அரசு பயங்கரத்தை ஏவும் தி.மு.க. அரசே!
கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம், கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். இம்மரணத்திற்கு நீதிகேட்டு பெற்றோர்கள், தன்னெழுச்சியாக திரண்ட மாணவர் – இளைஞர்கள் மற்றும் ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டப் போராட்டம் தீவிரமடைந்தது. தனியார் பள்ளி நிர்வாகத்தினை எதிர்த்து தமிழகத்தில் இதுவரை நடைபெறாத மாபெரும் போராட்டம் இது அமைந்தது.
இப்பள்ளிக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டம், அதைத் தொடர்ந்த விவாதங்கள், அரசின் அடக்குமுறை ஆகியவை நம்மிடம் பல கேள்விகளை முன்வைக்கிறது. மரணத்தில் பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும்போதும் போலீசும் அரசு நிர்வாகமும் உரிய நாளில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலவரம் என்று சொல்பர்களின் நோக்கம் என்ன? நீதி கேட்டுப் போராடியவர்களை இந்த அரசு கொடூரமான ஒடுக்குவது ஏன்? என்பது போன்ற இக்கேள்விகளுக்கு விடை காண்பது அவசியமாகிறது.
***
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் – செல்வி ஆகியோரின் மகள் ஸ்ரீமதி. சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், பள்ளி மாடியில் இருந்து குதித்துவிட்டார் என்று கூறப்பட்டது. பள்ளி நிர்வாகத்தால் ஸ்ரீமதி உயிரிழந்ததாகச் சொல்லப்பட்ட நேரமும் மருத்துவமனையில் சொல்லப்பட்ட நேரமும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது; ஸ்ரீமதி உடலில் கீறல்கள், இரத்த கரைகள் இருந்ததையும் கண்ட பெற்றோர், இந்த இறப்பு தற்கொலையால் நடந்தது அல்ல; பள்ளியும் சம்பந்தப்பட்டிருக்கிறது என உறுதியாய் நம்பினர்.
இதுகுறித்து பள்ளி தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால், கோபமுற்ற உறவினர்களும் ஊர் மக்களும் மாணவியின் உடலை வாங்க மறுத்து பள்ளியை முற்றுகையிட்டனர். சிறிதளவில் தொடங்கிய இப்போராட்டம் சமூக வலைதளம் வாயிலாகப் பரவி தீவிரமடைந்தது. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த பள்ளி நிர்வாகம், தற்கொலைக்கு முன்பு ஸ்ரீமதியால் எழுதப்பட்டது என்று கடிதம் ஒன்றை வெளியிட்டது. கடிதத்தில் இருப்பது ஸ்ரீமதியின் கையெழுத்தே இல்லை என ஸ்ரீமதி தாய் செல்வி மறுத்தார்.
படிக்க : கள்ளக்குறிச்சி விவகாரம்: போலீசுடன் கூட்டு சேர்ந்து மக்களை வேட்டையாடிய ராஜசேகர்! | வெற்றிவேல்செழியன்
நான்கு நாட்களாக அரசு, போலீசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டு ஆத்திரமடைந்து தன்னெழுச்சியாக திரண்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினார்; இப்போராட்டம் வன்முறையானது. பள்ளி வளாகத்தில் உள்ள வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கண்ணாடி சன்னல்கள் நொறுக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் போராட்டம் தீவிரமடைந்ததன் பின்னணி என்ன?
முன் திட்டமிடல் இல்லாமல் குறுகிய காலத்திற்குள் இப்படிப்பட்டதொரு போராட்டம் சாத்தியமா? சாத்தியம். பிரச்சினையின் தீவிரம், போராட்டம் நடக்கும் களம் ஆகியவை இத்தகைய சூழலில் பங்காற்றுகிறது.
கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், ஓமலூர், ஊத்தங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டாரம் என்பது தனியார் கல்வி நிலையங்கள் நிறைந்த பகுதியாகும். தமிழகத்தில் உள்ள 14 ஆயிரம் தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட 8,000 பள்ளிகள் இச்சுற்றுவட்டாரத்தில் உள்ளன.
இங்குள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அடக்குமுறைகளும் அதிகம்; கட்டண கொள்ளையால் பெற்றோர்களும் அலைக்கழிக்கப் படுவார்கள்; மாணவர் தற்கொலைகள் அதிகம் நடக்கும் பகுதி. தனியார் பள்ளிகளின் அட்டூழியங்களுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களும் முற்றுகைப் போராட்டங்களும் நடைபெற்ற பகுதி என்று விளக்குகிறார் நக்கீரன் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ்.
சான்றாக, 2007-ல் ஓமலூர் கிறித்துவ தனியார் பள்ளி ஒன்றில் ஸ்ரீமதி மரணத்தைப் போலவே மாணவி ஒருவர் உயிரிழந்தார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மாணவி இறப்புக்கு நீதி கேட்டு பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. 2011-ல் ஊத்தங்கரையில் உள்ள பள்ளி ஒன்றில் நிர்வாக அலட்சியத்தால் மாணவர் ஒருவர் விபத்தில் இறந்தார். இங்கும் பெரியளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஸ்ரீமதி இறப்பு நடந்த இதே கள்ளக்குறிச்சியில், 6 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படைக் கட்டமைப்பு வசதியில்லாத எஸ்.வி.எஸ். மருத்துவ கல்லூரியின் நிர்வாகத்தைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். அதற்கு முன்பும் இக்கல்லூரியில் அடிப்படை வசதிக்காகவும், கட்டண கொள்கைக்கு எதிராகவும் பல போராட்டங்கள் நடந்துள்ளன.
தற்போது ஸ்ரீமதி மரணமடைந்த இந்த பள்ளியும் இதற்கு விலக்கல்ல. சில கால இடைவெளியில் இப்பள்ளியிலும் பல மாணவர்கள் இறந்துள்ளனர். பள்ளி வாகனம் மோதி ஒரு மாணவி உயிரழந்துள்ளார். கட்டிட சுவர், கூரை இடிந்து விழுந்து பல மாணவர்கள் தங்கள் கை, கால்களை இழந்துள்ளனர்.
ஆக, கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், தனியார் பள்ளி நிர்வாகத்தின் அராஜகத்தையும் அட்டூழியத்தையும், மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகளையும், கட்டண கொள்ளையையும் நேரில் உணர்ந்தவர்கள்; தனியார் பள்ளிகளால் தங்களது பிள்ளைகளையும், சகோதர சகோதரிகளையும் இழந்தவர்கள்; நிர்வாகத்தை எதிர்த்தப் போராட்ட அனுபவமும் அவர்களுக்கு உண்டு. இவைதான் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டி தொடங்கப்பட்டப் போராட்டத்தில், குறுகிய காலத்துக்குள் ஆயிரக்காணோரை திரண்டெழச் செய்தது.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் திட்டமிட்ட வன்முறையா?
இங்கும் அதே கேள்விதான்; வேறு தொனியில் கேட்கப்படுகிறது. மாணவர்கள், இளைஞர்களால் மட்டும் இத்தகைய போராட்டத்தை நடத்தியிருக்க முடியுமா? இவர்களுக்கு பின்னே நிச்சயமாக அமைப்புகள் உள்ளன என்கிறார்கள்.
“மாணவி மரணத்தில் பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்டிருப்பதை மூடிமறைக்கதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. இப்படிப்பட்டதொரு கலவரத்தை நடத்தியுள்ளது” என முற்போக்காளர்கள் பலரும் கூறினர். “அமைதியான வழியில் நடந்துகொண்டிருந்தப் போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்துவிட்டார்கள்” என போலீசும் கூறியது.
பள்ளி முன்பு கூடியவர்களுக்கு கலவரம் செய்வது, கொள்ளையடிப்பது மட்டுமே நோக்கமென்றால், போராட்டத்தன்று வீடியோ எடுத்திருக்க மாட்டார்கள்; அப்பள்ளி முதல்வர் அறையில் ஆணுறைகள் கிடந்ததை அம்பலப்படுத்தியிருக்கமாட்டார்கள். சரி, தடயங்களை அழிக்க வந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.காரர்கள் என்றால், இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் வந்து அழித்திருக்கலாமே. பட்டப்பகலில் ஒட்டுமொத்த பள்ளியையே சூறையாடிதான் தடயங்களை இல்லாமல் செய்திருக்கவேண்டுமா என்ன?
மேலும் இப்பள்ளியை வைத்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவ்வித கலவரங்களையும் தூண்டமுடியாத நிலையில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஏன் இவ்வன்முறையை நிகழ்த்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
தனியார் பள்ளி நிர்வாகத்தினை எதிர்த்து தமிழகத்தில் இதுவரை நடைபெறாத மாபெரும் போராட்டம் இது. 2021 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த மிகப்பெரிய போராட்டமும் இதுவே. இப்பட்டதொரு போராட்டத்தினை அரசு கொஞ்சம்கூட எதிர்ப்பார்த்திருக்காது.
அரசின் பாராமுகம் காரணமாகவே போராட்டம் தீவிரமடைந்தது என்பது விவாதப் பொருளானால் தங்களது சமூக நீதி ஆட்சி விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் என்பதால் தி.மு.க ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பவர்கள் “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. திட்டமிட்டு நடந்திய கலவரம்” என்பதை பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
கடந்தாண்டு பெண் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்டு நடத்திய ஃபாக்ஸ்கான் போராட்டத்தையும் தி.மு.க விரோத சக்திகள் பரப்பிய வதந்தி என்று இதே திராவிட மாடல் ஆதரவாளர்கள் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மாணவர்கள், இளைஞர்கள் மீதான ஒடுக்குமுறை ஏன்?
சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையைக் கண்டித்து தனியார் பள்ளிகளை காலவரையறையின்றி மூடப்போவதாக அறிவித்தார் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார். எங்கே தனியார் பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்கள் பரவினால், சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிலைமை மற்ற பள்ளிகளுக்கு வருமோ என்று அஞ்சியதன் வெளிப்பாடாக அது இருந்தது.
படிக்க : உண்மையை சொன்னா கொன்னுருவாங்க – கதரும் கள்ளக்குறிச்சி மக்கள் | மருது வீடியோ
தனியார் பள்ளியின் மீது புகார் வந்திருந்தும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஏனென்றால், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளிலும் தனியார் பள்ளிகளை நடத்தி கொள்ளை லாபம் பார்க்கும் ‘தனியார் பள்ளி முதலாளிகளாக’ உள்ளனர் என்பதே தி.மு.க.வின் மௌனத்திற்கு காரணம். இவர்களின் வர்க்க பாசம்தான் தனியார் பள்ளிகளின் அரணாக இருந்து சேவையாற்றி வருகிறது. ஆக, திராவிட அரசும் தனியார்மயம் தாராளமயத்திற்கு எதிரானதல்ல என்பது நிரூபனமாகிறது.
நீதித்துறை, போலீசுத்துறை உள்ளிட்டவை கள்ளக்குறிச்சியில் நடந்தது திட்டமிட்ட கலவரம் என்கிறது. கலவரத்திற்கு பின்னணியில் இருப்பவர்களை சிறப்புப் படை அமைத்து ஒடுக்கவேண்டும் என்கிறது சென்னை உயர்நீதிமன்றம். தனியார் பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்களைப் பற்றியே இனி யாரும் யோசிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு எந்திரம் செயல்படுகிறது.
போராட்டகளத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் எண்களை வைத்தும் வீடியோவில் தெரியும் நபர்களின் அடையாளங்களை வைத்தும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பலர் ‘பாத்ரூம்மில் வழுக்கி விழுந்துவிட்டார்கள்’’ என்று கூசாமல் பொய் சொல்கிறது போலீசு. மெரினா, பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட மாணவர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசு படையை குவித்துவைத்துள்ளது. வலைதளங்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்களை வலைவீசி தேடி வருகிறது.
தனியார் பள்ளிக்கு அச்சுறுத்தும் இப்படிப்பட்டதொரு போராட்டம் இனி நடைபெறக் கூடாது என்பதே இத்தகைய அவதூறுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் காரணம். ஆனால், எரிவதைப் பிடுங்காமல் கொதிப்பது அடங்காது. தனியார் பள்ளிகள் மாணவர்கள் மீது நடத்தும் ஒடுக்குமுறைகளுக்கு முடிவு எழுதப்படும் வரை, ஒட்டுமொத்த தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் தொடரும்…
ரவி