ழை- எளிய – பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் இன மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய மோடி அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்குப் பதிலாக பொதுவான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வியை முடித்த ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மற்றும் தலித் மாணவர்கள் பட்டப் படிப்புகளில் சேர்ந்து உயர்கல்வி படிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டம். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கும் திட்டத்தை மோடி அரசு தடாலடியாக முடக்கவில்லை. படிப்படியாகவே இத்திட்டத்தை முடக்கி வந்துள்ளது. கொடுக்க வேண்டிய நிதியை முறையாகக் கொடுக்காமல் இழுத்தடித்து இத்திட்டத்தை ஏற்கெனவே வழக்கற்றதாக மாற்றியிருக்கிறது மோடி அரசு.   2018-ம் ஆண்டுக்கு முன்பு வரை 60:40 என்ற வகையில் மத்திய அரசு 60% உதவித் தொகையை வழங்கிவந்ததை கடந்த 2018-ம் ஆண்டு முதல் 90 : 10 என மாற்றியமைத்திருக்கிறது மோடி அரசு.  இதனை மீண்டும் 60 : 40 என்பதாக மாற்றியமைக்க சமீபத்தில் தனது எஜமானர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார் எடப்பாடி.

படிக்க :
♦ ஐ.ஐ.டி.-களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய துடிக்கும் மோடி அரசு !
♦ மோடி அரசின் பாசிசத் திமிர் : அடக்கப் போகிறோமா ? அடங்கப் போகிறோமா ?

2015 -16 ஆண்டில் மட்டும், 37 ஆயிரத்து 84 தமிழக SC / ST மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படவில்லை என்று அகில இந்திய தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் இன தேசிய ஆணையம் குற்றம் சுமத்துகிறது. மாநில அரசோ மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று காரணம் காட்டுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து தேசிய ஆணையம் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

2014 -15 ஆண்டில் மாநில அரசுக்கு தர வேண்டிய நிதி 1,175 கோடி ரூபாய் மத்திய அரசு தராமல் நிலுவையில் வைத்துள்ளது. 2017- 18 ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 3347 கோடி ரூபாய் மட்டுமே. மொத்த மாநிலங்களுக்கும் கொடுக்க வேண்டிய நிதியை இவ்வளவு குறைவாக ஒதுக்கீடு செய்தது என்பது, படிப்படியாக இத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்து கட்டிவிடலாம் என்ற உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட சதியாகும்.

கடந்த 2000 ஆண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்தான் கல்வி நிலையங்களின் கதவுகள் சிறிது திறக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக நடத்திய போராட்டத்தின் விளைவாக காலனி ஆட்சி காலத்தில் இந்த கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

சாதி ஆதிக்க அடக்கு முறைகள், இவற்றினூடே பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தலித் மாணவன் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்தவுடன், பட்டப்படிப்புக்காக கல்லூரிகளில் சேர்வதற்கு பொருளாதார வாய்ப்பு வசதிகள் இடம் தராததால் பெரும்பான்மையான தலித் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள்.

கிராமப்புற தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் இன மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்போடு தங்களது கல்வி பயணத்தை நிறுத்தி விடுகிறார்கள். கல்வி கற்பதற்கு, நிலவுகின்ற ஏழ்மை நிலை, அன்றாட வாழ்க்கை போராட்டம் இவற்றின் விளைவாக படிப்பை நிறுத்தி விடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.(Drop out rate in tamilnadu) 2005-2006 – கல்வியாண்டில் 43 விழுக்காடு மாணவர்களும், 40 விழுக்காடு மாணவிகளும் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டனர். மேல்நிலை கல்வியில் 72 சதவிகிதம் மாணவர்களும், 66% மாணவிகளும் கல்லூரிப் படிப்புக்கு செல்ல இயலவில்லை.

போஸ்ட் மெரிட் ஸ்காலர்சிப் திட்டத்தை ரத்து செய்யும் மைய அரசின் இந்த சதித் திட்டத்தால் தலித் மாணவர்களுடைய எதிர்காலம் இருள் சூழ்ந்து விடும். ஏனெனில் பொருளாதாரரீதியில் அடித்தட்டில் இருப்பவர்களும் பெருவாரியாக தலித் சமூக மக்களே. உயர்கல்வி என்பது இனி அவர்களுக்கு எட்டாக் கனியே, சமூக மாற்றத்திற்கான எத்தகைய முன்னெடுப்புகளையும், சமூக சீர்திருத்தங்களையும் அதன் அறிகுறி தென்பட்டாலும் அதை தகர்ப்பது தான் சனாதனக் கும்பல் செய்யவிரும்பும் ‘திருப்பணி’.

அதோடு கல்வியை முழுக்க முழுக்க லாபத்திற்கான சரக்காக மாற்றும் கார்ப்பரேட் சதித்தனத்தின் அங்கமாகவும் இதனை நடைமுறைப்படுத்தியிருக்கிறது மோடி அரசு.

நீண்ட நெடிய போராட்டங்களின் விளைபொருளாய் சமூகநீதிக்கு கிடைத்த சீர்திருத்த சலுகைகளை, படிப்படியாக ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை இந்த கொரோனா சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து முயற்சித்து வருகிறது மோடி அரசு.

இது வெறுமனே தலித் மக்களுடைய பிரச்சினை மட்டுமல்ல, ஆகப் பெரும்பான்மையான மக்களுடைய கல்வி வாய்ப்புகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாகும். நாடெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் இந்த அட்டூழியங்களுக்கு எதிராக களம் காண வேண்டிய தேவை முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது மிகவும் அவசியமாகியிருக்கிறது.

இரணியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க