சாதிவெறி பிடித்த தூத்துக்குடி ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி தாளாளர் மீது நடவடிக்கையெடு

கடந்த 30/11/2023 அன்று மாலை வீட்டிற்கு வந்த நிதிஷ், தாளாளர் விடுதியில் சாதிய கண்ணோட்டத்துடன் தன்னை மாடு மேய்க்குமாறு சொன்னதாகவும், தான் மறுத்ததால் பூட்டிய வகுப்பறையில் தன்னை அடித்ததாகவும், ஓங்கி ஓங்கி முதுகில் குத்தியதாகவும் தாயிடம் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள குருமலை என்கிற சிற்றூரில் இயங்கி வருகிறது ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளியின் தாளாளராக இருப்பவர் பலவேசம் என்கிற செல்வம். இவர் சாதி கண்ணோட்டம் உடையவர்.

இப்பள்ளியில் சுற்றியுள்ள பகுதி வாழ் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் அருகில் உள்ள முடுக்கலான்குளம் கிராமத்தில் வசிக்கும் கணவரை பிரிந்த முத்தம்மாள் என்பவர் விவசாய கூலி வேலை செய்பவர். இவர் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவரது மகன் நிதிஷ்குமார் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். படிப்பிலும் விளையாட்டிலும் முன்னணியாக விளங்கிய நிதிஷ் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

தாளாளர் பலவேசம் (எ) செல்வம் சாதிய கண்ணோட்டத்துடன் தன்னை பள்ளிக்கூடத்திலும், விடுதியிலும் வேலை வாங்குவதாகவும் இதனால் தான் படிக்கப் போகவில்லை என்றும் கூறி விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார் நிதிஷ். தாய் முத்தம்மாள் பள்ளியில் போய் விவரம் கேட்க, அவரை சமாதானப்படுத்தி மீண்டும் நிதிஷ்-ஐ பள்ளிக்கு வரவழைத்துள்ளார் தாளாளர்.


படிக்க: கோவை: பள்ளி மாணவி மீது முஸ்லீம் வெறுப்பு – மதவெறி பிடித்த ஆசிரியர்களை கைதுசெய்!


இதன் பின்னர் மீண்டும் கடந்த 30/11/2023 அன்று மாலை வீட்டிற்கு வந்த நிதிஷ், தாளாளர் விடுதியில் சாதிய கண்ணோட்டத்துடன் தன்னை மாடு மேய்க்குமாறு சொன்னதாகவும், தான் மறுத்ததால் பூட்டிய வகுப்பறையில் தன்னை அடித்ததாகவும், ஓங்கி ஓங்கி முதுகில் குத்தியதாகவும் தாயிடம் கூறியுள்ளார். அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் ரத்த வாந்தி எடுத்த நிதிஷை கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார் முத்தம்மாள். ஒரு வார கால சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில் 8.12.2023 அன்று நிதிஷ் இறந்து போனார். 6 மாத காலம் ஆனபோதும் இதுவரை போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மட்டுமின்றி தனக்கு தெரியாமலேயே வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக கூறுகிறார் முத்தம்மாள். மகனை இழந்த அந்த தாய்க்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை, குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவுமில்லை.

மேலும் இப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் சாகா நடக்கிறதோ என்கிற சந்தேகம் சுற்றியுள்ள மக்களுக்கு இருக்கிறது. இந்த சந்தேகத்தை நிஜமாக்கும் வகையில் நிதிஷ்ன் சான்றிதழ்கள் இந்துத்துவவாதிகளின் பாரத மாதா படத்துடன் கிடைக்கப்பெறுகிறது.

ஏற்கெனவே கள்ளக்குறிச்சி மாணவி சுமதி வழக்கில் இன்னும் நியாயம் கிடைக்காத சூழலில் அடுத்தடுத்து நம் பிள்ளைகளை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது தனியார் பள்ளிகள். இது போன்ற தனியார் பள்ளிகளை அரசே எடுத்து நடத்துவதும், சாதியக் கண்ணோட்டத்துடன் ஈடுபட்டு கொலை பாதகத்திற்கு அஞ்சாத இம்மாதிரியான கயவர்களையும், குற்றவாளிகளுக்கு துணை போகும் போலீஸ் அதிகாரிகளையும் தமிழக அரசு தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் . பட்டியல் சாதி & பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்பு குழுவினர் சார்பாக வருவாய் கோட்டாட்சியரிடம் 27.05.2023 அன்று மனு கொடுக்கப்பட்டது. நிதிஷின் தாய் முத்தம்மாளுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் களப்போராட்டமே நீதிக்காக போராடுபவர்களுக்கு துணையாக அமையும்.


மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க