ ஜனதா தளம்” கட்சியின் 24 ஆண்டுகால ஆட்சியை வீழ்த்தி கடந்த 2024 ஜூன் மாதத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்து ஒடிசாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித் மக்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் இதுவரை இல்லாத வகையில் உச்சநிலையை அடைந்து புதிய இயல்புநிலையாக மாற்றப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவர்கள்: காவிகளின் முதன்மை இலக்கு
2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஒடிசா மாநிலத்தில் 11.6 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 70 சதவிகிதம் பேர் (8 லட்சத்திற்கும் அதிகமாக) பழங்குடியின மக்கள் ஆவர். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த பழங்குடியின மக்களே காவிகளின் முதன்மை இலக்காக உள்ளனர்.
ஜனவரி 4-ஆம் தேதி, ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தின் பஜ்ராங் கிராமத்தில் வழிபாட்டுக் கூட்டத்தை நடத்துவதற்காக சென்றிருந்த பாதிரியார் பிபின் பிஹாரி நாயக், கட்டாய மதமாற்றம் செய்வதாகக் கூறி சங்கப் பரிவாரக் குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். மூங்கில் கம்புகளால் அடித்து, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டார்; வலுக்கட்டாயமாக கழிவுநீரை அவர் வாயில் ஊற்றி, மாட்டுச் சாணத்தை வாயில் திணித்து சகித்துக்கொள்ள முடியாத சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவம் ஒடிசாவில் கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்படும் கோரத் தாக்குதலுக்கு ஒரு சான்று மட்டுமே.
இதேபோல், கன்னியாஸ்திரீகள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசுப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த தெருவோர வியாபாரிகள், தேவாலயங்களில் வழிபடும் பழங்குடியின மக்கள் என கிறிஸ்தவர்கள் பலரை ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கொடூரமாகத் தாக்கும் காணொளிகள் அவ்வப்போது வெளியாகிக் காண்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன.
உண்மையில், காவிக் குண்டர் படையே ‘கர்வாப்சி’ (தாய் மதத்திற்கு திரும்புதல்) என்ற பெயரில் கிறிஸ்தவ பழங்குடியின மக்களை வன்முறையின் மூலம் இந்து மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து வருகிறது.
இதன் உச்சமாக, இறந்த கிறிஸ்தவர்களின் உடலைக்கூட இந்து மதவெறிப்பிடித்த மிருகங்கள் விட்டு வைப்பதில்லை. பழங்குடி கிராமங்களில் இறந்த கிறிஸ்தவர்களின் உடலை ஊரின் பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய மறுப்பது; உடலை சடங்குகள் மூலம் ‘இந்துவாக மதம் மாற்றிய’ பிறகே அடக்கம் செய்ய அனுமதிப்பது என்ற புதிய வகையிலான வன்முறை ஒடிசாவில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மதம் மாறாமல் அடக்கம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் உடலை குழியிலிருந்து தோண்டி எடுத்து சிதைப்பது, திருடிச் செல்வது என பிணங்களையும் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர்.
படுகொலைக்கு உள்ளாக்கப்படும் இஸ்லாமியர்கள்
கடந்த ஜனவரி 14-ஆம் தேதி, ஒடிசாவின் பாலசோர் நகரத்தின் ஜெயதேவா கஸ்பா பகுதியிலிருந்து கால்நடைகளுடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற ஷேக் மகந்தர் முகமது என்பவர் பஜ்ரங் தள் குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உடலில் தாக்குதலுக்கு உள்ளாகாத பாகங்களே இல்லை எனும் அளவிற்கு அவர் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் மயக்கமடைந்த நிலையிலும் மரக்கட்டைகளால் அவரைத் தாக்கி “ஜெய் ஸ்ரீ ராம்”, “கௌ மாதா கி ஜெய்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தும் காணொளி காண்போரை பதைபதைக்க வைக்கிறது.
மகந்தர் பசுக் கடத்தலில் ஈடுபடுபவர் அல்ல, கொத்தனாராக வேலை செய்பவர் என்று அறிந்தேதான் காவிக் குண்டர்கள் இத்தாக்குதலை தொடுத்துள்ளனர். இது காவிக் கும்பலின் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பையும் திட்டமிட்டு கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற சதி நோக்கத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
இதேபோல, இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் கட்டாக் பகுதியில் தசரா பண்டிகையின் போது ஊர்வலங்களை நடத்தி திட்டமிட்டு கலவரத்தை நடத்தியிருக்கிறது காவிக் கும்பல்.
மேலும், ஒடிசாவில் தங்கி வேலை செய்யும் மேற்குவங்கத்தை சேர்ந்த இஸ்லாமிய புலம்பெயர் தொழிலாளர்களை ‘சட்டவிரோதக் குடியேறிகள்’, ‘வங்கதேச ஊடுருவிகள்’ என்றெல்லாம் பொய்யாகக் கூறி தாக்கி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குவது; தெருக்களில் நடந்து சென்றால் “நீ இந்தியனா? வங்கதேசியா?” என்று கேள்வியெழுப்பி தாக்குவது என்று இக்குண்டர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இத்தாக்குதல்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
வன்முறைக்கு இரையாகும் தலித்துகளும் பெண்களும்
கடந்தாண்டு ஜூன் மாதத்தில் கஞ்சம் மாவட்டத்தில் தலித் பனா சமூகத்தை சார்ந்த இரண்டு ஆண்கள் பசுக்களை கடத்தினர் என்று பொய் குற்றஞ்சாட்டி அவர்கள் மீது மனிதத்தன்மையற்ற தாக்குதலை நடத்தியது காவி குண்டர் படை. தலையில் ஒரு பகுதியை மொட்டையடித்து, பற்களுக்கு இடையில் புல் அரிவாளை வைத்து, ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்நடையைப் போல முழங்கால்களில் ஊர்ந்துவரச் செய்துள்ளது அக்கொடூர கும்பல்; புற்களை தின்ன வைப்பது, கழிவுநீரை குடிக்கச் செய்வது போன்ற கொடூரங்களையும் அரங்கேற்றியது. இச்சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒடிசாவில் ‘பசு பாதுகாப்பு’ என்ற போர்வையில் சாதி இந்துக்கள் தலித் மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருவதாக “தி வயர்” இணையதளம் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளது.
அதேபோல, ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்கள், சிறுமிகள் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும், காதலனுடன் பேசிக் கொண்டிருக்கும் பெண்களை மிரட்டி வன்கொடுமை செய்வதும் கட்டுங்கடங்காத அளவிற்கு அதிகரித்து அன்றாட நிகழ்வாகி வருகிறது.
2025 ஜூலையில் பாலசோரில் உள்ள பக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் 20 வயது மாணவியை துறைத் தலைவர் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளான். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம், பாலசோர் போலீசு, பாலசோர் பா.ஜ.க. எம்.எல்.ஏ-விடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாணவி கல்லூரியிலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இம்மாணவி ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி-யைச் சார்ந்தவர் என்பது காவிக் கும்பலின் யோக்கியதையை திரைக்கிழித்துக் காட்டுகிறது. இவ்வழக்கில் ஏ.பி.வி.பி-யின் இணைச்செயலாளர் உட்பட இருவரை போலீசு கைது செய்துள்ளது.
இவ்வாறு, பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் மீதான குற்றச் சம்பவங்களில் அரசுக் கட்டமைப்பு முழுவதும் சங்கப் பரிவாரக் குண்டர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் குண்டர்கள் ஈடுபடுவது அம்பலமானாலும், அக்குண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது; தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது; தாக்குதல் நடந்துகொண்டிருக்கும் இடத்திற்கு காலதாமதமாக செல்வது என்று ஒடிசா போலீசு அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் மற்றொரு குண்டர் படையைப் போலவே செயல்பட்டு வருகிறது.
இவையெல்லாம், சங்கப் பரிவாரக் குண்டர்களின் கும்பலாட்சி ஒடிசாவில் அரங்கேறி வருவதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
அதானி – அகர்வால்களின் ஆதிக்கமே இந்துராஷ்டிரம்
ஒடிசா மாநிலமானது இரும்புத்தாது, பாக்சைட், குரோமைட், நிலக்கரி, மாங்கனீசு உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைந்து காணப்படும் மாநிலமாகும். இந்தியாவின் மொத்த இரும்புத்தாது இருப்பில் 50 சதவிகிதம் ஒடிசாவில் மட்டுமே உள்ளது. அதானி-அகர்வால்-ஜிண்டால் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்களும் இந்த கனிம வளங்களை பல பத்தாண்டுகளாக சூறையாடி வருகின்றன. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இச்சூறையாடல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு கட்டாக் மாவட்டத்தில் உள்ள கண்டரேய், கந்துவாலி, ரஹாங்கோல் மற்றும் தலுவா கிராமங்களில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நிலக்கரி அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கையில் பா.ஜ.க. அரசின் துணையுடன் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தேவையான நிலக்கரிக்காக பிஜஹான், கோட்பஹேரி உஜெனி மற்றும் கோண்டுல்பாரா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
மேலும், பழங்குடியின மக்களின் நிலங்களை அதானி-அகர்வால் கும்பலுக்கு தாரைவார்ப்பது; முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கி சுரங்கத்துறையில் முதலீடுகளை குவிப்பது; ‘நக்சல் ஒழிப்பு’ என்ற பெயரில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பா.ஜ.க அரசு கனிம வளக் கொள்ளையை தீவிரப்படுத்தி வருகிறது.
அம்பானி – அதானி – அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையை கட்டற்ற வகையில் மேற்கொள்வதற்கே, தனது பிளவுவாத அரசியல் மூலம் மக்களைத் துண்டாடி இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கிறது பாசிச கும்பல். ஒடிசாவில் சிறுபான்மையினர், பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருக்கும் அதேவேளையில், கனிமவள சூறையாடல் தீவிரமாகி வருவது இதனை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மக்களிடையே வேர்பரப்பும் சங்கப் பரிவார அமைப்புகள்
ஒடிசாவில் “சிக்ஷ்ய விகாஸ் சமிதி” என்ற கல்வி அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகள், வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் கீழ் செயல்படும் ‘தொண்டு’ அமைப்புகள், ஏகல் வித்யாலயா என்ற ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் ஆகியற்றின் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் மக்கள் அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறது.
சிக்ஷ்ய விகாஸ் சமிதி என்ற கல்வி அமைப்பானது ஆர்.எஸ்.எஸ்-இன் வித்யா பாரதி என்ற கல்வி அமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் ஒடிசா மாநிலத்திற்கான பிரத்தியேக அமைப்பாகும். இதன் கீழ் சரஸ்வதி சிசு வித்யா மந்திர் மற்றும் சரஸ்வதி வித்யா மந்திர் என்ற பெயர்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் ஒடிசா முழுவதும் பற்றிப் படர்ந்திருக்கின்றன. நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளிகளில் படிக்கின்றனர். இப்பள்ளிகள் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளின் மூலம் இந்துத்துவ சித்தாந்தத்தை மாணவர்கள் மத்தியில் திட்டமிட்டு புகுத்துகின்றன.
வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற அமைப்பானது பழங்குடி மக்களை குறிவைத்து வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ்-இன் அமைப்பாகும். அதன் இணையதளத்தில், ஒடிசாவின் 24,931 பழங்குடி கிராமங்களில் இவ்வமைப்பு செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள், மாணவர்களுக்கான விடுதிகள், சுகாதார மையங்களை நடத்துவதன் மூலம் பழங்குடி மக்களுக்கு சேவையாற்றுவதாகக் கூறிக்கொண்டு, கிறிஸ்தவ எதிர்ப்பின் மூலம் அம்மக்களிடம் இந்துத்துவ சித்தாந்தத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது. “கர் வாப்சி” என்ற பெயரில் கிறிஸ்தவ பழங்குடி மக்களை இந்து மதத்திற்கு மாற்றும் நடவடிக்கையிலும் இவ்வமைப்பு ஈடுபட்டு வருகிறது. கிறிஸ்தவ மக்கள் மீது பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் குண்டர்களால் நடத்தப்படும் தாக்குதல்களிலும் இவ்வமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது.
மேலும், ஏகல் வித்யாலயா என்ற ஒற்றை ஆசிரியர் பள்ளிகளும் பழங்குடி மக்கள் மத்தியில் இந்துத்துவ சித்தாந்தத்தை விதைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களே இப்பள்ளிகளின் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். பழங்குடி மக்களின் நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களை சிறு வயதில் இருந்தே அவர்கள் மனதிலிருந்து அழித்து, கிறிஸ்தவ வெறுப்பை விதைக்கின்றனர்.
இத்தகைய சங்கப் பரிவார அமைப்புகள் மூலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தனக்கான மக்கள் அடித்தளத்தை விரிவுப்படுத்தி வருகிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதற்கு இத்தகைய வலைப்பின்னல் முக்கியமான காரணமாகும்.
பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பை அறுத்தெறிவோம்!
ஒடிசாவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் மக்கள் மத்தியில் வேர்பரப்பி வளர்ந்து வந்ததற்கு தற்போது எதிர்க்கட்சியாக உள்ள நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்திற்கு முக்கியப் பங்கு உள்ளது. 2000-ஆம் ஆண்டில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துதான், நவீன் பட்நாயக் முதன்முறையாக ஒடிசாவின் முதல்வரானார். அவரது ஆட்சிக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்தன.
பின்னாளில், சிறுபான்மை மக்களின் வாக்குகளை தக்கவைத்துக் கொள்வதற்காக நவீன் பட்நாயக் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டாலும், நவீன் பட்நாயக் மேற்கொண்டுவந்த மிதவாத இந்துத்துவ, கவர்ச்சிவாத அரசியல் பாசிச கும்பலுக்கே சாதகமாக அமைந்தது. சான்றாக, பா.ஜ.க-வின் “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கத்திற்கு எதிராக “ஜெய் பூரி ஜெகன்நாதர்” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்களின் வாக்குகளை கவர விரும்பினார் நவீன் பட்நாயக். ஆனால், அந்த “ஜெகன்நாதரே மோடியின் பக்தர்தான்”, “ஜெகன்நாதர் கோயிலுக்கு ஆபத்து” என்று பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றது பா.ஜ.க. கும்பல்.
இதன் விளைவாக, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்தின் மக்கள் அடித்தளத்தையும் பா.ஜ.க. கும்பல் தனதாக்கிக் கொண்டுள்ளது. தற்போது, ஒடிசாவில் எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகியிருப்பதாக முதலாளித்துவப் பத்திரிகையாளர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாசிச எதிர்ப்பு சித்தாந்தமும் திட்டமுமின்றி பாசிச சக்திகளை எதிர்ப்பதாக எதிர்க்கட்சிகள் சொல்வது ஒரு தற்கொலை பாதை என்பதையே இது உணர்த்துகிறது. ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வால் துடைத்தெறியப்பட்டு வருவதும் இதனையே நிரூபிக்கிறது. மாறாக, பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பான மக்கள் அடித்தளத்தை சரிக்கும் வகையிலான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கி முன்னேற முடியும்.
ஒடிசாவிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தசரா பண்டிகையின் போது கட்டாக்கில் மதக் கலவரத்தை தூண்டிய குண்டர்களுக்கு எதிராக கட்டாக் மக்கள் மதநல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து பேரணி நடத்தியிருக்கின்றனர்.
அதேபோல், ஒடிசாவின் ராயகடா மற்றும் கலாஹண்டி மாவட்டங்களில் உள்ள சிஜிமாலி மலைப் பகுதிகளில் வேதாந்தா நிறுவனம் பாக்சைட் சுரங்கத்தை அமைப்பதற்கு எதிராக அம்மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் 2023-ஆம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு நெஞ்சுரத்துடனும் மலையை விட்டு வெளியேற மறுத்தும் போராடி வருகின்றனர்.
அதேபோல, பர்கர் மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் புனிதமாக கருதும் காந்தமர்தன் மலைகளை சுற்றியுள்ள கிராமங்களில் 45 ஹெக்டேர் நிலத்தை “மகாநதி மைன்ஸ் அண்ட் மினரல்ஸ் லிமிடெட்” எனும் அதானி குழுமத்தின் துணை நிறுவனத்திற்கு தாரைவார்த்ததற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஒடிசாவில் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் ஒடிசா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல்களை தடுக்கிறோம் என்ற பெயரில் டிஜிட்டல் முறைப் பதிவுகளை கட்டாயமாக்கி எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பொது விநியோக அட்டையை நீக்கியிருப்பது; விவசாயிகளிடமிருந்து உணவு தானியக் கொள்முதல் குறைக்கப்படுவது; தங்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அரசு அதிகாரிகள் மீது பா.ஜ.க. குண்டர்கள் வெளிப்படையாக தாக்குதல் நடத்துவது; வேலையின்மை அதிகரித்திருப்பது போன்றவை பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான எதிர்ப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கின்றன.
ஆகவே, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தனித்தனியாக போராடும் மக்களை “பாசிச எதிர்ப்பு” என்ற அடிப்படையில் ஒன்றிணைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகள் போராட வேண்டும். அப்போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலை தடை செய்யும் வகையிலும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்றுக் கட்டமைப்பை நிறுவும் வகையிலும் வளர்த்தெடுக்க வேண்டும்.
அப்போராட்டங்களே சங்கிக் கும்பலுக்கு சம்மட்டி அடி கொடுக்கும்.. ஒடிசா இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலையாக மாற்றப்படுவதை தகர்த்தெறியும்!
![]()
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











