த்திரப்பிரதேச மாநிலத்தின் கோரக்நாத் கோயிலுக்கு பாதுகாப்பு வழங்க கோயிலைச் சுற்றி போலீஸ் படைகளை நிறுத்த உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கோரக்பூரைச் சுற்றியுள்ள முஸ்லிம் மக்கள் பெருமளவில் தங்கியிருக்கும் குடியிருப்பு வீடுகளை அகற்றும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது உ.பி யோகி அரசு.

இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. இதில் யாரும் வற்புறுத்தப்படவில்லை. அனைத்து குடும்பங்களும் தானாகவே முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்கிறது மாவட்ட நிர்வாக தரப்பு.

படிக்க :
♦ உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??
♦ யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !

ஆனால், யோகி ஆதித்யநாத்தின் இத்தகைய நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகளின் அழுத்தத்தினால்தான் தங்களது வீடு மற்றும் நிலத்தை விற்கும் ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட்டோம். இது குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்கிறார்கள்.

வீடு மற்றும் நிலத்தை கையகப்படுத்துவது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் கூறினாலும், எழுத்துப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன்தான் இது குறித்த விரிவான தகவல்களை கொடுக்க முடியும் என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார்கள். “திடீரென ஒரு நாள் கணக்காளர் மற்றும் மாவட்ட தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் வீட்டுக்குள் நுழைந்து எங்கள் நிலத்தை அளந்தனர். அதன் பிறகு புரிந்துணர்வு ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம்” என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ‘தி வயர்’ இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்கள்.

கோரக்நாத் கோயிலைச் சுற்றியுள்ள வீடுகள்.

ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட்ட குடும்பங்கள் பீதியிலும் துயரத்திலும் பீடிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தங்களது தொலைபேசி அழைப்புகளை எடுக்கக் கூட அஞ்சி அதனை ஆஃப் (Off) செய்துவிட்டார்கள்.

மே 28 அன்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்த கடிதத்தின் நகல் சமூக வலைத்தளத்தில் பரவத் தொடங்கிய போதுதான் இந்த விஷயம் வெளியுலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அந்த கடிதத்தில், “கோரக்நாத் கோயிலுக்கு பாதுகாப்பிற்கு போலீஸ் படையை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப, பழைய கோரக்பூர் தப்பா, கஸ்பா பர்கானா ஹவேலி, தெஹ்ஸில் சதர் ஜன்பாத், கோரக்பூர், கோரக்நாத் கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள எங்கள் நிலங்களையும் வீடுகளையும் அரசுக்கு வழங்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இந்த விஷயம் குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்கள் ஒப்புதல் குறித்த கையொப்பங்களை கீழே காணுங்கள்” என்று குறிபிடப்பட்டிருக்கிறது.

இந்த படிவ ஆவணம் 11 குடும்பத்தைச் சேர்ந்த 19 குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது தொலைபேசி எண்களைக் கொண்டுள்ளது. அந்த படிவத்தின் கடைசி வரிசையில், கையொப்பத்தின்கீழ், எப்போது கையெழுத்திடப்பட்டதோ அன்றைய தேதியும் குறிபிடப்பட்டிருக்கும். ஆனால், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேருடைய கையொப்பங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் இடம்பெறவில்லை. அந்த ஆவணத்தில் எந்த அதிகாரியின் பெயரும் கையொப்பமும் ஏன் முத்திரை உள்ளிட்ட எதுவும் இல்லை.

டெல்லியை சேர்ந்த ‘தி குயிண்ட்’ மற்றும் ‘இந்தியா டுமாரோ’ ஆகிய இணையதளங்கள் இதுகுறித்தான செய்தியினை வெளியிட்டன. ‘இந்தியா டுமாரோ’ இணையதளத்தைச் சேர்ந்த மசிஹுஸ்ஸாமா அன்சாரி, முஸ்லிம் குடியிருப்பை அகற்றும் அறிவிப்பைப் பற்றி மாவட்ட ஆட்சியர் விஜயேந்திர பாண்டியனிடம் கேட்டபோது, அன்சாரிக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்படும் என்று விஜயேந்திர பாண்டியன் மிரட்டல் விடுத்துள்ளார்.

“கோரக்பூரில் கோரக்நாத் கோயிலை ஒட்டியுள்ள முஸ்லிம் குடும்பங்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறுமாறு வழங்கப்பட்ட நோட்டீஸ் குறித்து நான் ஆட்சியரிடம் பேச முயன்றபோது, வதந்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு, என்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் தொடுக்கப்படும் என்று அச்சுறுத்தப்பட்டேன். இதுகுறித்து நான் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகாரும் அளித்துள்ளேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அன்சாரி.

காங்கிரசின் மாநில தலைவர் ஷானவாஸ் அலம், ஊடகவியலாளர் அன்சாரிக்கும் கோரக்பூர் மாவட்ட ஆட்சியருக்கும் இடையிலான உரையாடலின் ஆடியோவை ஜீன் 3 அன்று வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், “கோரக்நாத்தைச் சுற்றியுள்ள முஸ்லிம் குடும்பங்கள் சுமார் 125 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தங்களது நிலத்தைவிட்டு வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து செய்தி தரவுகள் பல உள்ளன.

கோரக்நாத் கோயிலுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகம்

ஆனால், மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் விஜயேந்திர பாண்டியன் ஒப்பந்த கடிதத்தில் கையெழுத்திட மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பதை மறுப்பது மட்டுமல்லாமல், இந்த பிரச்சினை குறித்து விவரங்களைத் திரட்டும் ஊடகவியலாளர்கள் மீது NSA ஏவப்படும் என்று மிரட்டியும் உள்ளார்” என்ற ஷானவாஸ், மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் மற்றும் இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணையின்போது, மே 27 அன்று சதர் தெஹ்ஸில் பகுதியைச் சேர்ந்த கணக்காளர் மற்றும் பிற ஊழியர்கள் போலீசின் துணையோடு, கோரக்நாத் கோயிலின் பிரதான வாயிலுக்கு அருகில் அமைந்துள்ள வீடுகளை அளவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அங்கு குடியிருக்கும் மக்களிடம் பேசியபோது, கோயிலின் பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் போலீஸ் படைகளை அமைக்கப்போவதாகவும் இதற்காக தங்கள் வீடுகள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் பின்னர், ஒரு காகிதத்தில் கையெழுத்திடுமாறு கேட்டார்கள் என்கிறார்கள் உள்ளூர் பகுதி மக்கள். கோயிலுக்கு பின்னால் அமைந்துள்ள மேலும் மூன்று வீடுகளில் வசிப்பவர்களை சந்தித்து அதிகாரிகள் பேசியுள்ளார்கள். ஆனால், அவர்களிடம் கையெழுத்து எதுவும் இதுவரை கேட்கப்படவில்லை.

புரிந்துணர்வு ஒப்பந்தப் படிவம் என்று ஒரு காகிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் 70 வயதான நெசவாளர் முஷீர் அகமது – 150 வருட பழமையான வீட்டில் தனது இரண்டு சகோதரர்களுடன் வாழ்ந்து வருகிறார். (கோரக்நாத் கோயிலைச் சுற்றியுள்ள பல இடங்களில் – நவ்ரங்காபாத், ஜாஹிதாபாத், புராணா கோரக்பூர், ஹுமாயுன்பூர் மற்றும் ரசூல்பூர் பகுதி மக்களின் முக்கிய தொழில் நெசவு. இது மக்கள் தொகையில் சுமார் ஒரு லட்சமாகும். 1990 வரை கோரக்பூரில் 17,000-க்கும் மேற்பட்ட கைத்தறிகள் இருந்தன. ஆனால், இப்போதோ 150-க்கும் கீழே குறைந்து விட்டன)

“மே 27 அன்று அதிகாரிகள் சிலர் போலீசுடன் வந்து எனது வீட்டையும் எனது பக்கத்து வீட்டையும் அளவெடுத்தார்கள். அடுத்தநாள் அதே நபர்கள் வந்து ஒரு காகிதத்தில் கையெழுத்திடுமாறு கேட்டனர். நானும் கையெழுத்திட்டேன். ஆனால், அதன்பிறகுதான் எனது வீடு கையகப்படுத்தப்படும் என்று தெரிந்தது. ” என்கிறார் முஷீர் அகமது.

இந்த வீட்டை தவிர்த்து முஷீர் அகமதுவிற்கு வேறெந்த சொத்தும் நிலமும் கிடையாது. “வீட்டில் நான்கு பழைய நெசவுத்தறி உள்ளது. ஆனால், இதிலிருந்து சம்பாதியம் என்று எதுவும் இல்லை. இவற்றின் மூலம் வருடத்திற்கு ரூ.100 முதல் ரூ.150 வரை மட்டுமே ஈட்டமுடியும். ஒரு மகன் புத்தகக்கடை வைத்துள்ளான். இன்னொருவன் மாவுமில் வைத்துள்ளான். இவர்களை நம்பிதான் எனது குடும்பம் உள்ளது. இந்த வீட்டை தவிர எங்களுக்கு வேறு நிலமோ அல்லது சொத்தோ இல்லை. இந்த வீடு எங்கள் வாழ்வாதாரம். இதை நாங்கள் எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? மீறி இந்த அரசாங்கம் எனது வீட்டை கைப்பற்ற முயற்சித்தால் அது நான் செத்தால் மட்டுமே முடியும்” என்கிறார்.

கோரக்நாத் கோயில் வளாகத்திற்கு பின்னால் ஃப்ரோஸ் அகமது மற்றும் இந்தெசர் உசேன் வீடு உள்ளது. மே 28 அன்று மதிய வேளையில் தெஹ்ஸில் பகுதி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தனது வீட்டிற்கு வந்ததாக கூறுகிறார் ஆசிரியரான உசேன். பாதுகாப்பு நோக்கங்களுக்காக அவரது வீடு கையகப்படுத்தப்படுவதாக அவர்கள் உசேனிடம் கூறி வீட்டை காலி செய்ய சொல்லியுள்ளார்கள். இதற்கு நட்ட ஈடாக அவருக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்கள். இதற்கு உசேன்,  “இதனை எழுத்துப் பூர்வமாக கொடுங்கள், அப்போதுதான் பதிலளிக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.

கோரக்நாத் கோயிலைச் சுற்றியுள்ள வீடுகள்.

மீண்டும் ஜூன் 2 தேதி வந்த அதிகாரிகளிடமும் இதே பதிலை கொடுத்துள்ளார் உசேன். “ஜூன் 2 மாலை 4 மணிக்கு தெஹ்ஸில் சென்று மூத்த அதிகாரிகளை சந்திக்கும்படி என்னிடம் கூறினார்கள். ஆனால், நான் இதுவரை அங்கு செல்லவில்லை. எனது அக்கம் பக்கத்து வீட்டையும் அதிகாரிகள் அளவெடுத்தார்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. எங்களது வீட்டு அருகிலேயே ஒரு மயானம் உள்ளது. அந்த இடமும் கையகப்படுத்தப்படலாம்” என்கிறார் உசேன்.

“கோரக்நாத் கோயிலின் தென்கிழக்கு பக்கத்தில் உள்ள 11 வீடுகள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுகின்றன என்பதை நான் அறிந்ததும், அரசாங்கம் எங்களது நிலத்தையும் வீட்டையும் கைப்பற்ற ஏன் துடிக்கிறது? என்று தெரிந்துகொள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க சென்றேன். ஆனால், சரியான பதில் ஏதும் கிடைக்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெரியாமல் கையெழுத்திட்டவர்கள் இப்போது வீடு பறிபோகும் என்ற வருத்தத்தில் உள்ளனர்” என்கிறார் ஆசிரியரான உசேன்.

“கோயிலைச் சுற்றி பாதுகாப்பு படையை அமைப்பதாக நிர்வாகம் தரப்பில் கூறப்படுகின்ற காரணம். ஆனால், கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் இரண்டு போலீஸ் பூத்துகள் ஏற்கனவே இருக்கின்றன. எனவே, இப்போது அமைக்கப்போவதாக சொல்வது தேவையில்லாத ஒன்று. ஆகையால், எந்த காரணமும் இல்லாமல் நாங்கள் வெளியேற்றப்படுகிறோம்” என்கிறார் 71 வயதான ஜாவேத் அக்தர்.

படிக்க :
♦ உ.பி : ரூ. லட்சம் பிணைத் தொகை கேட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் !
♦ பத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு !

உத்திரப்பிரதேசத்தில் தொடர்ந்து காவி வெறியாட்டத்தை நடத்தி வருகிறது, யோகி ஆதித்யநாத் அரசு. மாட்டுக்கறி பிரச்சினை, தலித் மக்கள் மீதான தாக்குதல், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், கருத்து சுதந்திரம் பறிப்பு, பத்திரிகையாளர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை என உத்திரப்பிரதேசம் முழுவதும் தனது காவி பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கோரக்நாத் கோயிலில் பாதுகாப்பு காரணமாக கோவிலைச் சுற்றி இருக்கும் முஸ்லீம் குடியிருப்புகளை திட்டமிட்டே அகற்றப்பார்க்கிறது ரவுடி யோகி அரசு.

இது உத்தரப் பிரதேசத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல. நாம் அமைதியாக இருந்தால், தமிழகத்திலும் நாளை நடக்கவிருக்கும் நிகழ்வுதான். அங்கு முசுலீம்கள் அகற்றப்பட்டார்கள், இங்கு பார்ப்பனரல்லாதோர் அகற்றப்படலாம். அதில் நாமும் ஒருவராக இருக்கலாம்.


ஷர்மி

செய்தி ஆதாரம்: The wire, The quint

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க