தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கணியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியின் 12-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக, பள்ளி நிர்வாகிகள் 5 பேர் மக்கள் போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்டனர்.
மாணவியின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று விசாரணை நடந்து வருகிறது. வழக்கறிஞர்கள் அடங்கிய உண்மையறியும் குழு அறிக்கை இந்த மரணம் கொலையாக இருப்பதற்குதான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. வழக்கறிஞர் சங்கர சுப்பு, மாணவியின் முதல் உடல்கூறு ஆய்விற்கும், இரண்டாவது உடல்கூறு ஆய்விற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 26 அன்று 5 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் பெற்ற ஐந்து குற்றவாளிகளில் பள்ளி முதல்வர் சிவசங்கரன், நிருபர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் இருவர் அடங்குவர்.
ஜாமீன் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்வதற்கான அனைத்து ஆதாரங்களையும் ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று சிபி-சிஐடி (குற்றப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை)யிடம் கேட்டது. சக்தி மொட்ரிக் பள்ளியின் குற்றவாளிகளின் ஜாமீன் நிபந்தனைகள் இன்னும் தெளிவாக நீதிமன்றம் கூறவில்லை.
படிக்க : கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!
கடந்த ஜூலை 13 அன்று, பள்ளியின் விடுதி வளாகத்தில் மாணவி இறந்து கிடந்தார். பள்ளியில் சில ஆசிரியர்களால் அவர் “சித்திரவதை செய்யப்பட்டார்” என்று குற்றம் சாட்டும் தடயங்கள் அவரது அறையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியது. ஆனால், மாணவியின் பெற்றோர் அதனை மறுத்து, அவளது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டினர். இறப்பதற்கு முன் ஸ்ரீமதிக்கு ஏற்பட்ட காயங்களை குடும்பத்தினர் சுட்டிக்காட்டினர். மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று குற்றம் சாட்டிய குடும்பத்தினர், கடந்த காலங்களில் பள்ளியில் இதுபோன்ற மாணவர்களின் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறினர்.
மாணவி ஸ்ரீமதியின் மரணம், கள்ளக்குறிச்சியில் கல்வி தனியார்மயத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இது முதலில் அமைதியான போராட்டமாக தொடங்கியது. இருப்பினும் தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் போலீசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகவும், மாணவின் தாயின் நீதிகேட்ட அழுகுரலும் போராட்டம் தீவிரமடைய காரணமாக அமைந்தது. இப்போராட்டம் தொடர்பாக கிட்டத்தட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் சுமார் 20 பேர் சிறார்கள்.
***
கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி, ஸ்ரீமதிக்கு முன்பு பலரை காவு வாங்கி இருக்கிறது என்று மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர். அப்பள்ளியின் இத்தனை ஆண்டுகால தனியார்மய கொள்கையின் விளைவே இந்த போராட்டம் தீவிரமடைய காரணம்.
படிக்க: கள்ளக்குறிச்சி விவகாரம்: போலீசுடன் கூட்டு சேர்ந்து மக்களை வேட்டையாடிய ராஜசேகர்! | வெற்றிவேல்செழியன்
கொலைகார சக்தி தனியார் பள்ளியை விசாரித்து முக்கிய குற்றவாளிகளை தண்டிப்பதற்கு முன்பே, மக்கள் போராட்டத்தின் அழுத்தத்தினால் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்குகிறது நீதிமன்றம். போலீசோ, சிபிசிஐடியோ யாரிடம் வழக்கு சென்றாலும் தனியார் பள்ளி முதலாளி தண்டிக்கப்படப்போவதில்லை. மாணவி ஸ்ரீமதி உள்ளிட்ட இறந்த மாணவர்களுக்கு நீதிகிடைக்கப்போவதும் இல்லை என்பதையே இந்த ஜாமீன் நமக்கு உணர்த்துகிறது.
தனியாமய கல்வியை ஒழிக்காமல் இதுபோன்ற மரணங்களை தடுக்க முடியாது. அந்த வகையில் தனியார்மய கல்விக்கு எதிரான கள்ளிக்குறிச்சி மக்களின் போராட்டம் வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் தனியார் கல்வியை ஒழிக்க, அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்க போராடுவோம்!
காளி