தனியார் பள்ளி ஆசிரியரின் அவலநிலை

குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பை செலுத்தக்கூடிய பணிநிரந்திரம் பற்றி வாய்திறக்காத ஆசிரியர்களே முதலாளிகளின் தேவையாக இருக்கிறது.

னியார் பள்ளிகள் பற்றிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை நாம் நமது அன்றாட வாழ்க்கையில், செல்லும் திசையெங்கும் பார்த்திருப்போம். “காற்றோட்டமான வகுப்பறை வசதி, குளிரூட்டப்பட்ட அறைகள், உலகத்தரமான கட்டமைப்பு வசதி” என்று ரியல் எஸ்டேட் வியாபாரிகள் போல் தங்களது பள்ளியை அவர்கள் விளம்பரம் செய்வதை நாம் அனைவரும் கண்டிருப்போம்.

ஆனால், இந்த “உலகத்தரமான கவர்ச்சிகளுக்கு” பின்னால் தனியார் பள்ளியின் ஆசிரியர்கள் எப்படி கொத்தடிமை போல் நடத்தப்படுகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் முழுக்கட்டணமும் வசூலித்தது. ஆனால், அந்த பள்ளிகள் தனது ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை அல்லது ஊதியத்தை குறைத்துக்கொடுத்தனர். இதனால் பலர் தங்களது வாழ்நிலையை குறைந்தபட்சமாவது தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு தினக்கூலி வேலைக்கு சென்ற செய்திகளை நாம் ஊரடங்கு காலத்தில் படித்திருப்போம். இப்படி எந்த பணிப்பாதுகாப்பும், வாழ்க்கை பாதுகாப்பும் இல்லாமல் வாழும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பணியிடங்களில் கூட மிகக் கொடுமையாக அடிமையைப் போல் வேலை செய்ய நிர்வாகத்தால் நிர்பந்தக்கப்படுகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

நெல்லை மேலப்பாளையம் ஷரினா பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த கோமதி, நிர்வாகத்தின் துன்புறுத்தல் காரணமாக தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். ஷரினா பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக இருப்பவர் எல்சி. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தையை கவனித்துக்கொள்ள யாருமில்லாததால், பள்ளி தாளாளர் அலுவலகத்திலே ஒரு பெண்ணை ஊதியத்திற்கு பணிக்கு  அமர்த்தி கவனித்து வந்தனர்.

படிக்க : மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: தனியார்மய கல்வியை ஒழிப்பதே தீர்வு!

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜீன் இறுதியில் விளையாட்டு ஆசிரியராக பணியில் சேர்ந்திருக்கிறார் கோமதி. அப்போது சில காலம் பள்ளி நேரத்தில் அந்த குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லி கோமதியை கேட்டிருக்கிறார் தலைமையாசிரியர் எல்சி. உடன் பணி புரிந்த சக ஆசிரியர்கள், “தலைமையாசிரியர் சொல்வதை செய்யுங்கள். இல்லையென்றால் உங்களை வேலை செய்ய விடமாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்கள். வேறுவழியின்றி கோமதியும் பள்ளி நேரத்தில் குழந்தைக்கு துணி மாற்றுவது, சாப்பாடு கொடுப்பது போன்ற வேலைகளை செய்திருக்கிறார்.

“வகுப்பு இல்லாத நேரத்தில் நீங்கள் மைதானத்திற்கு செல்லவேண்டாம். என் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார் தலைமையாசிரியர் எல்சி. முதலில் பள்ளி நேரத்தில் இப்படி வேலை வாங்கப்பட்டார் கோமதி. ஆனால், சில நாட்கள் சென்ற பின்பு குடும்ப சூழ்நிலை காரணமாக கோமதி தனது வீட்டை மாற்றுவது பற்றி பேசிய போது தலைமையாசிரியர் எல்சி, ஒரு வீடு காலியாக இருப்பதாக கூறியிருக்கிறார். கோமதிக்கும் அந்த வீடு அவசரத் தேவையாக இருந்ததால், வீடு மாற்றலாகி வந்துவிட்டார்கள். அதன் பின்பு சில நாட்களில் தலைமையாசிரியர் எல்சியும் கோமதி இருக்கும் வீட்டின் மாடிக்கு குடி பெயர்ந்து வந்துவிட்டார்.

வீடு மாற்றிய பின்பு தலைமையாசிரியர் அடிக்கடி மாடிக்கு அழைத்து கோமதியை வேலை வாங்கியிருக்கிறார். இரவு 8 மணிக்கு கூட குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க அழைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் “என் அம்மா இதய நோயாளி. என் வீட்டு வேலை அனைத்தையும் நான் தான் செய்யவேண்டும். இதில் உங்கள் வீட்டு வேலையையும் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார்” கோமதி.

பள்ளி ஆசிரியர்களை கொத்தடிமையாகவே நினைத்து நடத்தி வந்த தலைமையாசிரியருக்கு, கோமதி சுயமரியாதையாக நடந்து கொண்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் கட்டளையை மீறிய அந்த ஆசிரியரை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேவையான நேரத்தில் விடுமுறை தராமல் இருப்பது, எதையாவது மறந்து வைத்துவிட்டு வந்ததாக சொல்லி கோமதி தனது வீட்டுக்கு அனுப்பி அந்தப் பொருளை எடுத்து வரச் சொல்லி வேலை வாங்குவது, LKG படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் டைரி எழுதச் சொல்வது என நேரடியாகவும் மறைமுகமாகவும் கோமதி பழிவாங்கப்பட்டார். ஒரு கட்டத்தில் கோமதியின் அண்ணனையும் தலைமையாசிரியர் ஒருமையில் திட்டியுள்ளார்.

இது பற்றியெல்லாம் பள்ளி தாளாளரிடம் புகார் சொன்னதால் தலைமையாசிரியருக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. இப்போது கோமதியை LKG-யை தவிர மற்ற எந்த வகுப்பறைக்குள்ளும் நுழைய விடாமல் அவமானம் செய்திருக்கிறார்கள். அவருடன் வேலை செய்யும் மற்ற ஆசிரியைகள் அவரிடம் பேசினால்கூட அவர்களையும் மனதளவிலும் துன்புறுத்தல் செய்திருக்கிறார்கள். பள்ளியில் இருக்கும் ஒரே ஒரு விளையாட்டு ஆசிரியர் கோமதி மட்டும்தான். இருந்தாலும் எல்லா வகுப்புகளும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போதுகூட கோமதி புகைப்படத்தில் நிற்க அனுமதிக்கப்படவில்லை. கோமதியிடம் கரிசனத்துடன் பேசியதற்காகவே கோமதியுடன் பணி புரிந்த சக ஆசிரியை வேலையை விட்டு நீக்க முயிற்சித்து வருகிறார்கள்.

இதை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாத கோமதி, ராஜினாமா கடிதத்தை தாளாளரிடம் கொடுத்துள்ளார். அதற்கு தாளாளர், “எல்லாப் பள்ளிகளிலும் தலைமையாசிரியருக்கு ஒரு லட்சம் ஊதியம் தரப்படுகிறது. இவர் மட்டுமே 30,000 ஊதியத்திற்கு எங்களுக்காக வேலை செய்கிறார். இவரைப் போல் ஒருவரை எங்களால் தேட முடியாது. அதனால் தலைமையாசிரியர் கொடுக்கும் வீட்டு வேலைகளை செய்து அனுசரித்து போனால் தான் இங்கே வேலை செய்ய முடியும். என்னால் தலைமையாசிரியரை இதுபற்றி ஒன்றும் சொல்ல முடியாது” என்றிருக்கிறார்.

இங்கே படிப்பு ஒரு தகுதியாகவே எடுத்துக்கொள்ளப்படுதில்லை. முதலாளித்துவ நிறுவனங்கள் அனைத்தும் லாப நோக்கத்தில் தான் இயங்குகிறது. அங்கே சனநாயக சிந்தனைக்கு இடமேயில்லை. உயர் பதவியில் இருப்பவர்கள் அப்பட்டமான அதிகாரத் திமிருடன் நடந்து கொள்வார்கள். ஊதியத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் அதிக நேரம் வேலை வாங்கி துன்புறுத்தல்கள் செய்வது முதலாளித்துவ நிறுவனங்களில் பொதுவாகவே நடக்கக்கூடியது. ஆனால் தனக்கு கீழ் வேலையும் ஆசிரியர்கள் கொத்தடிமை போல் தனது வீட்டு வேலைகளையும் செய்யவேண்டும் என்பதும் மறுத்து, சுயமரியாதையுடன் நடந்துகொண்டால் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதும் அப்பட்டமான பார்ப்பன திமிர்தனமாகும். ஒருவர் பார்ப்பனராக பிறக்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களை தனக்கு கீழ் என நினைக்கும் அனைத்து வித சிந்தனைகளும் பார்ப்பனியமே.

படிக்க : நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம் | அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு அறிக்கை!

படித்த படிப்புக்கு ஏற்ற கூலி இல்லாமல் அதிகநேரம் வேலை செய்வது மட்டுமன்றி கொத்தடிமை போல் நடத்தப்படுகிறார்கள் தனியார் பள்ளி ஆசிரியர்கள். பொதுவாகவே தனியார் பள்ளி ஆசிரியர்கள் பிற வேலைகளையும் செய்ய நிர்பந்திக்கப் படுகிறார்கள். தனியார் பள்ளி விடுதிகளில் மாணவர்களுக்கு விடுதியில் சாப்பாடு பரிமாறும் வேலையையும் சில ஆசிரியர்கள் செய்து வருகிறார்கள்.

தங்களது பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களை பிடித்து சேர்த்துவிட தெருத் தெருவாக அலைந்து திரியும் ஆசிரியர்களை நாம் பார்த்திருப்போம். கோமதியை போன்று பல ஆசிரியர்களின் நிலை இவ்வாறு இருக்க காரணம் 1990-களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மய கொள்கைகளின் விளைவாக அரசு பள்ளிகள் ஒழித்துக்கட்டப்பட்டு தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தனியார் பள்ளி நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையை நிர்ணயித்து கல்வியை கடை சரக்காக மாற்றி விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

இவ்வாறு கல்வியை கொண்டு கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வரும் தனியார் முதலாளிகள் அங்கு பணிக்கு அமர்த்தப்படும் ஆசிரியர்களையும் லாப நோக்கிலே அனுகுகிறார்கள். குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பை செலுத்தக்கூடிய பணிநிரந்திரம் பற்றி வாய்திறக்காத ஆசிரியர்களே முதலாளிகளின் தேவையாக இருக்கிறது.

ராஜன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க