த்தரப் பிரதேசத்தின் ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில், விவசாய சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு 50 லட்சம் பிணைத் தொகை கட்டக் கூறி மாவட்ட நிர்வாகத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் போர்க்குணமிக்க விவசாயிகள் போராட்டத்தை எப்படியெல்லாம் முடக்கமுடியும் என சங்க பரிவாரக் கும்பல் பல்வேறு வழிமுறைகளிலும் முயற்சித்து வருகிறது.

குறிப்பாக பாஜக-வைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை கடுமையாகச் சாடி பல்வேறு அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.

பாஜக-வைச் சேர்ந்த திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளும் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  குஜராத் துணை முதல்வரான பாஜக-வின் நிதின் படேல், இந்த போராட்டத்திற்கு, “தேச விரோத சக்திகள், பயங்கரவாதிகள், காலிஸ்தானிகள், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் சீனாவிற்கு ஆதரவானவர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

படிக்க :
♦ உயர்கல்விக்கான உதவித் தொகையை ரத்து செய்திருக்கும் மோடி அரசு !
♦ மோடியை பகடி செய்து பாடியதால் பிணை கிடையாதாம் || என்.ஐ.ஏ. அடாவடி !

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று மிகப்பெரிய பிரம்மாண்டமான இராமர் கோவில் கட்டப்படவிருப்பதால், எதிர்க்கட்சிகள் ஆத்திரமடைந்திருப்பதாகவும், அதுவும் பிரதமர் வந்து அடிக்கல் நாட்டியதால் அவர்கள் கடும் கோபத்திலிருப்பதாகவும், அதனால் தான் விவசாயிகளுக்கு தவறான வழிகாட்டி அவர்களை போராடத் தூண்டுவதாகவும்  கூறியிருக்கிறார்.

ரவுடிச் சாமியாராக இந்து யுவ வாஹினி எனும் காலிகளின் கூட்டத்திற்கு தலைவராக இருந்து குஜராத் படுகொலை இழிபுகழ் அமித்ஷாவால் முதல்வர் வேட்பாளராக்கப்பட்டு வாழ்வளிக்கப்பட்ட யோகி ஆதித்யநாத் குஜராத்துக்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தை இந்துத்துவத்தின் சோதனைக் களமாக மாற்றி வருகிறார்.

லவ் ஜிகாத் சட்டம், பசுவதைச் சட்டம், ஆட்சியில் அமர்ந்த இரு ஆண்டுகளிலேயே நூற்றுக்கணக்கான போலி என்கவுண்டர் என அராஜக ஆட்சியை நடத்தி வருகிறார்.

மோடி அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டத் திருத்தங்கள் விவசாயிகளுக்கு விரோதமாக இருப்பதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள 400-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை அறிவித்தன.  இதைத் தொடர்ந்து பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பெரும்பான்மையாகவும், பிற மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய சங்கத்தினரும் பல கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள விவசாயிகள் மத்தியில் இந்த வேளாண் சட்டங்கள் குறித்து விவரித்து வருகின்றனர். இதனை உள்ளூர் போலீசை வைத்து மோப்பம் பிடித்த யோகி அரசு, விவசாய சங்கங்கள் விவசாயிகள் மத்தியில் போராட்டத்தை தூண்டாமல் இருக்க அவர்கள் ஏன் ரூ. 50,00,000 கட்டக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

சம்பல் மாவட்டத்தின் மண்டல துணை அதிகாரி பெயரில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ஆறு பேருக்கு இத்தகைய நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு இந்தியா முழுவதும் இருந்து கடுமையான கண்டனக் குரல்கள் எழத் துவங்கியதும், ரூ.50,000 என்பது தவறுதலாக ரூ. 50,00,000 என அனுப்பப்பட்டுள்ளது என்று கூறி மழுப்பியிருக்கிறது மாவட்ட போலீசு.

“அவ்வளவு தொகை எங்களிடம் இருக்காது என்று அவர்களுக்குத் தெரியும். இருப்பினும் எங்களை முடக்குவதற்காகத் தான் அவ்வாறு அவர்கள் கேட்டுள்ளனர்” என்று கூறுகிறார் பாரதிய கிசான் சங்கர்ஷ் (அஸ்லி) அமைப்பின் சம்பல் மாவட்டத் தலைவர் ராஜ்பால் சிங் யாதவ்.

”நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எங்கும் இப்படி ரூ.50,00,000 கேட்டு அவர்களை மிரட்டியதாக் கேள்விப்பட முடியாது. இது துன்புறுத்துவதாகும்” என்கிறார் ராஷ்டிரியர் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ்-ஐச் சேர்ந்த ராஜ்வீர் சிங்.

படிக்க :
♦ உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !
♦ குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !

போராட்டங்களை முடக்க பொருளாதார ரீதியாக போராட்டக்காரர்களை மிரட்டுவது என்பது உத்தரப்பிரதேசத்தில் தற்போது மட்டும் பின்பற்றப்படும் நடைமுறை அல்ல. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு யோகி அரசு சில கோடிகள் வரை அபராதம் விதித்தது  நினைவில் இருக்கலாம்.

போராட்டத்தில் ஈடுபட்ட 57 பேருக்கு ஒன்றரை கோடி வரை அபராதம் கட்டுமாறும், ஒரு மாதத்திற்குள் கட்டத் தவறும் பட்சத்தில் அவர்களது சொத்து பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறியது யோகி அரசு.

இந்து ராஷ்டிரம் என்பது எப்படி இருக்கும் என்பதை யோகி அரசு நடைமுறைப்படுத்திக் காட்டி வருகிறது. இன்று விவசாயிகளை நோக்கித் திரும்பியிருக்கும் ஆயுதம், நாளை நம்மை நோக்கியும் திரும்பும் என்பதில் ஏதேனும் சந்தேகம் உண்டா ?


கர்ணன்
நன்றி :  The Wire , Economic Times

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க