த்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு, மக்கள் தொகையை கட்டுப்படுத்த உத்தரப் பிரதேச மக்கள் தொகை (கட்டுப்பாடு, நிலைநிறுத்தல் மற்றும் நலன்) 2021 என்ற பெயரில் வரைவு ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த மசோவின் நோக்கம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த எனக் கூறிக் கொள்கிறது. ஆனால், இத்திட்டத்தைக் கொண்டு வருவதன் உள்ளார்ந்த நோக்கம், முசுலீம்களின் மக்கள் தொகையை மிகைப்படுத்திக் காட்டி மக்களிடம் முசுலீம்களின் மீதான காழ்ப்பை வளர்க்கும் இந்துத்துவ மதவெறியே.

இந்த சட்ட வரைவின்படி, 2 குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறியவர்களுக்கு அரசு சலுகைகள் பறிக்கப்படும். அதன்படி, அரசு வேலை வாய்ப்பு பெற தடை விதிக்கப்படும். மாநில அரசின் நலத் திட்டங்கள் வழங்கப்படமாட்டாது. ரேஷன் பொருட்கள் 4 பேருக்கு மட்டுமே வழங்கப்படும். உள்ளூர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படும்.

படிக்க :
♦ கோயிலை சுற்றியுள்ள முஸ்லிம் வீடுகளை அகற்ற முயற்சிக்கும் யோகி அரசு !
♦ யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !

அரசு பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது. அரசு வேலையில் சேரும்போது இரண்டு குழந்தை இருப்பின் அவர்கள், இந்த கொள்கைக்கு முரணாக செயல்பட மாட்டோம் என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே அரசு பணியில் அல்லது உள்ளாட்சி நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு பொருந்தாது.

2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ளும் தம்பதியினருக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வீடு கட்டவும், வாங்கவும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். மின் கட்டணம், குடிநீர், வீட்டு வரி ஆகியவற்றில் சலுகை அளிக்கப்படும். கூடுதலாக இரு முறை சம்பள உயர்வு, சம்பளத்துடன் கூடிய 12 மாத பேறுகால விடுப்பு ஆகியவை அளிக்கப்படும்.

ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்பவர்களுக்கு கூடுதலாக இலவச சிகிச்சை அளிக்கப்படும். ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் முன்னுரிமை, பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். பெண் குழந்தையாக இருப்பின், உயர்கல்வி கற்க உதவித் தொகை அளிக்கப்படும்.

ஒரு குழந்தை பெற்றபின் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு, ஆண் குழந்தையாக இருப்பின் ரூ.80 ஆயிரமும், பெண் குழந்தையாக இருப்பின் ரூ.1 லட்மும் அளிக்கப்படும் எனவும் புதிய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா குறித்து அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் மத்தியில் கருத்துக் கேட்ட பின் ஜூலை 19-ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஸ்க்ரால் உள்ளிட்ட செய்தி தளங்கள், இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என சர்வாதிகாரத்தனமாக சட்டமியற்றக் கோரும் பா.ஜ.க-வைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உண்மை நிலையை அலசியுள்ளன.

உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களின் வலைத்தளத்தின் தகவல்களின் அடிப்படையில் உத்தரப் பிரதேச எம்.எல்.ஏக்களை பகுப்பாய்வு செய்ததில், அவர்களில் பெரும்பாலானோர் தற்போது இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டுள்ளனர். இதில் மாநில அமைச்சரவையில் உள்ள 23 அமைச்சர்களில் 10 பேரும், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் பாதியும் அடங்குவர்.

ஒட்டுமொத்தமாக, உத்தரப் பிரதேச எம்.எல்.ஏக்களில் 27% பேர் மூன்று குழந்தைகளையும், 32% பேர் இரண்டு குழந்தைகளையும், 9% பேர் ஒரு குழந்தையையும் பெற்றுள்ளனர்.

இந்த சட்ட வரைவு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு பொருந்தாது என்பதால் அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பிரதிநிதிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், இந்த சட்ட வரைவை வடிவமைத்த சட்ட ஆணையமோ, “நிலையான வளர்ச்சியை, சமமான விநியோகத்துடன் மேம்படுத்துவதற்கு மாநிலத்தின் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது, நிலைப்படுத்துவது அவசியம்” என்கிறது.

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அதிகாரம் படைத்த பிரிவினரை விலக்கி, ஏழைகளை குறிவைப்பதற்கென்றே இத்தகை சட்ட வரைவு முன்வைக்கப்பட்டுள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் விமர்சித்துள்ளது. இந்தக் கூற்றின்படியே, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மக்கள் தொகை கட்டுப்பாடு சட்ட வரைவை தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறும் பா.ஜ.க எம்.பி, ரவி கிஷனுக்கு நான்கு குழந்தைகள்.

இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற கட்டாய நடவடிக்கைகள் எதிர் விளைவுகளே உருவாக்கும் எனவும், குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வே இந்தியாவில் தேவை எனவும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். மேலும், எந்தவித திட்டமிடலும் இல்லாமலேயே 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களின் கருவுருதல் விழுக்காடு 2030-ஆம் ஆண்டில் 1.8 விழுக்காடு குறையும் என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

சீனா தனது இரண்டு குழந்தைக் கொள்கையை சமீபத்தில் திருத்திய பின்னர், இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘கட்டாய மக்கள் தொகைக் கொள்கைகளை அமல்படுத்துவதில் சீனாவின் தோல்வியுற்ற அனுபவத்திலிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும். கருவுறுதலில் மதத்திற்கு சிறிதளவே பங்கிருக்கிறது. ஆனால், கல்வி அளிப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் கருத்தடைகளை அணுகுவதற்கு எளிதாக்குவது மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியது.

இந்துத்துவ கும்பல் நீண்ட நாளாக கூறிவரும், ‘முசுலீம் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது; இந்து மக்கள் தொகை குறைகிறது’ என்ற ஆதாரமற்ற சதி கோட்பாட்டின் வெளிப்பாடாகவே உத்தரப் பிரதேச அரசாங்கத்தின் சட்ட வரைவு உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மக்கள் தொகையை சமநிலைப்படுத்த ஒரு பொதுவான சட்டம் தேவை எனக் கூறினார். 2015-ம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ்., மக்கள் தொகைக் கொள்கையைக் கோரும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அனைவருக்கும் இயற்கை வளங்கள் கிடைப்பதைக் கருத்தில் கொண்டு கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் எனக் கூறிய அந்த தீர்மானத்தில் நாட்டில் முசுலீம்கள் அதிகளவு 26 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் கேரள மாநிலத்தில் சமநிலையற்ற தன்மை நிலவுவதாக உதாரணம் கூறியது.

படிக்க :
♦ பாஜகவினர் மீதான முசாஃபர்நகர் கலவர வழக்கை வாபஸ் வாங்க யோகி அரசு முடிவு !
♦ உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு !

ஏற்கனவே உத்தரப் பிரதேசம் இந்துத்துவ ‘கொள்கை’களை செயல்படுத்திப் பார்க்கும் சோதனைச்சாலையாக உள்ள நிலையில், மேலும் ஒரு ‘சோதனை’ முயற்சியாக இந்த மக்கள் தொகை மசோதாவை கையிலெடுத்துள்ளது இந்துத்துவ அரசாங்கம். நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலில் பிரிவினையைத் தூண்ட இதுவே ஆயுதமாகவும் இருக்கலாம்.


கலைமதி
செய்தி ஆதாரம் : Scroll.in, The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க