பா.ஜ.க. ஆட்சி செய்யும் ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் ஸ்ரீராம சத்திர பாஞ்ச் என்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் உள்ள “விபத்துகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில்” (Trauma Intensive Care Unit) ஒடிசாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்த அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த மார்ச் 16 அன்று அதிகாலை 2:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தால் நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவந்த 23 நோயாளிகளை வேறு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றும் பணியில் மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால், அவர்களில் 12 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட 11 மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டு 14 பேர் தீக் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்களின் அன்புக்குரியவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் எனக் காத்திருந்த உறவினர்களுக்கு அவர்களின் மரணச் செய்தி பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை தீ விபத்தில் தனது தந்தையைப் பறிகொடுத்த மகன் அமிதாப் தலாய் கூறுகையில், “எனது தந்தை மதுசூதன் தலாய் சுமார் 11 முதல் 12 நாட்களுக்கு முன்பு ஒரு விபத்தில் படுகாயமடைந்தார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவரது உடல்நிலை வேகமாக முன்னேறி வந்தது. ஓரிரு நாட்களில் அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்று மருத்துவர்கள் என்னிடம் கூறியிருந்தனர். ஆனால், அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாலை 3.30 மணியளவில் எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. நான் சம்பவ இடத்தை அடைந்த போது என் தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டார்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு ஒடிசா மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, மக்களின் கோவத்தை மழுங்கடிப்பதற்காக உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து சட்ட ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பான முதல் கட்ட விசாரணையில், குளிரூட்டியில் (AC – Air Conditioner) ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவோ இரண்டு சுவாசக் கருவிகளில் (Ventilator) ஏற்பட்ட தீயின் காரணமாகவோ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இது ஏதோ எதிர்பாராத விபத்து என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. ஆனால், மருத்துவமனைக் கட்டமைப்பின் பாதுகாப்பு அமைப்பின் அப்பட்டமான தோல்வியே 12 உயிர்களை காவு வாங்கியுள்ளது.
குறிப்பாக, தீ விபத்து ஏற்பட்ட இம்மருத்துவமனையில், தீ பிடித்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி (Fire Alarm System) செயலிழந்து போய் பல மாதங்கள் ஆகியிருப்பது; கட்டுப்பாட்டு வால்வு மூடப்பட்டிருந்ததால் தீயை அணைப்பதற்கான தானியங்கி நீர்தெளிப்பான் (Automatic Sprinkler System) செயல்படாமல் போனது; அவசரக் காலங்களில் வெளியேறுவதற்கான கதவுகள் (Emergency Exit) பூட்டி வைக்கப்பட்டிருந்தது; மருத்துவமனை தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்காதது, தீ பற்றி ஒரு மணி நேரத்திற்குப் பிறகே தீயணைப்புத் துறையினர் வந்தது என மருத்துவமனையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பும் செயலிழந்து போயிருக்கிறது.
படிக்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: தொடரும் அரசின் மெத்தனப் போக்கு
மேலும், ஓராண்டுக்கு முன்பு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட தீயணைப்புத் தொடர்பான பாதுகாப்புத் தணிக்கை அறிக்கையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அதனை நடைமுறைப்படுத்தாமல் ஓரங்கட்டி வைத்தது. எனவே, எப்போது வேண்டுமானாலும் தீ விபத்து ஏற்படலாம் என்று தெரிந்தேதான் மருத்துவமனை இயக்கப்பட்டு வந்திருக்கிறது.
மேலும், இம்மருத்துவமனையானது 1944-ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். இம்மருத்துவமனையில் தீ விபத்து மட்டுமல்ல, கட்டடமே இடிந்து விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அரசும் அதிகார வர்க்கமும் மருத்துவமனையைத் தரம் உயர்த்துவதற்கான திட்டத்தை ஓரங்கட்டிவிட்டு, மக்களின் உயிரைப் பற்றி எந்தக் கவலையுமின்றி அலட்சியமாகச் செயல்பட்டு 14 உயிர்களைக் குடித்துள்ளன.
உண்மையில் இது விபத்தல்ல. ஆளும் பா.ஜ.க. அரசும் அதிகார வர்க்கமும் மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து நடத்திய திட்டமிட்டப் படுகொலையாகும்!
ஒடிசாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதும், குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் ராஜஸ்தானில் சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் விபத்துகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு நோயாளிகள் கொல்லப்பட்டனர். 2024-இல் உத்தரப்பிரதேசத்தின் மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 2021-இல் மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயுற்ற பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில் தீ பற்றி 10 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இத்தகைய தீ விபத்துகள் யாவும் அவசர சிகிச்சைப் பிரிவில் மின்கசிவு காரணமாக நடப்பது ஒரு போக்காக உள்ளது. ஆனாலும், மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையில் ஆளும் அரசுகள் ஈடுபடுவதில்லை. தீ விபத்துகள் மட்டுமின்றி, மருத்துவமனைப் பாதுகாப்புக் குறைபாட்டால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தொடர்ச்சியாகக் குழந்தைகளும் மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இந்தியாவின் மருத்துவத்துறையை கார்ப்பரேட்மயமாக்கி அதனை உலகின் மிகப்பெரிய சந்தையாக மாற்றும் திட்டத்துடன் செயல்பட்டுவரும் பா.ஜ.க. கும்பல், தான் ஆளும் மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளைத் திட்டமிட்டே சீரழித்தும் கார்ப்பரேட்டை உள்நுழைத்தும் வருகிறது. மறுபுறம், பா.ஜ.க-வை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாக்கத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் மூலம், “பணம் இருப்பவர்களுக்கே மருத்துவம்” எனும் அநீதி நிலைநாட்டப்பட்டும் அரசு மருத்துவமனைகளில் ஏழைகளின் உயிர் காவு வாங்கப்பட்டும் வருகிறது. இந்த அநீதிக்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்காமல் ஏழை – எளிய மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாது!
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











